சென்னை, ஜூன் 22- வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று FMGE தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ளகப் பயிற்சி (Internship) இடம் கிடைக்காமல் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.
மாதக்கணக்கில் காத்திருக்கும் மாணவர்கள் அரசின் உடனடி நடவடிக்கைக்கு கோரிக்கை விடுத் துள்ளனர்.
என்ன பிரச்சினை?
ரஷ்யா, சீனா, பிலிப்பைன்ஸ், உக்ரைன் உள்ளிட்ட வெளி நாடுகளில் MBBS முடித்த இந்திய மாணவர்கள், இங்கு மருத்துவராக பதிவு செய்ய தேசிய மருத்துவ ஆணையம் (NMC) நடத்தும் FMGE தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தேர்ச்சி பெற்ற பிறகு, இந்தியாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 12 மாத கட்டாய உள்ளகப் பயிற்சியை முடித்தால் மட்டுமே நிரந்தர மருத்துவப் பதிவு கிடைக்கும்.
ஆனால், தமிழ்நாட்டில் FMGE தேர்ச்சி பெற்ற 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த 8 மாதங்களாக உள்ளகப் பயிற்சிக்காக காத்திருக்கின்றனர். மருத்துவக் கல்லூரிகளில் போதிய இடங்கள் ஒதுக்கப்படாததே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
மாணவர்கள் குமுறல்
“5 ஆண்டுகள் வெளிநாட்டுல படிச்சுட்டு, FMGE-யும் கஷ்டப்பட்டு பாஸ் பண்ணிட்டோம். இப்போ இன்டர்ன்ஷிப் கிடைக்காம எங்க வாழ்க்கையே முடங்கி கிடக்கு” என்கிறார் திருச்சியைச் சேர்ந்த மாணவி பிரியா.
“உள்ளூர் மாணவர்களுக்கு உடனே இன்டர்ன்ஷிப் கிடைக்குது. நாங்க மட்டும் ஏன் மாதக்கணக்கா காத்திருக்கணும்? எங்களுக்கு Stipend-ம் தர மாட்டேங்குறாங்க. கடன் வாங்கி படிச்சுட்டு இப்போ வேலைக்கும் போக முடியாம, மேல்படிப்பு படிக்கவும் முடியாம தவிக்கிறோம்” என வேதனை தெரிவிக்கின்றனர் மாணவர்கள்.
இடநெருக்கடிக்கு
காரணம் என்ன?
தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஒவ்வொரு கல்லூரியிலும் உள்ளூர் MBBS மாணவர்களுக்கே இன்டர்ன்ஷிப் இடங்கள் சரியாக இருக்கும் நிலையில், வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு கூடுதலாக இடம் ஒதுக்குவதில் நடைமுறை சிக்கல் உள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
NMC விதிப்படி, ஒரு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட மொத்த இடங்களில் 7.5 சதவீதம் இடங்களை மட்டுமே FMGE மாணவர்களுக்கு ஒதுக்க முடியும்.
மாணவர்கள் கோரிக்கை
இடங்களை அதிகரிக்க வேண்டும்: அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமின்றி, மாவட்ட தலைமை மருத்துவ மனைகள், தகுதியுள்ள தனியார் மருத்துவ மனைகளிலும் இன்டர்ன்ஷிப் செய்ய அனுமதிக்க வேண்டும்.
ஒற்றைச் சாளர முறை: தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் மூலம் வெளிப்படையான கலந்தாய்வு நடத்தி இடங்களை ஒதுக்க வேண்டும்.
Stipend வழங்க வேண்டும்: உள்ளூர் மாணவர்களுக்கு வழங்குவது போல FMGE மாணவர் களுக்கும் மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும்.
இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகளிடம் கேட்டபோது, “மாணவர்களின் கோரிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. NMC வழிகாட்டுதல்படி கூடுதல் இடங்களை உருவாக்குவது குறித்து ஆலோசித்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும்” என்றனர்.
லட்சக்கணக்கில் செலவு செய்து மருத்துவம் படித்துவிட்டு, பயிற்சி செய்ய இடம் கிடைக்காமல் இளம் மருத்துவர்கள் தவிப்பது சுகாதாரத்துறைக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
