ராமன் கோயில் நிதி முறைகேடு விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?
காங்கிரஸ் சாடல்
புதுடில்லி ஜூலை 3- அயோத்தி ராமன் கோயில் நன்கொடை களில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பது பாஜகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது என்று காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.
இந்த விவகாரத்தில் உத்தரப்பிரதேச அரசின் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நேர்மையாக நடைபெற வாய்ப்பில்லை என்பதால், உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிபிஅய் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், “நரேந்திர மோடி நாட்டின் பிரதமரானதற்கு ராமன் கோயில் விவகாரமும் ஒரு காரணம். எனவே இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது. தற்போது அங்கு மிகப்பெரிய நன்கொடை திருட்டு நடந்துள்ள போதிலும் பிரதமர் அமைதி காப்பது ஏன்? பாஜகவினர் தங்களின் அரசியல் லாபத்திற்காகக் கடவுளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது” என்று குற்றம் சாட்டினார்.
மேலும் முன்னதாக இம்முறைகேடு தொடர்பாகப் பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்த ஊழல் கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்று கே.சி. வேணுகோபால் குறிப்பிட்டிருந்தார்.
ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ராமன் கோயில் அறக்கட்டளைக்கு எதிராக, மாநில அரசின் கீழ் உள்ள சிறப்பு புலனாய்வுக் குழு நேர்மையான விசாரணையை நடத்த முடியாது என்றும், இதில் முக்கியப் புள்ளிகளைக் காப்பாற்ற முயற்சி நடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். முறைகேடுகளைக் கேள்வி கேட்பவர்களை உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விமர்சிப்பது, குற்றவாளிகளை நியாயப்படுத்துவது போல் உள்ளது என்றும் வேணுகோபால் சாடியுள்ளார்.
இதற்கிடையில், இந்த நிதி முறைகேடு தொடர்பாக அறக்கட்டளையின் முன்னாள் பொதுச் செயலாளர் சம்பத் ராய், முன்னாள் அறங்காவலர் அனில் மிஸ்ரா மற்றும் நிர்வாகி கோபால் ராவ் உள்ளிட்டோருக்கு எதிராக பைசாபாத் வழக்குரைஞர்கள் சங்கம் அயோத்தி காவல்துறையிடம் புதிய புகார் ஒன்றை அளித்துள்ளது. முன்னதாக ஜூன் 25 அன்று இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சம்பத் ராய் மற்றும் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்களின் பதவிகளிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. தற்போது உபி அரசு தனது சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை காலத்தை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்துள்ளது.
‘நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 கட்டாய வசூல்!’
விருதுநகர் விவசாயிகள் புகார்!
சிறீவில்லிபுத்தூர், ஜூலை 3- தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 கட்டாய வசூல் செய்யப்படுவதாக விருதுநகர் மாவட்ட விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
நெல் கொள்முதல்
விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், சிறீவில்லி புத்தூர், வத்திராயிருப்பு, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் ராஜபாளையம், சிறீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி உட்பட மாவட்டம் முழுவதும் 37 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மய்யத்தில் தினமும் ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இங்கு சன்ன ரகம் குவின்டாலுக்கு ரூ.2,545, மோட்டா ரகம் குவின்டாலுக்கு ரூ.2,500-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு வெளிச் சந்தையைவிட அதிக விலை கிடைப்பதால் பெரும்பாலான விவசாயிகள் அரசு கொள்முதல் நிலையத்துக்கு விற்பனை செய்ய வருகின்றனர். கொள்முதல் மையத்தில் 40 கிலோ எடையுள்ள மூட்டைக்கு ரூ.40-அய் விவசாயிகளிடம் இருந்து கறாராக வசூல் செய்து வருகின்றனர். பணம் தர மறுக்கும் விவசாயிகளிடம் நெல்லில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது, கல், மண் உள்ளது எனக் கூறி எடை போடாமல் அலைக்கழிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
வெளிச்சந்தையை விட நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு கிலோவுக்கு 6 ரூபாய் அதிகம் கிடைக்கிறது. அதனால்தான், அனைத்து விவசாயிகளும் அரசு நெல் கொள்முதல் நிலை யத்தை நாடுகின்றனர். இதை பயன்படுத்தி அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து மூட்டைக்கு குறைந்தபட்சம் ரூ.40-இல் இருந்து ரூ.60 வரை கட்டாயமாக வசூல் செய்கின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் முதல்போக சாகுபடியில் ஒரு லட்சம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. ஒரு மூட்டைக்கு ரூ.40 என்றால் ரூ.40 லட்சம் சட்டவிரோதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கணக்கிட்டால் ஒரு பருவத்துக்கு விவசாயிகளிடமிருந்து பல 100 கோடி ரூபாய் சட்டவிரோதமாக வசூல் செய்யப்படுகிறது.
மூட்டைக்கு ரூ.40 கட்டாய வசூல்!
முதலமைச்சர் ஜோசப் விஜய் கடந்த காலங்களில் கொள்முதல் நிலையங்களில் பணம் வசூல் செய்வதை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பிறகும் நெல் மூட்டைக்கு விவசாயிகளிடம் பணம் வசூலிப்பது வேதனையாக உள்ளது. முதலமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக நெல் கொள்முதல் நிலைய பணி யாளர்கள் சிலர் கூறியதாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல்நிலையங்கள் ஒப்பந்த பணியாளர்களைக் கொண்டே இயக்கப்படுகிறது. அவர்களுக்கு நிரந்தர ஊதியமாக இல்லாமல் கொள்முதல் அளவைப் பொறுத்து கமிஷன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. நெல் கொள்முதல் நிலைய நடப்பு செலவுகளுக்காக நிரந்தர முன்வைப்புத் தொகையாக வழங்கப்பட வேண்டிய ரூ.20 ஆயிரம் முறையாக அரசு தரப்பில் தரப்படுவதில்லை. நெல் எடை போடும் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் மூட்டைக்கு ரூ.10 என்ற கூலியும் போது மானதாக இல்லை.
மேலும், நெல் எடை போடும்போது ஏற்படும் இழப்புகள், எடை குறைவு, சேதம் ஆகியவற்றுக்கு பணியாளர்களே பொறுப்பு என்பதால், விவசாயிகளிடமிருந்து மூட்டைக்கு இவ்வளவு என நிர்ணயித்து பணம் வாங்கப்படுகிறது. இதுபோன்ற நடைமுறை சிரமங்களை சரிசெய்ய அரசு முன்வந்தால், விவசாயிகளிடமிருந்து பணம் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படாது. இப்பிரச்சினைக்கு அரசுதான் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
