இந்த மாதத்தில் கழகக் குடும்பங்களில் இரண்டு இணையேற்பு விழாக்கள்! இரண்டு செய்திகள்! -தகடூர் தமிழ்ச்செல்வி மாநில திராவிடர் கழக மகளிரணி செயலாளர்

4 Min Read

ஒன்று, 7.6.2026 அன்று மத்தூர் மகளிர் அணி பொறுப்பாளர் சவுந்தரி – ராதாகிருஷ்ணன்  இல்ல இணை ஏற்பு விழா.

இன்னொன்று 13.6.2026 அன்று சேலத்தில் மரியாதைக்குரிய அய்யா அண்ணாமலை அம்மையார் – சரஸ்வதி அவர்களின் மூன்றாம் தலைமுறை, அ.ச.இளவழகன் – கண்ணகி அவர்களின் மகன் தமிழர் தலைவர் – பிரியா ஆகியோரின் திருமணம்.

மத்தூர் திருமணத்தை நம்முடைய பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் நடத்தி வைத்தார்.  திருமணத்திற்கு அதிக அளவில் மக்கள் வந்திருந்தனர். வந்திருந்த உறவினர்கள் மணமக்களுக்கு செய்ய வேண்டிய அன்பளிப்பைச் செய்துவிட்டு செல்வதற்காக சற்று அவசரப்பட்டார்கள். சிலர் மேடைக்கும் வந்து விட்டார்கள்.

அப்பொழுது தோழர் சவுந்தரி தன்னுடைய உறவினர்களிடம், “எங்கள் அன்பு அண்ணன் அவர்கள் சென்னையிலிருந்து இந்தத் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக வந்திருக்கிறார்கள். திருமணம் நடந்து முடிந்த பிறகுதான் உங்களுடைய அன்பளிப்புகளை நான் பெற்றுக் கொள்ள முடியும்.

அப்படி அவசரமாக உங்களுக்கு வேறு வேலை இருந்தால் நீங்கள் தாராளமாக செல்லலாம்.நீங்கள் கொடுக்கின்ற அன்பளிப்பு லட்சம் லட்சமாகக் கூட இருக்கலாம். ஆனால் நாங்கள் கொள்கை அளவில் இந்தத் திருமணத்தைச் சரியாக நடத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்” என்று அவர்களை கையெடுத்துக் கும்பிட்டு அனுப்பி வைத்தார்கள். உறவினர்களும் அதைக் கேட்டு கீழே சென்று அமர்ந்து விட்டார்கள். இணையற்பு விழா நடந்து முடிகின்ற வரை கூட்டம் அமைதியாக இருந்தது.

அப்பொழுது அருகில் நின்றிருந்த எனக்கும் தோழர் இந்திராகாந்திக்கும் அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது. ஒரு குடும்பம் இயக்கத்தில் உறுதியாக  இருந்தால் மட்டும் போதாது. கொள்கையிலும் உறுதியாக இருக்க வேண்டும் என்ற அந்த நிலையை நாங்கள் அன்று அந்த தோழியர் சவுந்தரியிடம் கண்டோம்.

இதே போல ஒரு நிலைமைதான் 2008இல் என்னுடைய மகள் கனிமொழி – பா.மதிக்கண்ணன் திருமணத்தின் போதும் நடந்தது.

திருமணம் நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் தலைமையில் நடந்தது. அப்பொழுது தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா வந்திருந்தார். ஒவ்வொருவரின் உரையும் மிக மிகச் சிறப்பாக இருந்தது.

அளவுக்கு அதிகமான கூட்டம். அப்பொழுது கூட்டத்திற்குள் நுழைந்து உறவினர்கள் மணமக்களுக்கு அன்பளிப்பு தருவதற்கு முடியவில்லை. சென்று விட்டார்கள். அந்த இழப்பு எங்களுக்கு பெரிய இழப்பாகத் தெரியவில்லை. தந்தை பெரியார்  வழியில் சொல்வதென்றால் எந்த ஒரு செயலுக்கும் நாம் ஒரு விலையைக் கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கின்றார்கள்.

அன்றைக்கு கொடுத்த அந்த விலைக்கு எவ்வளவு பெரிய லாபத்தை நாங்கள் அடைந்தோம் என்றால், இன்று வரையிலும் அந்த திருமணம் நடந்த டிஎன்சி விஜய் மஹாலில் இதுபோன்ற ஒரு கூட்டம், இது போன்ற தலைவர்கள் பேசியதை மக்கள் பொறுமையாக கேட்டுச் செல்லும் இணையேற்பு விழாக்கள் நடந்ததே இல்லை. இனி நடக்கப்போவதுமில்லை என்று  சொல்கின்ற அளவுக்கு மக்கள் இன்று வரையிலும் அந்த திருமணத்தை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல 13.6.2026 அன்று நம்முடைய மரியாதைக்குரிய சேலம் அய்யா அண்ணாமலை  அம்மா சரஸ்வதி அவர்கள் பேரனும், இ.ச.இளவழகன் அம்மா கண்ணகி ஆகியோரின் மகன் தமிழர் தலைவர் – பிரியா ஆகியோரது இணையேற்பு விழாவும் ஒரு மிகப் பெரிய வரலாறாக நடந்தது.

கூட்டம் தொடங்கிய நேரம் முதல் இறுதியாக அம்மா அருள்மொழி நன்றி தெரிவிக்கின்ற வகையில் கூட்டம் சற்றும் கலையாமல் இருந்தது என்பது இந்த நிகழ்வில் ஒரு தனிப்பெரும் சிறப்பு. இடையில் திடீரென மின்சாரம் தடைப்பட்டது. சிறிது நேரத்தில் மின்சாரம் வந்துவிட்டது. மின்சாரம் தடைபட்ட அந்த சிறிது நேரத்தில் கூட கூட்டம் கொஞ்சமும் கலையாமல் சிறு முணுமுணுப்பும் கூட இல்லாமல் இருந்தது என்பது ஒரு மிகப்பெரிய ஆச்சர்யம்.

நம்முடைய தமிழர் தலைவர் அவருடைய வாழ்த்துரையில் சிறப்பான முறையில் இதனைச் சுட்டிக்காட்டி “இங்கே மின்சாரம் தடைப்பட்டது. பழைய காலம் என்றால் இந்நேரம் இது கெட்ட சகுனமாகப் போய்விட்டதே விளக்கெல்லாம் அணைந்து விட்டதே! இந்த மணமக்கள் வாழ்க்கை எப்படி இருக்க போகிறதோ! என்ற பயமும் பதட்டமும் பரபரப்பும் இருக்கும்.

ஆனால் இன்றைக்கு இந்த விழாவுக்கு வந்திருந்த அத்தனை உறவினர்களும் அமைதியாக இருக்கின்றார்கள் என்றால், அதற்குக் காரணம் மின்சாரம் தடைபடுவது ஒரு நிகழ்வு. தடைப்பட்ட மின்சாரம் மீண்டும் வருவதும் ஒரு நிகழ்வு தான்; இதில் எந்த விதமான மூடநம்பிக்கைக்கோ இது கெட்ட சகுனம் என்று பயப்படுவதற்கோ எந்த அர்த்தமும் இல்லை என்பதை இந்த மக்கள் இங்கு வந்திருக்கின்ற உறவுகள் நினைக்கிறார்கள் என்பது தந்தை பெரியாருக்கு கிடைத்த வெற்றி” என்றார்.

இது எவ்வளவு பெரிய  வரலாறு. என்றென்றும் தந்தை பெரியார் வெற்றியடைகிறார் என்று தான் நாம் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற ஒரு நிலையை நாம் பார்த்திருக்க முடியுமா? இந்த மாற்றத்தை இந்தப் புரட்சியை செய்தவர் தந்தை பெரியார் என்று சுட்டிக்காட்டினார். அதைக் கேட்ட மக்கள் எழுப்பிய கரவொலியால் மண்டபமே அதிர்ந்தது.

அதேபோல இணையேற்பு அழைப்பிதழில் உள்ள உறவினர்களின் பெயர்களையும் அவர்கள் படித்த பட்டங்களையும் தொடர்ந்து படித்த தமிழர் தலைவர் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்.

“மரியாதைக்குரிய அய்யா அண்ணாமலை அம்மையார் சரஸ்வதி அவர்களின் வழிவந்த பரம்பரையில் படித்தவர்களின் பட்டியலை பார்த்தால் ஒரு பல்கலைக்கழகத்தையே அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.

Aவில் தொடங்கி Z வரை உள்ள ஆங்கில எழுத்துக்கள் எல்லாம் வருகின்ற அளவிற்கு அவர்கள் வாங்கி இருக்கின்ற பட்டங்களின் பெயர்கள் வருகின்றன என்னும் அளவிற்கு  எல்லோரும் படித்திருக்கிறார்கள்” என்று வேடிக்கையாக குறிப்பிட்டார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *