சென்னை, ஜூன் 29- அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5 புதிய டிப்ளமா படிப்புகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. தமிழ்நாட்டில் 55 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், 32 அரசு உதவிபெறும் பாலிடெக்னிக்குகளும், 400-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளும் உள்ளன.
இவற்றில் 25 விதமான டிப்ளமா படிப்புகள் வழங்கப்படுகின்றன. பாலிடெக்னிக் கல்லூரிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், தற்போதைய வேலைவாய்ப்புச் சூழலை கருத்தில் கொண்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பேக்கேஜிங் டெக்னாலஜி, பெட்ரோகெமிக்கல் இன்ஜினியரிங், ஃபுட்வேர் டெக்னாலஜி, லெதர் மற்றும் ஃபேஷன் டெக்னாலஜி, ஃபேஷன் மற்றும் குளோத்திங் டெக்னாலஜி ஆகிய 5 புதிய டிப்ளமா படிப்புகளை அறிமுகப்படுத்த தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் முடிவுசெய்துள்ளது.
அவற்றுக்கான வரைவு பாடத்திட்டம் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணைய தளத்தில் (https://dte.tn.gov.in/) வெளியிடப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான கருத்துகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஜூன் 30ஆம் தேதி வரை அனுப்பலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் கூறியுள்ளார்.
காவல் துறையினரைத் தாக்கிய ரவுடி
துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு
தலைமைக் காவலருக்கு வெட்டு
வண்டலூர், ஜூன் 29- வண்டலூர் ஓட்டேரி காவல் நிலையத்தின் ஏ+ சரித்திரப் பதிவேடு குற்றவாளி செல்வ குமார் (33), கிளாம்பாக்கம் காவல் நிலைய ஏ+ சரித்திரப் பதிவேடு குற்றவாளி கனகராஜ் (33) ஆகியோர், கூட்டாளியுடன் படப்பை அருகே கரசங்கால் துண்டல் கழனி பகுதியில் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஓட்டேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் அதிகாலை அங்கு சென்று சுற்றிவளைத்தனர். அப்போது ரவுடிகள் அரிவாளுடன் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதில், தலைமைக் காவலர் ஆனந்தன் (45) காயமடைந்தார். தற்காப்பு நடவடிக்கையாக உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் துப்பாக்கியால் சுட்டதில், செல்வகுமாரின் வலது காலில் குண்டு பாய்ந்தது.
காயமடைந்த செல்வகுமாரை தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்த கனகராஜை காவல் துறையினர் கைது செய்து அங்கிருந்த 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையில், இந்த வழக்கில் தொடர்புடைய அகஸ்டின் என்பவர் தப்பியோடிய நிலையில், அவரைத் தேடி வருகின்றனர். கஞ்சா வழக்கு, ஆயுதங்களுடன் பதுங்கியது, காவல் துறையினரை தாக்க முயன்றது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
