அயோத்தி ராமனை – ‘அபேஸ் ராமனாக்க’லாமா?

ராமன் கோயில் நன்கொடைகளில் ஊழல்! திருப்பதி லட்டு தயாரிப்பில் மோசடி!!
சபரிமலை அய்யப்பன் கோயில் தங்கங்களில் முறைகேடு!
பக்தியின் பெயரால் பகல் கொள்ளையா?
‘பக்தி பகல் வேடதாரி’களின் ஊழல்களை மக்கள் மறக்கமாட்டார்கள்!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை

ராமன் கோயில் நன்கொடைகளில் ஊழல்! திருப்பதி லட்டு தயாரிப்பில் மோசடி!! சபரிமலை அய்யப்பன் கோயில் தங்கங்களில் முறைகேடு! பக்தியின் பெயரால் பகல் கொள்ளையா? ‘பக்தி பகல் வேடதாரி’களின்  ஊழல்களை மக்கள் மறக்கமாட்டார்கள்! அயோத்தி ராமனை – ‘அபேஸ் ராமனாக்க’லாமா? என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

Contents
ராமன் கோயில் நன்கொடைகளில் ஊழல்! திருப்பதி லட்டு தயாரிப்பில் மோசடி!! சபரிமலை அய்யப்பன் கோயில் தங்கங்களில் முறைகேடு! பக்தியின் பெயரால் பகல் கொள்ளையா? ‘பக்தி பகல் வேடதாரி’களின் ஊழல்களை மக்கள் மறக்கமாட்டார்கள்!திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கைஆரம்பித்த காலத்தில் இருந்தே ஏராளமான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான திட்டமாயிற்றே!விசாரணைக்குத் தாங்களே கோரிக்கை விடுப்பதாக அறக்கட்டளை தனது ஆட்டத்தைத் தொடங்கியது! ‘இந்தியா டுடே!’கோயிலின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளில் உள்ள பலவீனங்கள்!காணிக்கை திருட்டால் அதிரும் அயோத்தி!நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது!நெய்யும், மெய்யும் படும்பாடு பெரும்பாடு தான்!மக்கள் விழிப்பு பெற்றே தீருவார்கள்! ஊழல் கூட்டம் அதற்குரிய விலையைக் கொடுத்தே தீர வேண்டும்!

12 ஆண்டுகள் பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தம்பட்டம் அடிக்கிறார்கள் பிரதமர் நரேந்திர மோடி முதல் ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி வரை!

மக்களின் மறதியின் மீது அவ்வளவு நம்பிக்கையோ? வியாபம் ஊழல் தொடங்கி பி.எம்.கேர், தேர்தல் பாண்டுகள் வரை எல்லா குற்றச்சாட்டுகளும் மறக்கடிக்கப்பட்டுவிட்டன என்று கருதுகிறார்களோ?

ஆரம்பித்த காலத்தில் இருந்தே ஏராளமான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான திட்டமாயிற்றே!

அதிகம் முந்தைய செய்திகளுக்குப் போகாவிட்டாலும், பா.ஜ.க. ஆட்சியின் மிகப்பெரிய சாதனையாகப் பேசப்படும் அயோத்தி ராமன் கோவில் விவகாரத்தையாவது கணக்கில் கொள்ள வேண்டாமா? கட்டவேண்டும் என்று ஆரம்பித்த காலத்தில் இருந்தே ஏராளமான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான திட்டமாயிற்றே! மேனாள் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் முதற்கொண்டே ஊழல் குற்றச்சாட்டுக்கு இலக்கானவர்கள் தானே! அதன் அடுத்த விரிவான கட்டம் தான், தற்போதைய ராமன் கோவில் நன்கொடை விவகாரம்!

பா.ஜ.க. வெகுமக்களிடம் சேர்வதற்கான அரசியல் அஜெண்டாவாகக் கையில் எடுத்தது அயோத்தியில் பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமன் கோவில் கட்டவேண்டும் என்ற விவகாரத்தைத் தான்! ஏறத்தாழ 35 ஆண்டுகளில் அதற்கான போராட்டங்கள், கலவரங்கள், ர(த்)த யாத்திரைகள், பாபர் மசூதி இடிப்பு, இடிப்பு வழக்கு, பாபர் மசூதி நிலத்தை ராமர் கோவில் கட்ட அனுமதித்த தீர்ப்பு, இவற்றையெல்லாம் கடந்து 2024 தேர்தல் வரைக்கும் ஜவ்வாக அதனை இழுத்துக் கொண்டு வந்து, அவ்வாண்டு ஜனவரியில் அதனைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி.

அப்போது நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்குப் பிறகு ராம பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணம், தங்கம் மற்றும் நகைகள் காணாமல் போய்விட்டன அல்லது தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினர். ஆனால், சிறீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையும், உத்தரப் பிரதேச அரசும், பாஜகவும் இந்தக் குற்றச்சாட்டுகளை முதலில் உறுதியாக மறுத்தனர். ஆனால், எல்லா பக்கமிருந்தும் நெருக்கடி முற்றியது.

விசாரணைக்குத் தாங்களே கோரிக்கை விடுப்பதாக அறக்கட்டளை தனது ஆட்டத்தைத் தொடங்கியது!

சிபிஅய் விசாரணை மற்றும் சிஏஜி தணிக்கை கோரி பொதுநல மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரிக்கவுள்ள நிலையில், விசாரணைக்குத் தாங்களே கோரிக்கை விடுப்பதாக அறக்கட்டளை தனது ஆட்டத்தைத் தொடங்கியது. ஆனாலும், முறைகேடு நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும், தற்போது நடைபெற்று வரும் விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும் என்றும் அவர்கள் தெரிவித்து வந்தனர். மாநில அரசின் மூன்று பேர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவும் (SIT) ஊழல் குறித்து ஆய்வு செய்து வருகிறது.

இந்த விவகாரம் ஊடகங்களில் தொடர்ந்து பேசுபொரு ளாகவே, சுதாரித்துக் கொண்ட உத்தரப்பிரதேச முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத், “ராமன் கோவில் நிதி முறைகேடு பற்றி யாராவது பேசினால், 7 பிறவிக்கும் பாவம் சேரும்” என்று  ‘மிரட்டல் பானத்தை’ விடுத்துள்ளார்!

வேதங்கள், மனுஸ்மிருதியின் பார்வையில் தான், நாத்தி கர்களான நம் கணக்கில் ஏராளமான பாவங்கள் இருப்பதாகச் சொல்வார்களே! கூடுதலாக ஒன்றிரண்டு சேர்ந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் உண்மை உலா  வரவேண்டாமா?

 ‘இந்தியா டுடே!’

‘இந்தியா டுடே’ செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, “சிறீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் வங்கிச் செயல்பாடுகளை நிர்வகித்தல், கோயிலில் பெறப்படும் ரொக்க நன்கொடைகளைக் கையாளுதல், ராமன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய பணத்தாள்களைப் பிரித்தல், அடுக்கி வைத்தல் மற்றும் எண்ணுதல் ஆகிய பணிகளும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வசம் ஒப்படைத்திருந்ததாம். அந்த வங்கி, பணத்தை எண்ணும் பணியை வாரணாசியைச் சேர்ந்த ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்திடம் ஒப்படைத்தி ருந்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் ‘இந்தியா டுடே’ விடம் தெரிவித்தன. இருப்பினும், அந்த நிறுவனம் இப்பணிக்காக அயோத்தியைச் சேர்ந்த தொழிலாளர்களை ஈடுபடுத்தியதாகவும், ராமன் கோயில் அறக்கட்டளையுடன் தொடர்புடைய நபர்களின் பரிந்துரையின் பேரில் பல நியமனங்கள் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ராமன் கோயில் அறக்கட்டளையின் ஊழியரான அனுகுல் மிஸ்ரா, தனது மைத்துனர் லவ்குஷ் மிஸ்ராவை பணத்தை எண்ணும் குழுவில் நியமிக்க உதவினார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஊழியர் நியமன நடைமுறைகள் மற்றும் அதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்தும் சிறப்பு விசாரணைக் குழு ஆய்வு செய்துள்ளதாம்!

வளாகத்திற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் பணியாளர்கள் மீது போதுமான சோதனைகள் இல்லாதது உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க குறைபாடுகள் இருப்பதை விசாரணைக் குழு கண்டறிந்தது. தொழிலாளர்கள் வளாகத்திற்குள் கொண்டு செல்லும் அல்லது வெளியே கொண்டு வரும் பொருட்களைச் சரிபார்க்க வலுவான வழிமுறை எதுவும் இல்லை என்றும், இது நன்கொடைகளைக் கையாள்வதில் கண்காணிப்புக் குறைபாடு குறித்த கவலைகளை எழுப்புவதாகவும் அவ் வட்டாரங்கள் தெரிவித்தன. நன்கொடைகளை எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு அதற்கெனத் தனி சீருடை, ஆடை விதிமுறைகள் இருந்தபோதிலும், அவர்கள் பெரும்பாலும் சாதாரண உடைகளிலேயே அறக்கட்டளை அலுவலகத்திற்குள் காணப்பட்டதாக ‘இந்தியா டுடே’ செய்தி வெளியிட்டுள்ளது.

கோயிலின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளில் உள்ள பலவீனங்கள்!

மேலும், சிசிடிவி கண்காணிப்பு குறித்தும் விசாரணைக் குழு கவலைகளை எழுப்பியது. கண்காணிப்புக் கேமராக்களின் பார்வையில் படாத இடங்கள் (blind spots) மற்றும் போதிய கண்காணிப்பு இல்லாததால், தொழிலாளர்கள் திருட்டில் ஈடுபடுவதற்கு முன் கேமராக்களுக்கு முன்னால் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முடிந்தது என்றும், இது கோயிலின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளில் உள்ள பலவீனங்களை வெளிப்படுத்துவதாகவும் அவ்வட்டாரங்கள் குற்றம் சாட்டின. தனது விசாரணையின் ஒரு பகுதியாக, பக்தர்கள் வழங்கிய தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், விலையுயர்ந்த கற்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்கள் தொடர்பான பதிவுகளை சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) ஆய்வு செய்தது. இந்த காணிக்கைகளின் ஆவணப்படுத்தல் மற்றும் கணக்கியலில் முரண்பாடுகளை புலனாய்வாளர்கள் கண்டறிந்ததாக அவ் வட்டாரங்கள் தெரிவித்தன. அதே நேரத்தில், சில அறக்கட்டளை அதிகாரிகள் தங்களின் சரக்கு மேலாண்மை, சேமிப்பு நடைமுறைகள் மற்றும் பதிவேடுகளைப் பராமரிக்கும் முறைகள் குறித்து திருப்திகரமாக விளக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த விசாரணை, 2025 ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் ராமன் கோவிலில் பக்தர்களின் வருகை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்த மகா கும்பமேளா காலத்தி லும் கவனம் செலுத்தியுள்ளது. சில நாள்களில் தினசரி பக்தர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 லட்சத்தைத் தொட்டதாக அறிக்கைகள் கூறுவதால், இந்தக் கால கட்டத்தில் நன்கொடைகளில் ஏற்பட்ட இந்தத் திடீர் அதிகரிப்பு, கண்காணிப்பு மற்றும் நிதிக் கட்டுப்பாடுகளில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்தியதா என்பதை புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும், மாதம் சுமார் ரூ.18,000 முதல் ரூ.20,000 வரை ஊதியம் பெறும் ஊழியர்கள், முறையே ரூ.40 லட்சம் மற்றும் ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலங்களை வாங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஊழியர் ஒருவரின் வீட்டில் இருந்து சுமார் ரூ.10 லட்சம் ரொக்கப் பணத்தை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படு கிறது. இவையெல்லாம் முழுமையாக உத்தரப் பிரதேச அரசு அமைத்துள்ள விசாரணைக் குழு முடிவுகளில் வெளிவருமா என்று நம்மால் சொல்ல இயலவில்லை! ஆனால், முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற வழக்கின் முடிவையும் பார்ப்போம்.

ராமன் கோவில் விவகாரம் மட்டுமல்ல… இன்னும் பல கோவில்களிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன என்று விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

காணிக்கை திருட்டால்
அதிரும் அயோத்தி!

இந்நிலையில், கோவிலின் முன்னாள் கணக்காளர் மகிபால் சிங், தனது பணியின்போதே ரூ.5 லட்சம் திருடப்பட்டதாகவும், இது குறித்துப் புகார் அளித்ததாலேயே தான் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இதற்கிடையே, செய்தியாளர்கள் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷணிடம் இது பற்றிக் கேட்டபோது, “நான் உண்மையைச் சொன்னால் பெரிய ஆபத்து வரலாம்.

தவறு செய்தவர்கள் மிகப் பெரிய மனிதர்கள், அவர்கள் குறித்துப் பேச எனக்குத் தைரியம் இல்லை” எனக் கூறியுள்ளார். பா.ஜ.க. தலைவரே ஊழலை ஒப்புக்கொள்ளும் வகையில் பேசியிருப்பது, ராமர் கோவிலில் என்னதான் நடக்கிறது என்ற பலத்த கேள்வியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி லட்டு தயாரிப்பில் முறைகேடு நடந்துள்ளதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை:

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது!

புகழ்பெற்ற திருப்பதி கோவில் லட்டில் சேர்க்கப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பைக் கலந்ததாக
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி மீது தற்போதைய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மறுப்பு தெரிவித்து வந்தது. திருப்பதியில் கொடுக்கப்படும் லட்டினை ஆய்வுக்குட்படுத்தியதில்  மாட்டுக்கொழுப்பு உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்புகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து நெய் விநியோகம் செய்த நிறுவனங்கள் நெய் டின்கள் குஜராத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு சோதிக்கப்பட்டன.

திருப்பதிக்கு நெய் விநியோகம் செய்த திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார் நத்தம் பிரிவில் உள்ள ஏ.ஆர். டெய்ரி புட் நிறுவனத்தின் நெய்யில் 20 சதவீதம் மட்டுமே தரம் இருப்பதாகவும், அதில் சோயா பீன்சில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய், மீன் எண்ணெய், மாட்டி றைச்சி கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டிருக்கின்றன என்பன ஆய்வில் தெரிய வந்ததாக கூறப்பட்டது. தற்போது இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகரின் வீடு, நிறுவனம் என இரண்டு இடங்களில் நேற்று காலை 8 மணி முதல் இரவு வரை அமலாக்கத் துறையினர் 12–க்கும் மேற்பட்டோர் நான்கு கார்களில் வந்து சோதனை மேற்கொண்டனர். அதோடு டில்லி, மும்பை, அகில்யாநகர், பிகானர், டேராடூன், குண்டூர் மற்றும் ரூர்க்கி ஆகிய நகரங்களில் இந்த நிறுவனத்திற்குச் சொந்தமான 15 இடங்களில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்தச் சோதனையில்போது, கணக்கில் வராத பணம் மற்றும் நெய் கலப்பட ஊழல் மூலம் ஈட்டப்பட்டப் பணத்தில் வாங்கிய சொத்துகளை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெய்யும், மெய்யும் படும்பாடு
பெரும்பாடு தான்!

அப்படியே கேரளா பக்கம் வந்தால், அம் மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கக் கவசங்களால் செய்யப்பட்டு உள்ள  கருவறைக் கதவுகள், துவார பாலகர் சிலை, மேற்கூரைகள் ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்துள்ளன என்று பிரச்சினை கிளம்பியுள்ளது. முதலில் கவசங்களில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. எஸ்அய்டி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தான் கேரளா உயர்நீதிமன்றத்தின் அனுமதியுடன் எஸ்அய்டி அதிகாரிகள் சபரிமலை கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர். இந் நிலையில் தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலின் தங்க மேற்கூரையின் நிறம் திடீரென்று மாறி உள்ளது. தங்க மேற்கூரையின் ஒரு பகுதி கருப்பு நிறமாக மாறி உள்ளது. தங்கத்தை பிரித்தெடுக்க யாராவது அந்த மேற்கூரை மீது திராவகம் ஏதேனும் வீசினார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், பக்தர்கள் நெய் வீசி இருப்பார்கள் அதனால் நிறம் மாறியிருக்கலாம் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனராம். தங்கம் அவ்வளவு எளிதில் நெய்க்கு எல்லாம் நிறம் மாறும் உலோகம் அல்ல என்பது வேதியியல் படித்த எல்லோருக்கும் தெரியும். நெய்யும், மெய்யும் படும்பாடு பெரும்பாடு தான்!

அவர்களால் பெரிதும் கொண்டாடப்படும் பெரும்பெரும் கோவில்கள் எல்லாம், இப்படி ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, ராமன், வெங்கடேசன், அய்யப்பன் எல்லாம் விசாரணை வளையத்திற்குள் இருக்கிறார்கள்.

இவற்றுக்கு இடையில் தான் எந்த ஊழலும் நடைபெற வில்லை என்று ஒன்றிய அரசு ஊடகங்களுக்குச் செய்தி கொடுத்துக் கொண்டிருக்கிறது.

மக்கள் விழிப்பு பெற்றே தீருவார்கள்! ஊழல் கூட்டம் அதற்குரிய விலையைக் கொடுத்தே தீர வேண்டும்!

A முதல் Z வரை மோடி ஆட்சியில் என்னென்ன ஊழல்கள் நடந்திருக்கின்றன என்று முன்பு ஓர் இணையதளத்தில் (www.corruptmodi.com) முழுப் பட்டியல் வெளியிட்டிருந்தார்களே! அந்த இணையதளத்தை எல்லாம் முடக்கிவிட்டோம், மற்ற ஊடகங்களை வாயடைத்துவிட்டோம் என்ற தைரியத்தில் பேசுகிறார்களோ? அந்த விவரங்கள் எல்லாம் அழிந்து விடவில்லை. இன்னும் பல ஊடகங்கள் வாயிலாகப் பாதுகாக்கப்பட்டே உள்ளன. மக்கள் விழிப்புப் பெற்றே தீருவார்கள்! ஊழல் கூட்டம் அதற்குரிய விலையைக் கொடுத்தே தீர வேண்டும்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை      

23.6.2026           

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *