‘‘உலக பூமிப் பந்தின் எந்த இடத்தில், மனித குலத்தினுடைய உரிமைகள் பறிக்கப்பட்டாலும், அந்த இடத்தில்
உரிமைக் குரல் ஒலிக்கக் கூடிய என்னுடைய இயக்கம், உலகளாவிய இயக்கமாக மாறும்!’’
‘‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்’’ என்பது இதன்மூலம் உறுதியாகிறது
சென்னை, ஜூன் 21 ‘‘உலக பூமிப் பந்தின் எந்த இடத்தில், மனித குலத்தினுடைய உரிமைகள் பறிக்கப்பட்டாலும், அந்த இடத்தில் உரிமைக் குரல் ஒலிக்கக் கூடிய என்னுடைய இயக்கம், உலகளாவிய இயக்கமாக மாறும்’’ என்று அவர் சொல்லும்போதுதான், ‘‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்’’ என்பது உறுதியாகிறது என்று தந்தை பெரியார் சொன்னதை சுட்டிக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–2)
கடந்த 11.6.2026 அன்று மாலை 6.30 மணியளவில், சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில், பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல், திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில், ‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–2) என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
சர்.ஆர்.கே. சண்முகம்
இந்தக் கொள்கைகள் எப்படி நிலையாயின?
சர்.ஆர்.கே. சண்முகம் அவர்களை உங்களுக்கெல்லாம் தெரியும். அகில உலகப் புகழ் பெற்றவர். இந்தியா வினுடைய முதல் நிதியமைச்சர் என்றுதான் பல பேருக்குத் தெரியும். அவர், சுதந்திர இந்தியாவின் முதல் வரவு – செலவு திட்டத்தை (Budget) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பெருமைக்குரியவர்.

அவர் ஒரு சிறந்த பொருளாதார மேதை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்த இயக்கங்களிலும் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் (Self-Respect Movement) தொடக்க காலத்திலிருந்தே அவரோடு நெருங்கிப் பயணித்தவர். பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளையும், சமூக நீதி கருத்துகளையும் ஆதரித்தவர். நீதிக்கட்சியில் (Justice Party) முக்கியப் பங்காற்றியவர் மட்டுமல்ல, சுயமரியாதை இயக்கத் தலைவராகக்கூட ஒரு கட்டத்தில் இருந்தவர். இது பலருக்குத் தெரியாத உண்மை.
1932-ஆம் ஆண்டு கனடா நாட்டின் ஒட்டாவா (Ottawa) நகரில் நடைபெற்ற ‘Imperial Economic Conference’ (உலகப் பொருளாதார நிபுணர்கள் மாநாடு) என்ற புகழ்பெற்ற மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாக ஆர்.கே. சண்முகம் செட்டியார் கலந்து கொண்டார். அங்கு அவர் ஆற்றிய உரை மற்றும் முன்வைத்த பொருளாதார தத்துவங்கள், உலகளாவிய பொருளாதார நிபுணர்கள் மற்றும் உலக நாடுகளின் தலைவர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
ஆரிய ஆணவம் எப்படிப்பட்டது?
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஆர்.கே.சண்முகத்தை கேலி செய்வதற்காக, அந்தக் காலத்தில் ‘ஆனந்தவிகடன்’ இதழில், ‘செக்கு’ படம் போட்டனர். காரணம் அவர் வாணியச் செட்டியார் என்பதைக் குறிப்பதற்காக. அந்த ஆரிய ஆணவம் எப்படிப்பட்டது என்பதைத் அதன்மூலம் தெரிந்துகொள்ளலாம்.
அப்பேர்ப்பட்ட உலக நிபுணர், ‘தமிழர் தலைவர்’ புத்தகத்திற்காக கொடுக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பில், அவர் அய்யாவைப்பற்றிச் சொல்லுகிற போது, இந்தச் சிந்தனைக் கூர்மை எப்படிப்பட்டது என்பதைப்பற்றித் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

அதைக் கேளுங்கள்:
‘‘ராமசாமிப் பெரியார் அவர்களது இந்த அருமையான வாழ்க்கை வரலாற்றிற்கு ஒரு முன்னுரை எழுதுவதைக் கிடைத்தற்கரிய ஒரு பெருமையென்றே கருதுகிறேன். பெரியார் அவர்களுடைய பொதுநலத் தொண்டுகள் பலவற்றில் நான் நெருங்கிக் கலந்திருக்கிறேன் என்பது மட்டுமல்லாமல், அவர்களோடு கால் நூற்றாண்டுக்கு மேல் அந்யோந்யமாகப் பழகக் கூடிய நல்ல அதிர்ஷ்டத்தையும் பெற்றிருக்கிறேன். இந்தியாவில் இன்று பொது வாழ்வில் உள்ள மிக முக்கியமான பிரபலஸ்தர்களில் பெரியார் அவர்களும் ஒருவர் என்பதைத் தயங்காமற் கூறுவேன். சென்ற 25 ஆண்டுகளாக இந்நாட்டின் பொதுவாழ்வில் முக்கிய மான பங்கெடுத்துக் கொண்டிருப்பவர்களில் மிகப் பேர் பெற்ற தலைவர்கள் அநேகருடன் நெருங்கிப் பழகியுள்ள காரணத்தைக் கொண்டே நான் மேற்கண்ட கருத்தை அழுத்தமாய்த் தெரிவிக்கிறேன்.
பெரியார் நம்முடைய மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவராவார்!
செய்கையில் உண்மை, நீதியை நிலைநாட்டுவதில் அடங்கா ஆர்வம், சிறிதும் தன்னலமென்பதே இல்லாத வாழ்க்கை – இவையே ஒரு மனிதனைச் சிறந்தவனாக ஆக்கக் கூடியனவென்றால், உண்மையிலேயே பெரியார் நம்முடைய மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவராவார். நாட்டிற்குத் தொண்டு புரிவதற்காகவே தம்முடைய வாழ்க்கையைப் பயன்படுத்துவதிலுள்ள அவரது ஆர்வமும், இந்திய சமுதாயத்திலுள்ள கேடுகளை ஒழிப்பதற்காக, அவற்றுக்கெதிராய்ச் செய்து வரும் பிரச்சார முறைகளும், அவற்றின்மீது அவருக்குள்ள நியாயமான கோபாவேசமும், இக்காரணங்களுக்காக அவர் செய்துள்ள மகத்தான தியாகங்களும், தமிழ்நாட்டு மக்களின் உள்ளத்தில் பெரியாருக்கு ஒரு நிரந்தரமான இடங்கிடைக்குமாறு செய்துவிட்டன. நமது நாட்டைப் போன்ற பெரும் பரப்பான ஒரு நாட்டில், குறிப்பிட்ட அளவான துறைகளில், உண்மையான தேசத் தொண்டு செய்வதற்கு இடமிருக்கிறது. பெரியார் அவர்கள் சிறப்பாகத் தமிழ்நாட்டிற்குள் மட்டும் தமது வேலையைச் செய்வதென்று நிர்ணயித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், இக்குறிப்பிட்ட எல்லைக்குள் அவர்கள் செய்யும் தொண்டானது, அரசியல், சமூகம், பொருளாதாரம், மதம் ஆகிய பொது வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் மிகமிகத் தீவிரமான முறையென்றே சொல்ல வேண்டும். தாம் மேற்போட்டுக் கொண்ட இவ்வேலையினின்றும், அகில இந்தியத் தலைமை என்னும் பேராசைகளால் அவர் எக்காலத்திலும் இழுக்கப்பட்டதே இல்லை’’ என்று எழுதியிருக்கிறார்.
இன்னொரு செய்தி, ஆர்.கே.சண்முகம் – காந்தியார் சந்திப்பின்போது, காந்தியார் அவர்கள், ஆர்.கே.சண்மு கத்தைப் பார்த்து, ‘‘மிஸ்டர் சண்முகம் செட்டி, ப்ளீஸ் கம் ஹியர், இவ்வளவு இன்டெலிஜென்ட்டா, இவ்வளவு வேகமாகப் பேசுறீங்களே, இவ்வளவுக் கூர்மையான உங்களுக்கு யார் குரு? என்று நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்’’ என்று கேட்கிறார்.
இந்தக் கேள்வியை காந்தியார் கேட்ட உடனே, ஆர்.கே.சண்முகம் அவர்கள், ‘‘எனக்குக் குரு என்று ஒருவரும் கிடையாது. ஆனால், எனக்கு ‘மெண்டார்’ அதாவது என்னை ‘ஷேப் பண்ணி’ பல விஷயங்களை ‘டிஸ்கஸ்’ பண்றது யார் என்றால், ஈ..வெ.ராமசாமி நாயக்கர்’’ என்றார்.
‘‘ஓ, யூ மீன் மிஸ்டர் ராமசாமி நாயக்கர்’’ என்று காந்தியார் கேட்கிறார்.
‘‘எஸ்’’ என்று ஆர்.கே.சண்முகம் அவர்கள் சொல்கிறார்.
திரு.வி.கல்யாணசுந்தரம்!
அதேபோல ரொம்ப நெருக்கமாக தந்தை
பெரியாரோடு பழகிய அறிஞர்களில் ஒருவர்தான்,
திரு.வி.க. அவர்கள்.
திரு.வி.க.வும், தந்தை பெரியார் அவர்களும் ‘‘சண்டை போடும் நண்பர்களாக’’, கொள்கை எதிரிகளாக கடைசி வரையில் இருந்தாலும், நட்புக்கு இலக்கணமாக அவர்களுடைய நட்பு இருந்தது!
ஒரே ஒரு செய்தியை மட்டும் சொல்கிறேன், நான் எடுத்துக்கொண்ட செய்திகளுக்கே நேரமாகிவிட்டது. இன்னும் விஷயத்துக்கே வரவில்லை. பட்டறைக்குதான் நாம் போயிருக்கோம்; பட்டறையை விளக்கிச் சொல்வ தற்கே சரியாகப் போயிற்று. இனிமேதான் கூர்மைக்கே வர வேண்டும்.
ஆகவே, அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்
திரு.வி.கல்யாணசுந்தரனாருடைய தமிழ்த் தென்றல் நடை என்பது மிக அற்புதமான நடையாகும். படிக்க, படிக்க, படிக்க நம்மை மறந்து, நமது நெஞ்சில் ஊறிப் பரிணமித்துக் கொண்டிருக்கக்கூடிய அற்புதமான நடையாகும்.
‘தமிழர் தலைவர்’ புத்தகத்தில் அவர் சொல்கிறார்,
‘‘ஈ.வெ.ரா.வின் தொண்டு கல்விச் செல்வத்தினின்றும் அரும்பியதா? பொருட் செல்வத்தினின்றும் மலர்ந்ததா? இக்காலச் சூழ்ச்சியினின்றும் காய்த்ததா?
தோழர் இராமசாமியார் பல நூல் பயின்றவரல்லர்; அவர் செல்வராயினும் எளிமையில் நின்று பழகியவர்; இக்காலச் சூழ்ச்சியே அவருக்குத் தெரியாது. அவர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவர். பின்னை, எதனின்றும் ஈ.வெ.ரா.வின் தொண்டு கனிந்தது?
ஈ.வெ.ரா.விடம் ஒருவித இயற்கைக் கூறு அமைந்துள்ளது. அதனின்றும் அவரது தொண்டு கனிந்தது. அஃதென்ன? அஃது வளர்ந்து செல்லும் பேறு. இப்போது பலருக்கு வாய்ப்பதில்லை. மிகச் சிலர்க்கே வாய்க்கும்.
அகவுணர்வு வளர்ச்சிக்கு ஊற்று எது? அஞ்சாமை. அஞ்சாமைக்குத் தோற்றுவாய் எது? உரிமை வேட்கை’’ என்று எழுதியிருக்கிறார்.
என்னுடைய இயக்கம் உலகளாவிய இயக்கமாக மாறும்!
பெரியாருடைய உரிமை வேட்கை எப்படிப்பட்டது? அன்றிலிருந்து அவர் மறைகின்ற வரையில். இன்றைக்கும் அதனுடைய தொடர்ச்சிதான்; அந்த உரிமை வேட்கையினால்தான், நாம் சபிக்கப்படுகிறோம், நாம் வீழ்த்தப்படுவதில்லை. எங்கே உரிமை பறி போனா லும், உள்ளூரில் இருக்கலாம், உலகத்தில் இருக்கலாம், ஆஸ்திரேலியாவில் இருக்கலாம், அமெரிக்காவில் இருக்கலாம், உலக பூமிப் பந்தின் எந்த இடத்திலும், மனித குலத்தினுடைய உரிமைகள் பறிக்கப்பட்டாலும், அந்த இடத்தில் ‘‘உரிமைக் குரல் ஒலிக்கக் கூடிய என்னுடைய இயக்கம் உலகளாவிய இயக்கமாக மாறும்’’ என்று அவர் சொல்லும்போதுதான், ‘‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்’’ என்பது உறுதியாகிறது.
மேலும் திரு.வி.க. அவர்கள்,
‘‘உரிமை வேட்கை ஓங்க ஓங்க அஞ்சாமை எழுந்து பெருகும்; அஞ்சாமை பெருகப் பெருக அகவுணர்வு வளர்ந்து கொண்டே போகும்; அகவுணர்வு வளர்ச்சி யினூடே பிறங்கி வருவது உண்மையும், வாய்மையும், மெய்ம்மையும் செறிந்த அறத்தொண்டு.
உரிமை வேட்கை, அஞ்சாமை முதலியன ஈ.வெ.ரா.வின் தோற்றத்திலேயே பொலிதல் வெள்ளிடை மலை’’ என்று எழுதுகிறார்.
அவரை பார்த்தாலே, ஒரு கம்பீரம் – சிங்கத்தைப் பார்ப்பது போல இருக்கும் என்கிறார். அதை எப்படி உருவகப்படுத்துகிறார் பாருங்கள், யார்? அவரோடு நெருங்கிப் பழகியவர்.
‘‘நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து பெற்றெடுத்த குழந்தைதான் சுயமரியாதை இயக்கம்!’’ – திரு.வி.க.
சுயமரியாதை இயக்கம்பற்றிக் குறிப்பிட்டுச் சொன்னார் அவ்வளவு வேறுபாட்டிலேயும், ‘‘நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து பெற்றெடுத்த குழந்தைதான் சுயமரியாதை இயக்கம். ஆனால், அது தாயிடம் வளர வில்லை. தந்தையிடமே வளர்ந்தது’’ என்று சொன்னார்.
மேலும் சொல்கிறார் திரு.வி.க. அவர்கள்,
‘‘அறத்தொண்டு கனிந்த வாழ்வினர் இன்னாரென்று எப்படி அறிதல் கூடும்? அதற்குச் சில அறிகுறிகளுண்டு. அவை நட்பிடைக் குய்யம் வையாமை; கருத்து வேற்றுமை காரணமாகக் காழ்ப்புக் கொண்டு பகைமை கொள்ளாமை; வருங்கால முணர்ந்து கடனாற்றல்; காலத்துக்கேற்ற சீர்திருத்தஞ் செய்ய முனைதல்’’ என்றார்.
அடுத்து தலைவன் என்பவன், தன் காலத்துக்குப் பிறகு நூறு ஆண்டுகள் குறித்தும் சிந்தித்து உணர்த்த வேண்டும். அதற்கு ‘இனிவரும் உலகம்’ ஆதாரம். எனக்கு மிக்க மகிழ்ச்சி என்னவென்றால், நம்முடைய வாழ்நாளில் நாமெல்லாம் பெருமைப்பட வேண்டும்.
பெரியார் சொன்ன கருத்தினை நாமெல்லாம் நேரி டையாக அனுபவிக்கிற தலைமுறையில் இருக்கிறோம். இந்த வாய்ப்பு வேறு யாருக்கும் கிடைக்காது. அது என்னவென்றால், மின்சாரக் கார் வந்துவிட்டது; மின்சாரப் பேருந்து வந்துவிட்டது.
‘இனி வரும் உலகம்!’
‘‘100 ஆண்டுகள் கழித்து மின்சாரத்தில் மோட்டார் வண்டி ஓடும்’’ என்றார் பெரியார் ‘இனி வரும் உலக’த்தில். அவர் என்ன பெரிய விஞ்ஞானியா? ஆனால், அறிவி யல் மேதை அவர். தன் காலத்துக்குப் பிறகு நடைபெறப் போவதைச் சிந்தித்தார். அதனால்தான் மிகப்பெரிய அளவுக்கு அவருடைய சிந்தனை என்பது மிக முக்கியம்.
‘‘இன்னமும் ஏன் கட்டை வண்டி யுகத்தில் இருக்க வேண்டும்? இன்னமும் ஏன் எழுத்தாணி இருக்க வேண்டும்? இன்றைக்கும் ஏன் அதே தமிழ் அதே நிலையில் இருக்க வேண்டும்? ஏன் மொழி சார்ந்த எழுத்துகள் குறையக்கூடாது? வெள்ளைக்காரனின் ஆங்கிலம் போன்று சுருக்கினால்தானே எல்லாருக்கும் வசதி’’ என்று சொன்னார்.
‘‘அய்யோ, மொழியின் சிறப்புப் போய்விடுகிறதே, அதில் போய் கைவைக்கலாமா? பெரியார் என்ன பெரிய மொழி அறிஞரா?’’ என்று எல்லோரும் கேட்டார்கள். அண்மைக்காலம் வாழ்ந்தவர்கள் உள்பட. ஆனால், அதுதான் நமக்குத் தமிழ்க் கணினியை உருவாக்கிக் கொடுத்தது. அதனால்தான் தமிழ் இன்றைக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவுக்குச் செம்மொழியாக இருக்கக்கூடிய வாய்ப்பு கண்டது.
பெரியாரின் நுண்ணறிவு, நமக்குப் பட்டறிவு மட்டுமல்ல; பயனறிவு, கல்வி அறிவு, செயலறிவு! அடுத்துத் தொடர்வோம்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
