
சென்னை, ஜூன் 24 சட்டப்பேரவையில் நேற்று (23.6.2026) ஆளுநர் உரை மீது முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரையாற்றும் போது எதிர்க்கட்சிகள் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசினார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து பதிலளிக்க வாய்ப்புக் கேட்டனர்.
அதற்கு பேரவைத் தலைவர் அனுமதிக்கவில்லை. அதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதிக்கக் கோரி எழுந்து நின்று முழக்கமிட்டனர். பின்னர் எதிர்க்கட்சியினர் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது பேரவைத் தலைவர் அவர்கள், முதலமைச்சர் விஜய் பதிலுரையாற்றி முடித்தபிறகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.
அப்போது எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் குறுக்கிட்டுப் பேசும்போது, பேரவைத் தலைவர் அவர்களே, 22.6.2026 அன்று நான் பேரவையில் உரையாற்றும்போது அமைச்சர்கள் குறுக்கிட்டுப் பேசினார்கள்.
அதற்கு நீங்கள் அனுமதி கொடுத்தீர்கள். அதுபோல இன் றைக்கு முதலமைச்சர் அவர்கள் பேசும்போது, சில தவறான வார்த்தைகள் பேசுகிறார். ‘பார்ட்டி ஃபண்டு’ என்று சொல்கிறார். “எந்த ‘பார்ட்டி ஃபண்டு’ என்று கூட சொல்லவில்லை” என்று அமைச்சர் சொல்கிறார். தைரியமிருந்தால் சொல்லுங்கள். எதையும் ஆதாரத் துடன் சொல்லுங்கள். நாங்கள் அதைச் சந்திக்க தயாராக உள்ளோம்.
அதுபோல், 22.6.2026 அன்று, நான் பேசி முடித்தவுடன், பேரவைத் தலைவர் அவர்கள் ‘அவை முடிந்தது’ என்று கூறினார். அதனால் நாங்கள் எல்லாம் வீட்டிற்குச் சென்று விட்டோம்.
வீட்டிற்கு சென்றதும் தொலைக்காட்சியில் பார்த்தால் இன்னொரு அமைச்சர் இன்னும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதெல்லாம் என்ன பதில், என்ன மரபு. அவர் என்னவெல்லாம்கூட பேசிக் கொண்டிருப்பாரா, அதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா?
இன்றைக்கு முதலமைச்சர் அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது நாங்களும் அமைதியாகத்தான் கேட்டுக் கொண்டிருந்தோம்.
ஆனால் சில அவதூறு கருத்துகளை அவர் பேசும்போது, அதை நாங்கள் அனுமதிக்கமுடியாது. ஆதாரத்துடன் சொல்லவேண்டும். குற்றச்சாட்டு சொல்லும்போது ஆதாரத்துடன் சொன்னால்அது குறித்து உண்மையை விளக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் குறுக்கிட்டு பேசும்போது, மைக் துண்டிக்கப்பட்டது. மீண்டும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அதையே பேசியதால் எதிர்க்கட்சி திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
