திருவள்ளூர் – பெரியபாளையம் வாயுக் கசிவு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு

2 Min Read

திருவள்ளூர், ஜூன் 23- திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் ஏற்கெனவே 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (22.6.2026) மேலும் 6 பெண்கள் உயிரிழந்தனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள ‘செயின்ட் பீட்டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற நிறுவனம், இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் இரவு, பகல் என 2 கால முறைகளில் (ஷிப்ட்களில்) பணியாற்றி வந்தனர்.

வாயுக்கசிவு

கடந்த 21ஆம் தேதி காலை 120 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அமோனியா வாயு தொட்டியில் இருந்து குளிர்சாதனப் பிரிவுக்கு செல்லும் குழாயின் வால்வு பகுதி பெரும் சத்தத்துடன் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு வாயு கசிவு ஏற்பட்டது. சில நிமிடங்களில் தொழிற்சாலையின் முதல்தளம் முழுவதும் அமோனியா வாயு பரவியது.

இதனால், பணியில் இருந்த தொழிலாளர்கள் மற்றும் அருகில் உள்ள தங்குமிடங்களில் தூங்கிக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட 77 பேர் மயக்கம் அடைந்தனர். பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல், வாய் மற்றும் மூக்கில் ரத்தக்கசிவு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. வாயுவின் நச்சுத்தன்மை காரணமாக பலர் குளியலறை பகுதிக்கு சென்று மயங்கி கிடந்தனர். இதனால் பதற்றமான சூழல் உருவானது.

பெரியபாளையம் காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் நிறுவன ஊழியர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் பிற வாகனங்கள் மூலம் மஞ்சங்காரணை வேல்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சிறுணியம் வெங்கடேஸ்வரா மருத்துவமனை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

8 ஆக உயர்வு

இதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜுமானி ஜுவாங் (19), மாலோதி (20) ஆகியோர் உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஷிபானி (22), திலோமினி (20), கீதா ஜுங்கா (24), பர்பாவதி ஜுங்கா (19), ஷம்படி ஜுங்கா (23), பூர்ணிமா ஜுங்கா (19) ஆகிய 6 பெண்கள் நேற்று உயிரிழந்தனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் 8 பேரும் ஒடிசாவைச் சேர்ந்த பெண்கள்.

தற்போது 67-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 27 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை அமைச்சர் ராஜீவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், வி.சி.க. தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் மற்றும் ஒடிசா மாநில தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் சந்தித்து ஆறுதல் கூறினர். தொழிற்சாலையில் இருந்த சுமார் 1.5 டன் அமோனியா வாயுவை பாதுகாப்பாக அகற்றும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *