வேலூர், ஜூன் 22- மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு நலன்களைப் பாதுகாக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மேகதாது அணை
“சட்டமன்றத்தில் முதலமைச்சர் முன்மொழிந்துள்ள தீர்மானம் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மேகதாது அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதிக்கக் கூடாது என்பதை புதியதாக பொறுப்பேற்ற முதலமைச்சர் தெளிவுப்படுத்தி இருக்கிறார். அதனை உறுதிப்படுத்துவதற்கான தீர்மானமாக தான் இதை பார்க்கிறோம்.”
“அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்? அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து எவ்வாறு செயல்பட வேண்டும்? மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாடு எந்தளவு பாதிக்கப்படும்? விவசாயிகள் மட்டுமின்றி குடிநீருக்கு மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என கவலை மேலோங்கி இருக்கிறது.
அனைத்துக் கட்சிக் கூட்டம்
எனவே இதை விவாதிக்க வேண்டியது தவிர்க்க முடியாத ஒரு தேவை. அனைத்துக் கட்சிகளும் எவ்வளவு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், தமிழ்நாடு நலன்களை முன்னிறுத்தி ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது.
எனவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவது அவசிய மானது. தமிழ்நாடு நலன்களுக்கு உகந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்” என தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார்.
