தேர்வுகளே வாழ்க்கையின் முடிவு அல்ல! அதற்காக நாம் வாழ்க்கையை முடித்துக் கொள்வதும் நியாயம் அல்ல!
மாணவர்களை இன்னலுக்குள்ளாக்கி, அவர்களின் கனவைப் பறிக்கும் நீட் தேர்வை ஒழிக்கக் களம் காணுவோம் என்று போராடத் துணிந்து வருதலே தீர்வு!
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் நீட் தேர்வுக்கு முடிவு கட்டுவோம்!
தேர்வுகளே வாழ்க்கையின் முடிவு அல்ல! அதற்காக நாம் வாழ்க்கையை முடித்துக் கொள்வதும் நியாயம் அல்ல! மாணவர்களை இன்னலுக்குள்ளாக்கி, அவர்களின் கனவைப் பறிக்கும் நீட் தேர்வை ஒழிக்கக் களம் காணு வோம் என்று போராடத் துணிந்து வருதலே தீர்வு! தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் நீட் தேர்வுக்கு முடிவு கட்டுவோம்! நீட்டுக்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் திராவிடர் கழகம் விரைவில் முன்னெடுக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:
இன்னமும் நீட்டைத் திணித்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜ.க. அரசு!
தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 3 ஆம் தேதி நடந்த நிலையில், அதில் முறைகேடுகள் நடைபெற்று, கேள்வித் தாள் வெளியாகி, நாடு முழுவதும் தேர்வு எழுதிய இளங்குருத்துகள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அடுத்த அதிர்ச்சியாக மறுதேர்வை அறிவித்தது தேசியத் தேர்வு முகமை. அடுத்தடுத்து நடந்த இந்த நிகழ்வுகள், நீட் தேர்வை எழுதி ஓய்ந்திருந்த பிள்ளைகளுக்கு உளவியல் நெருக்கடியை உருவாக்கி, அதனால் கோவையில் அனுகீர்த்தனா தன்னை மாய்த்துக் கொண்ட துயர் தாங்காத நிலையில் இருந்த நம்மை, நேற்று முன்தினம் (19.6.2026) சேலம் எடப்பாடி அருகே வெள்ளாளபுரத்தில் கோபிகா என்ற மாணவியும், நேற்று (20.6.2026) தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் ரோஷ்னி என்ற மாணவியும் தங்களை மாய்த்துக் கொண்டனர் என்ற அதிர்ச்சிச் செய்திகள் நம்மை மேலும் துயருக்கு உள்ளாக்குகிறது. இந்த இடைப்பட்ட நாட்களிலேயே இதுவரை

13-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் காரணமாக தங்களை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுக்க
100–க்கும் அதிகமானோர் நீட் மூலம் ஒன்றிய அரசால் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். ஆனால், இது குறித்து எந்தக் கவலையும் இல்லாமல், இன்னமும் நீட்டைத் திணித்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. அதற்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நீட் தேர்வுக்கு அஞ்சி நம் குழந்தைகள் இத்தகைய முடிவுகளை எடுக்கக் கூடாது என்று மிகுந்த கவலையுடனும், அக்கறையுடனும் கேட்டுக் கொள்கிறோம். பெற்றோர் மிகுந்த விழிப்போடு இருந்து பிள்ளைகளைக் காக்க வேண்டிய நெருக்கடியை ஆளும் ஆர்.எஸ்.எஸ். பாரதிய ஜனதா அரசு நம் மீது திணித்திருக்கிறது.
நீட் தேர்வை ஒழிக்கக் களம் காணுவோம் என்று போராடத் துணிந்து வருதலே தீர்வு!
தேர்வுகளே வாழ்க்கையின் முடிவு அல்ல! அதற்காக மாணவக் கண்மணிகள் வாழ்க்கையை முடித்துக் கொள்வதும் நியாயம் அல்ல! மாணவர்களை இன்னலுக்குள்ளாக்கி, அவர்களின் கனவைப் பறிக்கும் நீட் தேர்வை ஒழிக்கக் களம் காணுவோம் என்று போராடத் துணிந்து வருதலே தீர்வு!
நீட்டுக்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் திராவிடர் கழகம் விரைவில் முன்னெடுக்கும்! தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் நீட் தேர்வுக்கு முடிவு கட்டுவோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
21.6.2026
