இன்றைக்குத் தனி வீடுகள் தொடங்கி, அடுக்குமாடிக் குடியிருப்புகள் வரை நாம் பார்த்து வருகிறோம். ஆனால் 100, 200 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட வீடுகளை நீங்கள் கண்டதுண்டா? ஆங்கிலேயர்கள் ஆண்ட போது, நிர்வாக ரீதியான பல கட்டடங்களைக் கட்டினார்கள். இப்போதும் அவை உள்ளன. அதையும் விட நுட்பமான வீடுகள் காரைக்குடி, பள்ளத்தூர், கானாடுகாத்தான், கோட்டையூர், தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன. “செட்டிநாடு” என்பதும், “நகரத்தார்” பகுதிகள் என்பதும் சற்றொப்ப 50 க்கும் மேற்பட்ட ஊர்கள் அடங்கியதாகும்.
நவீன தொழில் நுட்பத்தில் கட்டப்படும் இப்போதுள்ள வீடுகளுக்கு, அதிகபட்சம் 40 ஆண்டுகள் உத்தரவாதம் தருகிறார்கள். ஆனால் கம்பி, சிமெண்ட் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கும் முன்பே உருவாக்கப்பட்ட வீடுகள் நூற்றாண்டைக் கடந்து நிற்கின்றன. இதில் எது சரி என்பதைவிட, அந்தந்தக் காலத்திற்கேற்ற அறிவையும், அறிவியலையும் பயன்படுத்துவதே சிறந்ததாக இருக்கும்! அதேநேரம் பழைய செய்திகளைத் தெரிந்துக் கொள்வது இளம் தலைமுறைக்கு முக்கியமான ஒன்று.
அந்த வகையில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் கட்டடக்கலைத் துறையின் (Architecture Department) இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 70 பேர், பேராசிரியர்கள் தலைமையில் 27.04.2026 அன்று பழமையான வீடுகளைக் காண காரைக்குடிப் பகுதிக்கு வந்திருந்தனர். இவை ஒவ்வோர் ஆண்டும் வழமையாய் நடப்பதுதான்! எனினும் இப்போதுள்ள பிரச்சினை என்னவென்றால், அந்த வீடுகளைப் பார்ப்பதில் நடைமுறைச் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
காரணம் ஒவ்வொரு வீடும் குறைந்தது 30 ஆயிரம் சதுரடிக்கு மேல் இருக்கும். ஏக்கர் கணக்கில் சொல்வதென்றால் சில வீடுகள் இரண்டு ஏக்கர் அளவில் கூட இருக்கும். பெரும்பாலான வீடுகள் முன் பக்கச் சாலையில் தொடங்கி, பின்பக்கச் சாலையில் முடியும். முன்பக்கத்தில் 10 படிகளுக்கு மேல் இருக்கும். மழை வெள்ளத்தில் பாதிப்பு வரக்கூடாது என அஸ்திவாரத்தை 10 அடி உயரம் வரை கூட உயர்த்தியிருப்பார்கள். வீட்டின் ஒவ்வொரு பகுதியுமே பிரமாண்டம் என்கிற அளவிலே இருக்கும்.

வீட்டில் நுழைந்தவுடன் உள்ள பகுதியை இப்போது “சிட்-அவுட்” (Sit-out) என்று அழைக்கிறோம். அதாவது பெரிய முக்கியத்துவம் இல்லாத நபர்கள் வந்தால் அமர்ந்து பேசக்கூடிய இடம். இதை வராண்டா, போர்டிகோ
(Verandah, Portico) என்றும் இப்போது சொல்வார்கள். அந்தக் காலத்தில் இதைத் “திண்ணை” என்று அழைப்பார்கள். இந்தப் பகுதியில் மட்டுமே 200 பேர் வரை அமரும் வகையில் கட்டியிருப்பார்கள். திருமணம் போன்ற நிகழ்வுகளின் போது “ஜமுக்காளம்” விரித்து தரையில் அமர்ந்து கொள்வார்கள்.
அதனையடுத்து இதேபோன்ற ஒரே பகுதி சற்று பெரியதாக இருக்கும். இத்தாலியில் இருந்து வரவழைக்கப்பட்ட பளிங்குத் தூண்களும், தரைக் கற்களும் வீட்டையே அழகுறச் செய்யும். மர வேலைப்பாடுகள் அனைத்தும், பர்மாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தேக்கு மரத்தால் செய்திருப்பார்கள். ஒவ்வொரு கதவும் ஒரு தனி மனிதரால் திறக்க முடியாத அளவிற்குக் கனமாக இருக்கும். அதன் சித்திர வேலைப்பாடுகள் நம்மைப் பிரமிக்க வைக்கும். “எப்படித்தான் செய்திருப்பார்களோ?” என வியப்பின் உச்சிக்கு அழைத்துச் செல்லும்.

அதற்கடுத்த பகுதி மிக முக்கியமானது. அதாவது நான்கு பக்கமும் நடைபாதை வைத்து, நடுவில் திறந்த வெளியாக இருக்கும். இதைச் “சுத்துப்பத்தி”, “முற்றம்” (Courtyard) என்று அழைப்பார்கள். நடுவில் நின்றால் வானம் தெரியும். வீடு முழுக்க நல்ல வெளிச்சம் கிடைக்கும். வீட்டிற்குள்ளேயே மழை பெய்யும் அற்புதமான காட்சியைக் காணலாம். அந்த மழை நீர் வெளியேறி, அருகிலுள்ள குளங்களில் சேர்வதைக் கண்டும் மகிழலாம். வெயில் காலத்தில் உணவுப் பொருட்களைக் காய வைக்கும் பகுதியாகவும் இது இருக்கும்.
வீட்டிற்கு மேலே இருப்பதைப் போன்று, வீட்டிற்கு உள்ளேயே உருவாக்கப்பட்ட ஒரு வகை மொட்டை மாடிதான் இது! திருமணங்கள் நடத்தும் இடமாகவும் இதைப் பயன்படுத்துவார்கள். காற்றோட்டம், வெளிச்சம் என அத்தனைச் சிறப்புகளையும் இந்த இடத்தில் பார்க்கலாம். அதேபோல இந்தச் சுற்றுப்புறங்களில் அறைகள் கட்டப்பட்டிருக்கும். ஒரு நீளத்திற்கு 5, 6 அறைகள் என்றால் இரண்டு பக்கமும் மொத்தமும் 10 க்கும் மேற்பட்ட அறைகள் இருக்கும். சில அறைகளுக்குள் சென்றால், அதனுள் மற்றொரு அறை இருக்கும். வசதி மற்றும், பாதுகாப்பு கருதி கட்டப்பட்ட நுட்பமான வீடுகள் இவை.
அதனைத் தொடர்ந்து நீண்ட பரப்பளவு கொண்ட ஒரு தளம். அங்கும் ஒரு நூறு பேர் வரை அமரலாம். அதன் பிறகு சமையல் கூடம், அதையொட்டிய பிரமாண்ட வெளிப்புறங்கள். மொத்ததில் 1000 பேர் வரை கூட விழாக் காலங்களில் ஒன்று கூடலாம். இதுதவிர மாடிப் பகுதிகள். மாடிக்குச் சென்றால், அங்கிருந்து மீண்டும் நான்கைந்து படிகள் ஏறி, அதன்மேல் வேறொரு தளத்திற்குச் செல்வதைப் போன்ற அமைப்பு இருக்கும். இதை இப்போது “Level Plan” என்று அழைப்பார்கள்.
ஆக இவ்வளவு பிரமாண்டம் கொண்ட வீடுகள் எதற்காகக் கட்டப்பட்டன? கூட்டுக் குடும்பமாக இருந்த அந்தக் காலத்தில் அத்தனைப் பிள்ளைகளும் ஒரே வீட்டில் வசிக்கும் பொருட்டு கட்டப்பட்டன. ஆக இந்த ஒரு வீடு 10 நபர்களுக்குக் கூட சொந்தமாக இருக்கும். இன்றைய காலத்தில் பொருளியல் சார்ந்து அனைவருமே வெளியூரில் வசிப்பதால், திருமணம் போன்ற விழாக் காலங்களில் மட்டுமே ஊருக்கு வருவார்கள். அப்போது தங்களுக்குச் சொந்தமான அறையைப் பயன்படுத்துவார்கள். மற்ற பகுதிகள் அனைத்தும் பொதுப் பயன்பாட்டுக்கு உரியன.
இப்படியான வீடுகளைப் பார்க்கவே பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு பேருந்தில் வந்தனர்.
பொதுவாகச் சில வீடுகளை அவ்வப்போது பராமரிப்பு செய்து, சுற்றுலா நோக்கத்தில் பார்வைக்கு விடுவார்கள். அந்த வகையில் “ஆத்தங்குடி பேலஸ்” என அழைக்கப்படும் வீடு, ஒரு நபருக்கு 80 கட்டணம் பெற்று அனுமதிக்கிறார்கள். இந்தத் தொகை நிர்வாகச் செலவுக்கு மட்டுமே பயன்படும். அதேபோல “கானாடுகாத்தான் பேலஸ்” என்று அழைக்கப்படும் வீடும் மிகப் பிரபலமானது.
வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தெல்லாம் வருவார்கள். ஆனால் இப்போது அனுமதிப்பதில்லை. காரணம் யார் பராமரிப்பது, நிர்வாகம் செய்வது என்கிற நடைமுறைச் சிக்கல்கள். எனினும் காரைக்குடி சாமி.திராவிடமணி, தேவகோட்டை சோம.வரதராஜன் ஆகிய இருவரின் பெரு முயற்சியில் 4 வீடுகள் அனுமதி பெறப்பட்டன. மாணவர்கள் வருகிறார்கள் என்றவுடன் வெளியூரில் இருந்து இதற்காகவே ஊருக்கு வந்து, வீடுகளைச் சுற்றிக் காண்பித்தனர். இனிப்பு, காரம், பழச்சாறு கொடுத்து அன்பை வெளிப்படுத்தினர்.
இதுபோன்ற வீடுகளைப் பார்க்காத மாணவர்களும், ஏன் கேள்விப்படாதவர்களும் கூட அங்கு இருந்தனர். ஒவ்வொரு பகுதிகளையும், அதன் வேலைப்பாடுகளையும் வியப்பாகவும், ரசித்தும் பார்த்தனர். ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டனர். விழாக் காலங்கள் வந்தால் உணவருந்தவே பெரிய பகுதிகள் உருவாக்கப்பட்டு இருந்தன. ஒரே நேரத்தில் 200 பேர் வரை கூட அமர்ந்து சாப்பிடலாம். அதேபோல அந்தக் கால மின்விசிறிகள், விளக்குகள், அதன் ஸ்விட்ச் என அனைத்தையுமே மாணவர்கள் கண்டுகளித்தனர்.
இப்போது ஒரு சில வீடுகள் இடிக்கப்பட்டு தற்காலத்திற்கு ஏற்றாற் போல மாற்றம் செய்யப்பட்டுள்ளன. சில வீடுகள் திருமண மண்டபங்களாக, சில வீடுகள் தங்கும் விடுதிகளாக (Heritage Type) ஆக்கப்பட்டுள்ளன.
மற்ற வீடுகளின் உரிமையாளர்கள் வெளியூரில் வசிப்பதால், எந்நேரமும் பூட்டியே இருக்கும். சில வீடுகளில் முன்பக்கமும், பின்பக்கமும் சிறிய வீடுகளைக் கட்டி, அதில் மக்களைக் குடி வைத்திருப்பார்கள். ஆனால் வாடகை வாங்க மாட்டார்கள். வீட்டைப் பராமரிப்பதும், பாதுகாப்பதும் அவர்கள் வேலை.
இப்படியான நிலையில் மாணவர்கள் முழுமையாக அந்த வீடுகளைப் பார்த்த பிறகு, துறைத் தலைவர் ஜாஸ்மின் வித்யா, பேராசிரியர்கள் வித்யா லெட்சுமி, கவிதா ஆகியோர் அதன் கட்டமைப்புக் குறித்து விளக்கினர். இந்தப் பயணத்தில் பங்கேற்ற பொறியாளர் க.புனிதா, பழைய கட்டட அமைப்பிற்கும், புதியவற்றிற்கும் இடையேயான வேறுபாடுகள் குறித்து விளக்கினார். இவர் பெரியார் நூற்றாண்டு தொழில்நுட்பக் கல்லூரியில் 1992 ஆம் ஆண்டு சிவில் படிப்பை முடித்தவர். கடந்த 25 ஆண்டு காலமாகக் கட்டடத் துறையில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் கல்விப் பயணமாக அமைந்த இந்நிகழ்வு, அனைத்து மாணவர்களுக்கும் அழகிய பாடத்தை மனதிற்குள் இருத்தி இருக்கும். குறிப்பாக 1988ஆம் ஆண்டில், ஆசியாவிலேயே மகளிருக்கென்று தனிப் பொறியியல் கல்லூரியை நிறுவி, பல்லாயிரக்கணக்கான மகளிரைப் பொறியாளராக்கி, அவர்கள் இன்று உலகம் முழுவதும் வாழ்கிறார்கள் என்றால் அதற்கு அடிப்படைக் காரணம் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தான்! அதுமட்டுமின்றி, கட்டடக் கலை (Architecture Department) வல்லுநர்களாக மகளிரைக் கொண்டு வர வேண்டும் என, மகளிருக்கென்று தனியாகக் கட்டடக் கலைத் துறையும் தொடங்கியவர். இந்தத் துறைக்குப் பெண்கள் யாரும் படிக்க வர மாட்டார்கள் எனப் பலரும் சொன்ன நிலையில், எவ்வளவு நட்டம் வந்தாலும் ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் மகளிர் இந்தத் துறைக்கு வந்து சாதனை படைக்க வேண்டும் எனக் கூறி, அதன்படியே செய்தும் காட்டிய சாதனையாளர் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள்! வாழ்க அவர்தம் புகழ்!
