‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–3) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை

7 Min Read

பெரியார் உண்மையிலேயே பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரித்தாரா?
ஆரியத்தினுடைய மறுவடிவம் பாசிசம், ஹிட்லரிசம்!
‘நான் ஆரிய வம்சத்திலிருந்து பிறந்தவன்’ என்று ஹிட்லர் தன்னை ஆரியன் என்று சொல்லி,
ஆரியக் கலாச்சாரத்தைப் புகுத்தியதினால்தான்,
ஆர்.எஸ்.எஸ்.சுக்கும்– ஹிட்லருக்கும் தொடர்பு ஏற்பட்டது!
அதை அப்போதே உணர்ந்த ஒரு நுண்ணறிவாளர்- சிந்தனையின் கூர்மைதான் பெரியார்!

ஆசிரியர் உரை

சென்னை, ஜூன் 25 ஆரியத்தினுடைய மறுவடிவம் பாசிசம், ஹிட்லரிசம். ஆகவேதான், ‘நான் ஆரியன் என்பதில் பெருமைப்படுகிறேன்’ என்றான் ஹிட்லர். அதனால்தான் ஆர்.எஸ்.எஸ். அவனுடன் தொடர்பு கொண்டது. ‘நான் ஆரிய வம்சத்திலிருந்து பிறந்தவன்’ என்று  ஹிட்லர்  தன்னை ஆரியன் என்று சொல்லி, ஆரியக் கலாச்சாரத்தைப் புகுத்தியதினால்தான், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் ஹிட்லருக்கும் தொடர்பு ஏற்பட்டது. அதை அப்போதே உணர்ந்த ஒரு நுண்ணறிவாளர் சிந்தனையின் கூர்மைதான் பெரியார்  என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–3)

்கடந்த 22.6.2026 அன்று மாலை 6.30 மணியளவில், சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார்  அரங்கத்தில், பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல், திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில்,  ‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–3) என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்தவுடன்,  சுயமரியாதை இயக்கம் என்று சொல்லி, இந்த இயக்கத்தில் இருந்த வர்கள், ‘‘என்ன பணக்காரர்களை ஆதரிக்கிறார்? அவர், ஏழைகளை எல்லாம் விட்டுவிட்டாரே, இனிமே சமதர்மம்பற்றி பேச மாட்டார் அவர்’’ என்றெல்லாம்  சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில், அய்யா அவர்கள் சொல்கிறார், ‘நான் பணக்காரன் கட்சியில் இல்லை. நான் கொண்டு வந்த தீர்மானம்தான், அந்தக் கட்சியை மாற்றி இருக்கிறது’’ என்று ஒரு செய்தியை அவர்களுக்குச் சொல்கிறார்.

அந்தச் செய்தி மிக முக்கியமானதாகும்.

என்ன அந்த செய்தி என்று சொன்னால் தோழர்களே,

‘டொமினியன் ஸ்டேட்டஸ்’ என்றுதான் அப்போது எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். முதல் முதலில் வெள்ளைக்காரன் வெளியேற வேண்டும் என்று சொன்ன போது, நிறைய பேர் புரியாமல் தவறான பிரச்சாரம் செய்தனர். ‘பெரியார் காட்டிக் கொடுத்தார்’, ‘பெரியார் பிரிட்டிஷ்காரனுக்கு வால் பிடிச்சார்’, ‘திராவிட இயக்கம் ஜஸ்டிஸ் கட்சி அங்கே போயிற்று’ என்று. ‘டொமினியன் ஸ்டேட்டஸ்’ என்றால், ‘தன்னாட்சி அந்தஸ்து’ அல்லது ‘குடியேற்ற நாட்டு தன்னாட்சி நிலை’ என்று பொருள்.

மறைக்கப்பட்ட வரலாற்றுக்கு
அதற்கு ஆதாரம் இருக்கிறது!

தந்தை பெரியார் அவர்கள் தான், பிரிட்டிஷ் ஆட்சி ஒழிந்து, முழு சுதந்திரம் வேண்டும் என்கிற தீர்மானத்தைக் காங்கிரஸ் கட்சிக்கு முன்பே கொண்டு வந்தவர். இது மறைக்கப்பட்ட வரலாறு. அதற்கு ஆதாரம் இருக்கிறது.

ஆகவே, தந்தை பெரியார் அவர்கள், ஒவ்வொரு முறையும் பார்த்தீர்களேயானால், புது புதுக் கோணத்தில் கொண்டுபோய்க்கொண்டே இருப்பார். அந்தக் கொள்கையை வேகப்படுத்திக் கொண்டே இருப்பார், எல்லாவற்றிலுமே! ஆகவேதான், நண்பர்களே! பெரியா ருடைய சிந்தனை என்பது கூர்மை மட்டுமல்ல, தொலைநோக்கு உடையது. சிறிய லாபங்களுக்காக, உடனடி லாபங்களுக்காக அடிப்படையை மாற்றியதே கிடையாது அவர்.

அவருடைய தொலைநோக்கு –  அதனால்தான் அவருக்கு யுனெஸ்கோ மன்றம், “Prophet of the New Age” என்று  சொன்னதற்குக் காரணமே, அவர்  புதிய உலகின் தொலைநோக்காளர்.

பெரியார் உண்மையிலேயே
பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரித்தாரா?

ஆகவே, அப்படிப்பட்ட பெரியாருடைய சிந்தனை என்பது மிக மிக முக்கியமானது. பெரியார் உண்மையிலேயே பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரித்தாரா? 1942 இல்தான் ‘க்விட் இந்தியா இயக்கம்’ முழு சுதந்திரம் வேண்டும் என்கிறது காங்கிரஸ்! வரலாறு படிக்க வேண்டும். ஆனால், அய்யா அவர்கள் 1937 ஆம் ஆண்டிலேயே, ஆளுங்கட்சியாக இருந்து 17 ஆண்டுகள் ஆண்ட ஒரு கட்சி, நீதிக்கட்சி, தேர்தலில் தோற்ற நேரத்தில், பிறகு அக்கட்சிக்கு வலிமையூட்டி, அந்தக் கட்சியினுடைய கொள்கைக்கு முழு சுதந்திரம் வேண்டும் என்றார்.

எங்களுடைய நாகரிகத்தை, மொழியை, கலையை, பண்பாட்டைக் காப்பாற்றுவதற்காக!

ஆனால், ஏன் வெள்ளைக்காரனை வரவேற்றார்?  தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டதில் கூட, இங்கே இருக்கிற வெள்ளைக்கார அதிகாரிகளை, கவர்னர் ஜெனரல் நம்பவில்லை. ஏனென்றால், அவர்கள் எல்லாம் ஆரியத்தோடு நெருங்கிய தொடர்பு உள்ளவர்களாக ஆயினர். ஆரிய வலை வீசிவிட்டார்கள். ஆரிய மாயையில் அவர்கள் சிக்கிவிட்டார்கள். அதனால், திருவாரூரில் தீர்மானம் போடும்போது, நேரடியாக உள்நாட்டு மந்திரி என்று ஒருவர் இருந்தார்,  லண்டனில்! ‘அவருடைய கண்காணிப்பில் நாங்கள் இருக்கவேண்டும்.  எங்களுடைய நாகரிகத்தை, மொழியை, கலையை, பண்பாட்டைக் காப்பாற்றுவதற்காக’ என்று மிகத் தெளிவாகச் சொன்னார். இவையெல்லாம் மறைக்கப்பட்ட ஒரு வரலாறு.

வெள்ளைக்கார ஆட்சி போக வேண்டுமா? உடனே ஹிட்லரை ஆதரிக்க வேண்டும் என்றார்கள் பலர். ஜப்பானுக்கும், ஜெர்மனுக்கும் இரண்டாவது உலகப் போரில் என்ன பெயர் என்றால், ‘அச்சு நாடுகள்.’ இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எல்லாம் ‘நேச நாடுகள்.’

ஹிட்லருடைய சின்னம்தான் சுவஸ்திக் சின்னம் – அதுதான் ஆர்.எஸ்.எஸ்!

யுத்தம் நடக்கிறது, ராணுவத்திற்கு ஆள் சேருங்கள் என்று சொல்லும்போது, அப்பொழுது காங்கிரஸ் என்ன பிரச்சாரம் செய்தார்கள் என்றால், ‘ராணுவத்திற்கு ஆள் சேர்க்க விடாதே!’ வெள்ளைக்காரனை  விரட்ட வேண்டும் என்றால், இதுதான் சந்தர்ப்பம் என்று சொல்லி, ஹிட்லரைப் போய்ச் சந்திக்கிறார்கள். அன்றைக்கு ஹிட்லரோடு நெருக்கமாக இருந்த குரூப்தான் ஆர்.எஸ்.எஸ்! ஹிட்லருடைய சின்னம்தான் சுவஸ்திக் சின்னம். அதுதான் ஆர்.எஸ்.எஸ்!

யார் ஆட்சிக்கு வரப் போகிறார்களோ, அவர்களைக் கைக்குள் போட்டுக் கொள்வது  காலங்காலமாய் ஆரியத்தினுடைய திட்டம். அதை நுண்ணறிவோடு பார்க்கக்கூடிய நுண்மை, தந்தை பெரியாருடையது! அதனால் என்ன செய்தார்? அன்றைக்குக் காங்கிரஸ் என்றால், ஆரியம், பார்ப்பனியம். இன்றைக்குக் கொஞ்சம் மாறியிருக்கிறது காங்கிரஸ்! ஆனால், அன்றைக்கு காங்கிரஸ் என்றால், முழுக்க முழுக்க தேசியப் போர்வை  என்பது பார்ப்பனிய, ஆரிய ஆதிக்கம் தான். அந்தத் தேசியப் போர்வையில்தான், விடுதலைபற்றிப் பிரச்சாரம். உடனே, அய்யா சொன்னார், ராணுவத்தில் சேருங்கள் என்றார். பட்டாளத்துக்குப் போகாதே என்றது காங்கிரஸ் கட்சி.  ‘போர்ப் பிரச்சாரம்’ (War Propoganda) யுத்தத்தில் வெற்றி இருக்கு என்றால், பொய்ச் சொல்லுவான் நிறைய!  ஜெர்மன்காாரன் வந்துவிட்டான், முன்னேறிவிட்டான், இங்கே வந்துவிட்டான். அதே மாதிரி சில செய்திகள் வந்தது அப்பொழுது!

பிரிட்டிஷ்காரன் குண்டு போட்டுவிட்டான்; சென்னையில் எம்டன் குண்டு வீசி, சென்னையைக் காலி செய்யப் போகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வரக்கூடிய சூழல்கள் அந்தக் காலத்தில் உண்டு. ஆனால், அதையெல்லாம் தாண்டி,  அய்யா துணிச்சலாகப் பேசினார்; கெட்ட பெயரைப்பற்றி அவர் கவலைப்படுவதில்லை. அதுதான் அவருடைய தனித்தன்மை. உண்மையான செய்திகள் தமிழில் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்று நினைத்தார்கள். “அரசாங்கத்துக்கு எதிரான பிரச்சாரம் செய்கிறார்கள், ரகசியப் பிரச்சாரம் செய்கிறார்கள். அண்டர் கிரவுண்ட் நடக்குது” என்று அரசு கவலைப்பட்டது. இதைக் கேட்டவுடன், மற்றவர்கள் எல்லாம் யோசிக்கிறார்கள்.

தளபதி அஞ்சாநெஞ்சன்
பட்டுக்கோட்டை அழகிரி!

அப்போது பெரியார் சொல்கிறார், ‘‘நான் ‘விடுதலை’யை ஆறு மாதத்திற்கு உன்னிடம் ஒப்படைக்கிறேன், நீ வார் பிரபகண்டா செய்!” என்றார் பெரியார். போர்ப் பிரச்சாரத்தை யார் எஃபெக்டிவாகச் செய்வார்கள்? யார் உண்மையாக நல்லா எழுதுவார்கள்? யார் நல்ல பேச்சாளர்கள்? என்று  பார்த்தால், அதை வெள்ளைக்காரன் சரியாகக் கணக்குப் போட்டான்.  இவர்கள்தான் சரியான ஆட்கள்! அப்பவும் கை கொடுக்கறவங்க யார்?  நாம்தான்; ஒப்பந்தம் போட்டார்கள். ரொம்ப சாதாரணம் 600 ரூபாய்தான் வாடகை. பெரிய ரூபாய் இல்லை. ஆசிரியர் யார் ‘விடுதலை’க்கு? இதே குத்தூசி குருசாமிதான் ஆசிரியர். போர்ப் பிரச்சாரகர் யார் என்றால்,  உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும், தளபதி அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி. மக்கள் வந்து, ஈர்த்துக் கேட்கக்கூடிய அளவுக்குப் பேசக்கூடியவர்கள்.

நிரந்தர எதிரி யார்? நிரந்தர நண்பன் யார் என்று பார்த்து, நாம் பயன்பட வேண்டும்!

அன்றைக்கு எல்லோருக்கும் புரியவில்லை. “என்னய்யா, ஹிட்லரைப் போய் எதிர்க்கிறார் இவர்? அவன் பிரிட்டிஷ்காரனை எதிர்க்கிறான். ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்றுதானே நாம் நினைப்போம். அவனை வரவேற்பதுதானே நியாயம்!” என்றார்கள். “இல்லை, அப்படி நினைக்கக் கூடாது. அதற்குப் பதிலாக நுண்மாண் நுழைபுலத்தோடு பார்க்க வேண்டிய செய்தி என்னவென்றால், ‘எதிரிக்கு எதிரி நண்பன் அல்ல; நிரந்தர எதிரி யார்? நிரந்தர நண்பன் யார் என்று பார்த்து, நாம் பயன்பட வேண்டும்” என்ற ஓர் அருமையான கருத்தை முன்னால் வைத்துக்கொண்டு, அய்யா அவர்கள் என்ன செய்தார் என்று சொன்னால்,

ஆரியத்தினுடைய மறுவடிவம்
பாசிசம், ஹிட்லரிசம்!

‘எதிரிக்கு எதிரி நண்பன், நமக்கு பிரிட்டிஷ் எதிரி, பிரிட்டிஷ்காரனுக்கு ஹிட்லர் எதிரி’ என்ற அளவில் மட்டும்தான், அவ்வளவு பெரிய காங்கிரஸ் கட்சியில் இருந்து எல்லாரும் சொன்னார்கள் – சுதந்திரம், தேசியம் என்கிற பெயரில்! ஆனால், பெரியாருடைய சிந்தனைக் கூர்மை – ஆரியத்தினுடைய மறுவடிவம் பாசிசம், ஹிட்லரிசம். ஆகவேதான், ‘நான் ஆரியன் என்பதில் பெருமைப்படுகிறேன்’ என்றான் ஹிட்லர். அதனால்தான் ஆர்.எஸ்.எஸ். அவனுடன் தொடர்பு கொண்டது. ‘நான் ஆரிய வம்சத்திலிருந்து பிறந்தவன்’ என்று  ஹிட்லர்  தன்னை ஆரியன் என்று சொல்லி, ஆரியக் கலாச்சாரத்தைப் புகுத்தியதினால்தான், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் ஹிட்லருக்கும் தொடர்பு ஏற்பட்டது. அதை அப்போதே உணர்ந்த ஒரு நுண்ணறிவாளர் சிந்தனையின் கூர்மைதான் பெரியார் அவர்கள்.

‘விடுதலை’ மலரில் விளக்கமாக எழுதியிருக்கிறேன்!

தோழர்களே, ‘விடுதலை’யிலேயே, ஏன் தந்தை பெரியார் வெள்ளைக்காரர்களை ஆதரித்தார் என்பதை விளக்கி. மலரிலேயே ஒரு கட்டுரையை இந்தக் குற்றச்சாட்டை எடுத்துச் சொல்லி விளக்கம் எழுதி இருக்கிறேன்.

அடுத்த கூட்டத்தில் சந்திப்போம்.

அடுத்த கூட்டம் ஜூலை  மாதம் 6 ஆம் தேதி  நடைபெறும்.

நன்றி வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *