அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்ட அரங்குகளுக்குக் கட்டண உயர்வு கூடாது! கருத்துச் சுதந்திரம் மிக்கவையாக அனைத்து நூலகக் கூட்ட அரங்குகளும் செயல்பட வேண்டும்! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:
புத்தகங்கள் அறிவின் திறவுகோல்கள்!
2006-2011 இல் முத்தமிழறிஞர் கலைஞர் அரசு உருவாக்கிய அறிவு அடையாளங்களுள் ஒன்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள “அண்ணா நூற்றாண்டு நூலகம்”. அதனை, அடுத்து வந்த அ.தி.மு.க. ஆட்சி முடக்கி மடைமாற்ற நினைத்த போது, தமிழ்ச் சமூகம் அறச் சீற்றத்துடன் எழுந்து, அதைத் தடுத்து நிறுத்தியது. கடந்த தி.மு.க. ஆட்சியில் மீண்டும் பொலிவு பெற்று ஏராளமான மாணவர்களும், கல்வியாளர்களும், இளைஞர்களும் பயன்பெறும் இடமாக அது அமைந்தது. மாதிரி நூலகம் போன்றும், தரநிலை அளவுகோல் (Bench Mark) போன்றும் அந் நூலகம் அமைந்துவிட்டது.
நூலகம் என்பதன் முழுப் பயன்பாட்டைப் பெறும் வகையில், சிறு புத்தக வெளியீட்டு அரங்கு, மாநாட்டு அரங்கு, பெருங் கூட்டங்களுக்கு வசதி யான கலை அரங்கு என்று பலவகை அரங்குகள் அங்கு உருவாக்கப்பட்டன. அவற்றில் சிறு புத்தக வெளியீட்டு அரங்கு என்பது இலக்கியக் கூட்டங்கள், சிறிய அளவில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள் நடத்துவதற்குமான அரங்கமாகப் பயன்பட்டுவந்தது. அதற்கு ரூ.3000 என்று மிகக் குறைந்த தொகையைக் கட்டணமாக நிர்ணயித்து ஊக்குவித்து வந்த நிலையில், வரும் ஜூலை முதல் அதன் கட்டணம் ரூ.14,750 என்று நான்கு மடங்கு உயர்த்தப்பட்டும், கலையரங்கத்தின் வாடகை ரூ.3 லட்சம் என்பதிலிருந்து, ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக வந்துள்ள செய்தி கண்டனத்திற்குரியதாகும்.
கட்டண உயர்வைத் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும்
நூலகங்கள் போன்ற அறிவுக் கூடங்கள் வருமானத்திற்கானவை அல்ல. அவற்றுக்குச் செய்யப்படும் செலவு – கலை, பண்பாட்டு, அறிவு வளர்ச்சிக்குப் பயன்படுபவையாகும். எளிய பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், புதிய படைப்பாளிகளுக்குப் பெரும் வாய்ப்பாக அமைந்த இந்த நிகழ்ச்சி அரங்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வைத் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும். பழைய கட்டண விகிதமே உறுதிசெய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
அண்ணா நூற்றாண்டு நூலகம், தேவநேயப் பாவாணர் நூலகம் உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள நூலகக் கூட்ட அரங்குகளில் அரசியல் மாற்றுக் கருத்துகளுக்கும், கருத்து மாறுபாடு உடையோருக்கும் அனுமதி மறுக்காமல், எல்லோருக்குமான கருத்துச் சுதந்திரக் களங்களாகவும் அவை அமைய வேண்டும் என்பதையும் இச் சூழலில் நினைவுபடுத்தி, வலியுறுத்த விரும்புகிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
26.6.2026
