கட்சி மாறுபவர்களால் கட்சிக்கு நன்மையே!

சென்னை, ஜூன் 23 ‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’ என்னும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஆய்வுத் தொடர்ப் பொழிவினை ஆற்றி வருகிறார். முதல் பொழிவு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்திலும், இரண்டாவது பொழிவு பெரியார் நூலக வாசகர் வட்டத்திலும் நடைபெற்றது. அந்த வரிசையில் மூன்றாவது பொழிவினை நேற்று (22.06.2026) மாலை புதுமை இலக்கியத் தென்றலின் 1100 ஆவது நிகழ்வில் ஆற்றினார்.
சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் மன்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் துணைச்செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை வரவேற்புரையாற்றினார். புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பின் தலைவர் பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் அவர்கள் தலைமை உரையாற்றினார். ‘இனி பெரியார் நூலக வாசகர் வட்டத்திலும் புதுமைஇலக்கியத் தென்றல் நிகழ்விலும் ‘விடுதலை’யில் வெளிவரும் அறிக்கைகள் மற்றும் தலையங்கங்கள் படித்துக் காட்டப்பட வேண்டும்’ என்ற கழகத் தலைவர் தமிழர் தலைவரின் கட்டளைப்படி ‘பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு காரணமாக ஏற்பட்டுள்ள சமூக அநீதி’யை விளக்கி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நேற்று (21.6.2026) எழுதியுள்ள அறிக்கையை கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அனைவருக்கும் படித்துக் காட்டினார்.

தொடர்ந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் அண்மையில் எழுதப்பட்ட மூன்று புத்தகங்கள் மேடையில் வெளியிடப்பட்டன. தமிழர் தலைவர் ஆசிரியர்அவர்களிடமிருந்து தமிழ்நாடு மூதறிஞர் குழுவின் செயலாளர் முனைவர் த.கு. திவாகரன் அவர்கள் ‘‘தமிழ்நாட்டை பாலைவனமாக்க மேகதாது அணையா?’’ என்னும் புத்தகத்தையும், பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், ‘‘நீட் தேர்வு ஒரு நிரூபிக்கப்பட்ட பச்சை மோசடி!’’ என்னும் புத்தகத்தையும், கழகத்தின் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, கழகத் துணைப் பொதுச்செயலாளர் வழக் குரைஞர் சே.மெ.மதிவதனி ஆகியோர் ‘‘33% மகளிர் இட ஒதுக்கீடும் பாஜக (ஆர்.எஸ்.எஸ்.) அரசின் ஏமாற்று வித்தைகளும்’’ என்னும் புத்தகத்தையும் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து மிகக் குறைந்த விலையில் வெளியிடப்பட்டுள்ள இப்புத்தங்களை மற்ற தோழர்கள் பெற்றுக் கொண்டனர்.
பின்னர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமது ஆய்வுச் சொற்பொழிவை ஆற்றினார். அப்போது அவர் 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாணப் பொதுத் தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியடைந்த நிலையில் அக்கட்சியிலிருந்து விலகி பலர் காங்கிரஸில் சேர்ந்த போது, ‘குடிஅரசு’ ஏட்டில் 25.04.1937 அன்று எழுதிய “கட்சி மாறுதல்” என்னும் தலைப்பிலான கட்டுரையை எடுத்துக்காட்டி சுவையாக விளக்கினார்.
அப்போது, “நாம் இரண்டு விதத்தில் மகிழ்ச்சியடையக் கடமைப்பட்டிருக் கிறோம் என்னவென்றால் ஒன்று நம்மை விட்டுப் பிரிந்தது. மற்றொன்று இந்த உபத்திரவங்கள் நம் எதிரிகளைப் போய் பற்றினது. இன்னும் சிலர் நம்மைவிட்டுப் போக வேண்டியவர்கள் நமக்குள் இருக்கிறார்கள். அவர்களும் போய் விடுவார்களேயானால் ஜஸ்டிஸ் கட்சிக்கு மிகவும் நன்மை செய்தவர்களாவதோடு கட்சியின் நன்றிக்குப் பாத்திரமானவர்களாவார்கள்” என்பதை படித்து விளக்கிய போது அரங்கம் சிரிப்பொலியால் அதிர்ந்தது.
இறுதியாக வட சென்னை மாவட்டத் திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் நன்றியுரையாற்றினார்.
இந்த நிகழ்வில் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், புதுமை இலக்கிய தென்றலின் நெறியாளர் புலவர் வெற்றியழகன், செயலாளர் பேராசிரியர் தனராஜ், பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் பொருளாளர் ஜனார்த்தனன், திராவிடர் கழகத் தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், ஆவடி மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன், ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன், வடசென்னை மாவட்டச் செயலாளர் புரசை அன்புச்செல்வன், திராவிடர் கழக மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் வி.கே.ஆர்.பெரியார் செல்வி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் இயக்குநர் மு.பசும்பொன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.
