மதுரை, ஜூன் 21- தனியார் கல்வி நிறுவனங்களில் ஜாதி மற்றும் சமூக விவரங்களை சேகரிக்கத் தடை கோரிய வழக்கில், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறை முதன்மை செயலர்கள் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், இனாம் ரெட்டியபட்டியை சேர்ந்த விக்ரமன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் ஜாதி கேட்கக் கூடாது என விதி உள்ளது. இதை மீறி கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின்போது விண்ணப்பதாரர்களின் ஜாதி மற்றும் சமூக விவரங்களை கட்டாயமாகக் கேட்பது மாணவர்கள் தேர்வு மற்றும் சேர்க்கைச் செயல்முறைகளில் பாகுபாடு ஏற்பட வழிவகை செய்யும்.
எனவே, தமிழ்நாட்டில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் விண்ணப்பப் படிவங்களில் ஜாதி அல்லது சமூக விவரங்களை கட்டாயமாகச் சேகரிக்கத் தடை விதிப்பதோடு, தனியார் நிறுவனங்களில் பாகுபாடு இல்லாத சூழலை உறுதி செய்திட உரிய ஒழுங்கு முறைகளை வகுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை 19.6.2026 அன்று விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர், ‘‘விண்ணப்பத்தில் கேட்கும் ஜாதிய விவரங்களை கட்டாயமாக பெறக் கூடாது என்பது குறித்து கல்வி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதா’’ என கேள்வி எழுப்பினர்.
பின்னர், மனுவிற்கு பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை முதன்மை செயலர்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
