3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை! குற்றவாளிக்கு விதித்த தூக்குத் தண்டனை உறுதி! உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் உத்தரவு

2 Min Read

மதுரை, ஜூலை 1– நெல்லையில் 3 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கூலித் தொழிலாளிக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்தது.

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை!

நெல்லை மேலப்பாளையம் குறிச்சி அருகே உள்ள அழகிரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் சேகர். கூலித் தொழிலாளி. திருமணமாகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. கடந்த 2023இல் 6, 7 மற்றும் 8 வயதுடைய மூன்று சிறுமிகளை மிரட்டி வீட்டுக்குள் அழைத்துச் சென்று ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல் துறையினர் போக்சோ வழக்கில் ஆனந்த் சேகரை கைது செய்தனர். இந்த வழக்கை நெல்லை நீதிமன்றம் விசாரித்து பிஞ்சுக் குழந்தைகளுக்கு கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்த ஆனந்த் சேகருக்கு மரண தண்டனை விதித்தது. பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளுக்கும் அரசு சார்பில் தலா ரூ.7 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

தூக்குத் தண்டனையை உறுதி செய்யக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்து நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், ராமகிருஷ்ணன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: சமூகத்தின் அளவீடு, பாதிக்கப்படக் கூடிய நிலையில் இருப்பவர்களைப் பாதுகாப்பதில்தான் உள்ளது. இந்த வழக்கைப் பொருத்தவரை குற்றவாளி உடலுக்கு எதிராக மட்டுமல்ல, மூன்று குழந்தைகளுக்கு எதிராகத் திட்டமிட்டு வன்முறையை நிகழ்த்தியுள்ளார். கொலை செய்து விடுவதாக மிரட்டி, இந்தக் கொடூரத்தைச் செய்துள்ளார். இதுபோன்ற குற்றத்துக்கு இரக்கம் காட்டுவது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.

குழந்தைகளின் உணர்வுகளை மலிவாகக் கருதி, குற்றவாளி சிறையில் மீதிக் காலத்தை கழிப்பதை இந்த நீதிமன்றம் விரும்பவில்லை. குழந்தைகளைப் பாதுகாப்பதில் சட்டம் முதுகெலும்பாகவே செயல்படும். இந்த உத்தரவு ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது நீதி வழங்கும் மற்றும் சமூகத்தின் ஒழுக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சியாகும்.

எனவே, இந்த வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. நீதிமன்றப் பதிவாளர் உத்தரவு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களிலிருந்தும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளத்தை மறைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

 

அமோனியா வாயுக் கசிவுக்கு

உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு!

சென்னை, ஜூலை 1- திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 17 ஆக அதிகரித்துள்ளது.

இந்த கோர விபத்தில் படுகாயமடைந்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சனா ஜுவாங்கா (25) என்ற பெண் தொழிலாளி, நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாகஉயிரிழந்தார்.

திருவள்ளூர் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் வாயு கசிவு காரணமாகப் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மரண எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *