மறுமணம் என்பது வெட்கக்கேடு அல்ல, அது உரிமை சார்ந்தது!

சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்கும் நோக்கில் “அறிவுறுத்தல்கள் அடங்கிய” சுற்றறிக்கையை முதன்முதலாக 1813ஆம் ஆண்டில் “மிண்டோ” என்னும் ஆங்கிலேயப் பிரபு ஒருவர் லண்டனுக்கு அனுப்பியிருக்கிறார். ஆனால், அந்தச் சுற்றறிக்கை அந்த வழக்கத்தை மொத்தமாக ஒழிக்கும் தீவிரத் தன்மையில் இல்லை என்பதையும், ‘இந்துகளின்’ உணர்வுகளைப் புண்படுத்தாமல் விதவைகளை காப்பாற்ற இயலும் என்னும் அவரது நம்பிக்கையும் இணைந்தே அந்தச் சுற்றறிக்கை இருந்திருக்கிறது.

பெரும்பாலும் உயர்ஜாதி இந்துகளின் வழக்கங்களில் ஒன்றாகவே கடைபிடிக்கப்பட்ட, ‘கணவன் இறந்தப் பிறகு உடன்கட்டை ஏறுதல்’ என்னும் கொடூரம் குறித்து ஆவணங்களின்படி முதன்முதலில் கேள்விக்குட்படுத்திய ஆண்டாக 1813அய் சொல்கிறார்கள். அதன்பிறகு படிப்படியாக 1817, 1821, 1828, 1829 என்றெல்லாம் பெரும் விவாதங்கள் நடைபெற்றுள்ளன. இறுதியாக 1829 டிசம்பரில் வில்லியம் பெண்டிங்க் பிரபுவால் சதி என்னும் உடன்கட்டை ஏறுதல் சட்டவிரோதம் என அறிவிக்கபடுகிறது. (தகவல்: ‘ஜாதிப் பெருமை’ புத்தகத்தில் இருந்து)

இதெல்லாம் நடைபெற்று சரியாக ஒரு நூற்றாண்டுகள் கழித்து தந்தை பெரியார் தனது “பெண் ஏன் அடிமையானாள்?” புத்தகத்தில் 1921இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி

1 வயதுள்ள விதவைகள்  – 597

1 முதல் 2 வயதுள்ள விதவைகள் – 494

2 – 3 வயதுள்ள விதவைகள் – 1257

3 – 4 வயதுள்ள விதவைகள் – 2837

4 – 5 வயதுள்ள விதவைகள் – 6707

5 – 10 வயதுள்ள விதவைகள் – 85937

10 – 15  வயதுள்ள விதவைகள் – 2,32,147

15 – 20 வயதுள்ள விதவைகள் – 3,96,172

20 – 25 வயதுள்ள விதவைகள் – 7,42,820

25 – 30 வயதுள்ள விதவைகள் – 11,63,720

ஆகமொத்தம்  – 26,32,688

என்னும் பட்டியல் ஒன்றைத் தருகிறார்.

இந்தக் கணக்கில் தற்போது குழந்தை விதவைகளின் பட்டியல் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாமே தவிர, (அதுவும் எங்காவது ஒன்றிரண்டு இருக்கவும் செய்யலாம்.) இருபது வயதுக்கு மேல் இருக்கும் விதவைகளின் பட்டியல் கணிசமாகவே இருக்கக் கூடும். காரணம் ‘விதவை’ என்னும் சொல்லுக்கு இணையாக ஆண்களைக் குறிக்கும் ஒரு சொல் கிடையவே கிடையாது. தமிழிலும் அதுதான் நிலை. கைம்பெண் என்னும் சொல்லுக்கு இணையாக ஆண்களைக் குறிக்கும் சொல் இல்லவே இல்லை.

இப்படியான சூழலில்தான் “நூறு சாமி” திரைப்படம் மிக நுட்பமான பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது தமிழ் திரையுலகில்! மறுமணம் தவறல்ல எனப் பொதுவெளியில் பேசத் தொடங்கி ஒரு நூற்றாண்டுகள் தான் ஆகியிருக்கக் கூடியச் சூழலில், ஆணாதிக்க மனோநிலையில் இருந்து மட்டுமே பேசப்பட்டு வந்த தியாக மனப்பான்மை மறுமணத் திரைபடங்களுக்கு மத்தியில் பெண்ணின் அக – புற உணர்வுகளுடன் கூடிய அதி முக்கியத்துவம் வாய்ந்த வெகுசனத் திரைப்படமாக வெளி வந்திருகிறது ‘நூறு சாமி’ திரைப்படம்.

மனிதர்களின் அடிப்படைத் தேவையில் காதலையும், காமத்தையும் சேர்க்காத ஒரே சமூகக் கூட்டமாகத் திகழும் இந்தச் ஸநாதனச் சமூகக் கட்டமைப்பில், காதலையும் காமத்தையும் வெளிப்படையாகப் பேசக் கூட இயலாத சூழலிற்கு மட்டுமே பழக்கப்படுத்தப்பட்டிருக்கும் கூட்டத்தில் இருந்து, ‘அதெல்லாம் கூடாது, காதலும், காமமும் அவசியமான அத்தியாவசியமான ஒன்றுதான்’ என்பதை புரிய வைக்கின்ற இடம் ஒன்று இருக்கிறதுதானே, அந்த இடத்தைக் கச்சிதமாகப் பொருத்தியிருக்கிறார் இயக்குநர் சசி!

சசியின் அத்தனைப் படைப்புகளும் செய்திகளான உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதை அவரது முதல் திரைப் படமான “சொல்லாமலே” முதலே நம்மால் உணரமுடியும். அந்த உண்மைதான் நம்மை நெருங்கவும் விரும்பவும் வைக்கிறது. அந்த வகையில் “நூறு சாமி” திரைப்படம் நுட்பமான அரசியலையும் சிந்திக்கும் திறனையும் பார்வையாளர்கள் மத்தியில் கடத்தியிருக்கிறார் என்றால் அது மிகையல்ல.

எதற்கும் ஓர் தொடக்கம் வேண்டும்தானே. பெரும்பாலும் பிரபலங்கள் மத்தியில் மட்டுமே காணக் கிடைத்துக் கொண்டிருந்த குழந்தைகளுடன் கூடிய திருமணக் காட்சிகள், கடந்த சில ஆண்டுகளாக ஆங்காங்கே நடைபெறத் தொடங்கியிருக்கின்றன. அதுவும் ‘மாங்கல்ய’ சடங்குகளுடன் கூடிய ஸநாதன முறைகளின் படியேயும் கூட நடைபெறத் தொடங்கி யிருகின்றன. ஆனால், அந்த இணையேற்புகள் அனைத்திலும் குழந்தைகளின் வயது என்பது அதிகபட்சம் 15 வயதுக்குள்ளாகவே மட்டுமே இருப்பதைக் காண இயலும்.

அதனால்தான், 20 வயதைக் கடந்த அண்ணன் – தம்பியால், தங்களது அம்மாவிற்கு இணையேற்பு செய்து வைக்கப்பட்ட சம்பவம் செய்திகளாக்கப்பட்டு கொண்டாடவும் செய்யப்பட்டது. அதேநேரம் வழக்கம் போல அடிப்படைவாதிகளால் தூற்றவும் பட்டது. ஆனால், அவை கொண்டாடப்பட வேண்டுமே தவிர தூற்ற அல்ல. கூடவே இதுபோன்ற திருமணங்களை இயல்பாய் மாற்ற வேண்டியது ஒவ்வொரு மனிதரின் சமூகக் கடமையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை இந்தச் சம்பவத்தின் காரணக்கர்த்தாவான சித்தார்த் கருணாநிதியும், அவரது தம்பியும், அதனை தனக்கே உரித்தான மென் அழகியலோடு காட்சிப் படுத்திருக்கும் இயக்குனர் சசியும் மிகப் பெரிய  பாராட்டுக்குறியவர்கள்.

இங்கே மறுமணம் என்பது வெட்கக்கேடு அல்ல, அது உரிமை சார்ந்தது. இழத்தல், பிரிதல், தனிமை எல்லாம் எவ்வாறு இயல்பு எனப் பார்க்கப்படுகிறதோ அதேபோன்றுதான் தனக்கு விருப்பமான இணையைத் தேர்ந்தெடுத்தலும், சேர்ந்து இணையாகப் பயணிப்பதும், அதற்கு வயது முதல் உறவுகள், ஊர்கள் என எதுவும் தடைகிடையாது என்பதை ஆணித்தரமாக பதிவு செய்திருக்கும் அசலான அழகான பெரியாரியத் திரைப்படம் தான் இந்த “நூறு சாமி”.

– இனியன் (குழந்தைகள் செயல்பாட்டாளர்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *