புதுடில்லி, ஜூன் 20– நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், அரசு விதித்த தற்காலிகத் தடையை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் டெலிகிராம் நிறுவனத்தின் தரப்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. அந்த மனு டில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக நீட் மறுதேர்வை முன்னிட்டு, வினாத்தாள் கசிவை தடுக்கும் நடவடிக்கையாக டெலிகிராம் செயலிக்கு ஒன்றிய அரசு தற்காலிக தடை விதித்தது. இந்தத் தடையை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் டில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தேஜஸ் கரியா விசாரித்தார்.
இந்த விசாரணையின்போது டெலிகிராம் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், நீட் வினாத்தாள் கசிவு தொடர்புடைய லிங்க்குகளை ஒரு மணி நேரத்திற்குள் அழித்ததாகவும், சில லிங்க்குகளை அழிக்க பெறப்பட்ட மெயில் தொடர்பாக நடவடிக்கை எடுத்து உடனடியாக அது தொடர்பான விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
மேலும் டெலிகிராம் செயலி முடக்கப்பட்டதால் ஆசிரியர்கள், மாணவர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் ஒன்றரை கோடி பயனாளர்களை கொண்டுள்ள டெலிகிராம் செயலியை முடக்கியது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வாதிடப்பட்டது.
அதே சமயம், ஒன்றிய அரசு சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், டெலிகிராம் செயலி தற்போது சைபர் கிரிமினல் குற்றவாளிகளும், பயங்கரவாதிகளும் பயன்படுத்தும் கூடாரமாக மாறியுள்ளது என்றும், டெலிகிராம் செயலியை தற்காலிகமாக முடக்கியது சரி என்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட டில்லி உயர்நீதிமன்றம் நீதிபதி தேஜஸ் கரியா, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து
2 ஆயிரம் கனஅடியாக சரிவு!
தருமபுரி, ஜூன் 20–- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு குறைந்ததன் காரணமாக, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து பாதியாகக் குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 4,000 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, தற்போது பாதியாக சரிந்து வினாடிக்கு 2,000 கனஅடியாக வந்துகொண்டிருக்கிறது.
காவிரி ஆற்றின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவு கணிசமாகக் குறைந்துள்ளதே இந்த நீர்வரத்து சரிவுக்கு முக்கியக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீர்வரத்து குறைந்துள்ள போதிலும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி ஆற்றின் நிலவரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
