நெருக்கடி காலகட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின்
இன்றைய ஒப்பற்றத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை கைது செய்து
சிறைக் கொட்டடியில் ரத்தக் காயத்தோடு இருட்டில் தள்ளினார்கள்!
அன்றைக்கு அவரைத் தாங்கிப் பிடித்த கைகள், என்றைக்கும் தாங்கிப் பிடிக்கும்!
சின்னாளப்பட்டி, ஜூன் 29 நெருக்கடி காலகட்டத்தில், 1976, ஜனவரி மாதம், நான் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு, சிறைக் கொட்டடியில் இருந்தோம். நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் இன்றைய ஒப்பற்றத் தலைவர், என்னுடைய அருமைச் சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் திருமணம் ஆகி ஒரு மாதம்தான் ஆகியிருந்தது. அவரையும் கைது செய்து, சிறைச்சாலைக்குக் கொண்டு வரும்போது இரவு நேரம், இருட்டில் அவரைப் பிடித்து உள்ளே தள்ளுகிறார்கள். ரத்தக் காயத்தோடு மேலே வந்து விழுந்தபோது, ‘‘யார் என்று கேட்டவுடன்’’, ‘‘அண்ணே, நான் ஸ்டாலின்’’ என்றார். அப்போது தாங்கிப் பிடித்த கைகள்தான். அன்றைக்கு அவரைத் தாங்கிப் பிடித்த கைகள், என்றைக்கும் தாங்கிப் பிடிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சின்னாளப்பட்டி: எதிர்நீச்சலில் வென்ற
பெரியார் 80 ஆவது ஆண்டு விழா – மாநாடு
கடந்த 26.6.2026 அன்று மாலை 5 மணியளவில், சின்னாளப்பட்டியில் உள்ள காந்தி மைதானத்தில், சுயமரியாதைச் சுடரொளிகள் இராமையா, போளி, சண்முகம் நினைவு அரங்கத்தில் நடைபெற்ற ‘‘எதிர் நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆவது ஆண்டு விழா – திறந்தவெளி மாநாட்டில்’’, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
‘குடிஅரசு’ தான் இன்றைக்குப்
பல பேருக்கு ஆவணம்
இதைப் பற்றி உங்களுக்குச் சொன்னார்கள். ‘குடிஅரசில்’ வந்திருக்கிற செய்திகள் இருக்கிறது. ஏன் இந்தக் கூட்டம் – மாநாடு என்று சொல்லக்கூடிய அந்த வாய்ப்பை பெற்றிருக்கிறோம் என்று சொன்னால் நண்பர்களே, இங்கே பாருங்கள், இது எப்போது வந்தது? 19.1.1946 ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ பத்திரிகை. ‘குடிஅரசு’ தான் இன்றைக்குப் பல பேருக்கு ஆவணம். அந்த ஆவணத்தில் தந்தை பெரியார் எழுதுகிறார். மதுரை ஜில்லா சுற்றுப்பயணத்தில் என்ன நடந்தது? என்று சொல்லும்போது, ஒரு துணைத் தலையங்கம்.
‘‘சின்னாளப்பட்டி குழப்பம்!’’
‘‘மதுரை ஜில்லா சுற்றுப்பிரயாணத்தில் சரியான காலித்தனம் நடந்தது இதுவரை நடந்திராதது என்றே சொல்லலாம். இது புதுச்சேரி கலவரத்தை வென்று விட்டது. காரணம் புதுச்சேரி போலவே உள்ளூர் தகராறு என்று சொல்லப்பட்டது. ஆனாலும் இது மிகவும் அக்கிரமமாகும். சப்–இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர்கள் ஓடி ஒளிய வேண்டி ஏற்பட்டுவிட்டது. சப்–இன்ஸ்பெக்டர் உண்மையைச் சொல்லிவிட்டார், “காலித்தனத்தைத் தன்னால் சமாளிக்க முடியவில்லை” என்று. பிறகு அவரே ஒலி பெருக்கியில் மக்களை கூப்பிட்டு எங்களால் சமாளிக்க முடியவில்லை, நீங்கள் ஓடிப்போய் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்.
இம்மாதிரி ஒரு கட்சியார் காங்கிரசார், காந்தி பெயரைச் சொல்லிக்கொண்டு இவ்வளவு காலித்தனம் செய்தும், இவர்களைச் சட்னி செய்துவிடக்கூடிய மற்றக் கட்சியார் அங்கு கல் அடி வாங்கிக் கொண்டு சிரித்தவண்ணம் இருந்தார்கள். இதற்குக் காரணம் பெரியார் கட்டளையேயாகும். காங்கிரஸ்காரர்கள் என்பவர்கள் பேசிய ஆபாச வசவுப் பேச்சுக்கள் பெண்கள் (சுமார் 600 பெண்கள் வந்திருந்தார்கள்) காதை அடைத்துக் கொண்டார்கள். சுமார் 6, 7 பேருக்குத் தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வந்தது. பெரியார் யார் இழுத்தும் அந்த இடம் விட்டுப் பெயராமல் தலையில் துணி கட்டிக் கொண்டு கல்மாரிக்கு நடுவில் நின்று கொண்டு இருந்தார். சப்–இன்ஸ்பெக்டர் பெரியாரை வணங்கிக் கெஞ்சி மேடையை விட்டு இறக்கி சமீபத்தில் ஒரு தாழ்வாரத்தில் நிறுத்தி இரவு வண்டி முதலிய உதவி செய்து வழியனுப்பிக் கொடுத்தார்.
பொதுவாகக் காங்கிரசார் வெறி கொண்ட காலிகளாக நடந்து கொண்டார்கள். மற்றவர்கள் சிரித்தவண்ணம் இருந்தார்கள்; இது உண்மை; மற்றது சர்க்கார் ரிப்போர்ட்டில் இருக்கலாம். ஆனாலும் அங்கு மறுபடி கூட்டம் நடக்கும் என்று தெரிகிறது. என்ன ஆகுமோ! ’’
‘குடிஅரசு’ –
துணைத்தலையங்கம் – 19.01.1946
‘‘சின்னாளப்பட்டி பொதுக்கூட்டம்’’
அதிலேயே ஒரு செய்தி ‘‘சின்னாளப்பட்டி பொதுக்கூட்டம்’’ என்ற தலைப்பில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
80 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது இந்த ஊரில்? எப்படி இந்த இயக்கம் செழித்து வந்தது? என்பதற்கு அடையாளம் இந்தச் செய்தியைப் பாருங்கள்.
‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆவது ஆண்டு’’ என்ற தலைப்புக் கொடுத்திருக்கி றார்களே என்று நீங்கள் எல்லாம் நினைக்கலாம். இந்தச் செய்தியைப் படிக்கிறேன், கேளுங்கள்.
‘‘16.1.1946 மாலை 4 மணிக்குத் தனிக் காரில் பெரியாரவர்களும் மற்றும் பலரும் சின்னாளப்பட்டி வந்து சேர்ந்தனர். உடனே ஒரு மாபெரும் ஊர்வலம் புறப்பட்டு முக்கிய தெருக்களின் வழியாகச் சென்றது. வழி நெடுக மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன. 4.30 மணிக்குக் கூட்டம் ஆரம்பமாகியது. ஒலிபெருக்கி அமைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் அமைதியுடன் உட்கார்ந்து, பெரியாரவர்களின் உணர்ச்சிமிக்க சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தனர். இவ்வுணர்ச்சியைக் கண்ட காங்கிரஸ்காலிகள் தூரத்தில் நின்று கூச்சலிட்டுக் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்.
ஒலிபெருக்கி நன்றாக இருந்ததால் பெரியார் அவர்கள் கூச்சலை லட்சியம் செய்யாமல், மிக உணர்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தார். பெரியார் விடாமல் பேசுவதையும், மக்கள் கேட்டுக் கொண்டிருப்பதையும் கண்ட காலிகளுக்கு, மிகவும் அவமானம் உண்டாகவே எப்படியேனும் காலித்தனம் செய்ய வேண்டுமென்று கருதி கற்களை வீசினர். உடனே பெரியாரவர்கள், சால்வையை எடுத்துத் தலையில் கட்டிக்கொண்டு “எல்லோரும் தலையில் துண்டைக்கட்டிக் கொள்ளுங்கள் ஒருவரும் கலையவேண்டாம்” என்று கூறி மீண்டும் பேசிக்கொண்டே இருந்தார். இதைக் கண்ட காலிகள் மிகவும் அதிகமாகக் கூச்சலிட்டுக் கற்களை மாரிபோல் வீசினர். உடனே அங்கு வந்திருந்த போலீசார் தடியடிப் பிரயோகம் செய்தனர். உடனே கூட்டம் கலைய ஆரம்பித்தது. அவ்வூரில் போலீஸ் இல்லாததால், வெளியூரிலிருந்து இங்கு ஒன்றும் கலவரம் நடக்காதென்று கருதி இரண்டு போலீஸ்களும், ஒரு சப்- இன்ஸ்பெக்டரும் வந்திருந்தனர். கலவரம் அதிகமாகவே சப் –இன்ஸ்பெக்டர் பெரியாரிடம், ‘‘கூட்டத்தைக் கலையுங்கள்’’ என்று சொன்னார்.
உடனே பெரியார், நீங்கள் “என்னால் சமாளிக்க முடியவில்லை, கலைத்து விடுங்கள்” என்று எழுதிக் கொடுங்கள், என்று சொல்லிவிட்டு மீண்டும் பேச ஆரம்பித்தார். பின்பு சப்– இன்ஸ்பெக்டர், நாளையோ மறுநாளோ வேண்டுமானால் நான் பாதுகாப்போடு உங்கள் கூட்டத்தை நடத்தித் தருகிறேன் என்று கூறிவிட்டு, அவரே ஒலிபெருக்கி முன்னால் நின்று, ‘‘காலிகள் கலகம் செய்வதாலும், நான் போதிய பந்தோபஸ்துடன் வராததாலும், இக்கூட்டத்தைக் கலைக்கிறேன்’’ என்று கூறினார். பின்பு உள்ளூர்த் தோழர்களும் பெரியாரை வேண்டிக்கொள்ள, பெரியார் கூட்டத்தை முடித்தார்.
இவ்வளவு கலவரம் நடந்தும் பெரியாரவர்கள் ஒரு மணி நேரம் பேசினார். திராவிடர் கழகத்தின் சார்பிலும், முஸ்லிம் லீக்கின் சார்பிலும், சித்தை யன்கோட்டை திராவிடர் கழகத்தின் சார்பிலும் வாழ்த்து இதழ்களும், மலர் மாலைகளும் அணிவிக்கப்பட்டன. அன்று இரவே பெரியார வர்கள் திண்டுக்கல் வந்து, சென்னை செல்ல புறப்பட்டு, ஈரோடு வந்து சேர்ந்தார்.’’
சின்னாளப்பட்டி பெரியாருக்குத்
தத்து கொடுத்த ஊராக அமைந்தது
இதுதான் பழைய செய்தி. இப்படி இருந்த ஊர் இது. ஆனால், 80 ஆண்டுகளுக்குப் பிறகு, எத்தனை பேர் இந்த இயக்கத்தினால் படித்திருக்கிறார்கள்; அய்.ஏ.எஸ். படிப்புவரை படித்து வந்திருக்கிறார்கள். இந்த ஊரே, பெரியாருக்குத் தத்து கொடுத்த ஊராக அமைந்தது.
இவ்வூர் தோழர்கள் வெளியூர்களுக்குச் சென்றாலும், இந்தக் இயக்கக் கொள்கைகளை அந்த ஊர்களில் பரவக்கூடிய வகையில் செய்தார்கள் என்றால், அது அவர்களுக்காக அல்ல; மக்களுக்காக!
இதுபோன்றுதான் எதிர்நீச்சல் அடித்து வளர்ந்த இயக்கம். இந்த இயக்கத்தை யாராலும் அழித்துவிட முடியாது. தேர்தல் தோல்வியால் துவளக்கூடிய இயக்கமல்ல, இவ்வியக்கம். தலைமுறை தலை முறையாகக் காப்பாற்றப்பட வேண்டிய இயக்கம்தான் திராவிட சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
அன்றைக்கும் எதிர்நீச்சல்தான்; இன்றைக்கும் எதிர்நீச்சல் அடிக்கின்ற இயக்கங்கள்தான் திராவிட இயக்கங்கள்.
அப்போது தாங்கிப் பிடித்த
கைகள்தான் இந்தக் கைகள்!
நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் இன்றைய ஒப்பற்றத் தலைவர், என்னுடைய அருமைச் சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் திருமணம் ஆகி ஒரு மாதம்தான் ஆகியிருந்தது. நெருக்கடி காலகட்டத்தில், அவரைக் கைது செய்து சிறைக் கொட்டடியில் தள்ளுகிறார்கள், 1976, ஜனவரி மாதம். நான் உள்பட 8 பேர் அந்தக் கொட்டடியில் இருந்தோம். இரவு நேரம், இருட்டில் அவரைப் பிடித்து உள்ளே தள்ளுகிறார்கள். ரத்தக் காயத்தோடு மேலே வந்து விழுந்தபோது, ‘‘யார் என்று கேட்டவுடன்’’, ‘‘அண்ணே, நான் ஸ்டாலின்’’ என்றார்.
அப்போது தாங்கிப் பிடித்த கைகள்தான். அவர் அன்றைக்கு இளைஞர், நாங்கள் எல்லோரும் முதிய வர்கள். எங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் வேறு; ஆனால், அவருக்கு அதுதான் புது அனுபவம். அன்றைக்கு அவரைத் தாங்கிப் பிடித்த கைகள், என்றைக்கும் தாங்கிப் பிடிக்கும். அதுதான் மிக முக்கியமானது, அதனை மறந்துவிடாதீர்கள்.
(தொடரும்)
