இந்தியாவில் பசு, பக்தி, பழங்கதைகள், பழமைக் கலாச்சாரம் மற்றும் மத அரசியல் போன்ற விவாதங்கள் பழங்காலத்தை நோக்கி இழுத்துக் கொண்டிருக்கின்றன.
ஆனால், அதே நேரத்தில் உலகளாவிய அறிவியல், சமூகம், மனிதகுலத்தின் அடுத்தகட்ட எல்லையான விண்வெளியையும், எதிர்காலத்தையும் நோக்கி அதிவேகமாக முன்னேறி வருகிறது. புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் மனிதக் குழந்தை பிறப்பு சாத்தியமா? என்பது குறித்த அதிநவீன ஆய்வுகள் தற்போது உலகெங்கும் தொடங்கப்பட்டுள்ளன.
நாசாவின் இலக்குகளும்,
விண்வெளிப் பயணமும்!
விண்வெளிப் பயணமும்!
விண்வெளியில் மனிதர்களைக் குடியமர்த்துவது என்பது இனி வெறும் அறிவியல் புனைகதை அல்ல. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா (NASA) இதற்காகப் பெரிய இலக்குகளை நிர்ணயித்துள்ளது.
நிலவில் தளம் (2032): 2032-ஆம் ஆண்டிற்குள் நிலவில் மனிதர்கள் “ஓரளவு நிரந்தரமான” குடியிருப்பு களில் வாழக்கூடிய சூழலை உருவாக்குவது நாசாவின் முதன்மை நோக்கமாகும்.
செவ்வாய் கோள் பயணம்: செவ்வாய் கோளிற்கு முதன்முறையாக மனிதர்களை அனுப்பும் திட்டங் களையும் நாசா தயாரித்து வருகிறது. பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையிலான இந்தப் பயணம் சுமார் 7 முதல் 10 மாதங்கள் வரை நீடிக்கும்.
பூமிக்கு வெளியே மனிதர்கள் நீண்ட காலம் வாழ வேண்டுமானால், அங்கு இயற்கையான முறையில் இனப்பெருக்கம் செய்வதும், தலைமுறைகளை உருவாக்குவதும் அவசியமாகிறது.

விண்வெளி இனப்பெருக்கத்தின்
இரு பெரும் சவால்கள்
இரு பெரும் சவால்கள்
பூமியைப் போலன்றி விண்வெளியிலும் பிற கோள்களிலும் மனித உடல் முற்றிலும் புதிய, கடினமான சூழல்களை எதிர்கொள்கிறது. இதில் இரண்டு முக்கிய சவால்கள் உள்ளன.
நுண் ஈர்ப்புவிசை
பூமியின் ஈர்ப்புவிசை மனித உடலின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் பல்கலைக் கழக முனைவர் நிக்கோல் மெக்பெர்சன் நடத்திய ஆய்வில் பின்வரும் உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன:
விந்தணுக்களின் வழிமாற்றம்: நுண் ஈர்ப்புவிசை சூழலில் விந்தணுக்களைச் சோதித்தபோது, அவை வழிதவறிச் சென்றன. சாதாரண ஈர்ப்புவிசையில் நகர்வதோடு ஒப்பிடும்போது, இலக்கை அடைந்த விந்தணுக்களின் எண்ணிக்கை 50 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தது. இதன் மூலம் இயற்கையான கருத்தரிப்பிற்குப் புவியீர்ப்பு விசை எவ்வளவு முக்கியம் என்பது புரிகிறது.
கரு வளர்ச்சியில் பாதிப்பு: எலிகளில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில், கரு வளர்ச்சியின் முதல் 24 மணி நேரத்தில் நுண் ஈர்ப்புவிசை மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது.
நாசாவின் மூத்த விஞ்ஞானி முனைவர் ஃபதி கரூயா இது பற்றிக் கூறுகையில், “செல்கள் எவ்வாறு பிரிகின்றன, தங்களை எவ்வாறு ஒழுங்கமைத்துக் கொள்கின்றன மற்றும் தொடர்பு கொள்கின்றன என்பதை நுண் ஈர்ப்புவிசை பாதிக்கிறது” என்கிறார்.
விண்வெளிக் கதிர்வீச்சு (Space Radiation)
பூமியின் காந்தப்புலமும் அடர்த்தியான வளி மண்டலமும் நம்மைப் ஆபத்தான விண்வெளிக் கதிர் வீச்சிலிருந்து பாதுகாக்கின்றன. ஆனால், நிலவு மற்றும் செவ்வாயில் இந்த பாதுகாப்பு இல்லை.
துருக்கியின் வான்வெளி மருத்துவ வல்லுநர் முனைவர் அப்துர் ரஹ்மான் எங்கின், சூப்பர் நோவாக்களால் உருவாகும் விண்மீன் மண்டல அண்டக் கதிர்வீச்சு (GCR) விண்கலன்களின் கவசத்தையும் ஊடுருவி மனித திசுக்களைப் பாதிக்கும் என்று எச்சரிக்கிறார்.
அபாயகரமான அளவு: பூமியில் கர்ப்பிணிகளுக்குப் பாதுகாப்பானது என நிர்ணயிக்கப்பட்ட கதிர்வீச்சு வரம்பு 5 மில்லிசீவர்ட் ஆகும். ஆனால், செவ்வாய் கோளுக்குச் செல்லும் 6 மாதப் பயணத்தில் ஒரு கர்ப்பிணி வீராங்கனை 90 முதல் 300 மில்லிசீவர்ட் வரை கதிர்வீச்சுக்கு ஆளாக நேரிடும்.
விளைவுகள்: இந்த அதிகப்படியான கதிர்வீச்சு சிசுவின் டிஎன்ஏ (DNA) கட்டமைப்பைச் சிதைத்து, கருச்சிதைவு, பிறவிக் குறைபாடுகள், நரம்பியல் குறைபாடுகள் மற்றும் வாழ்நாள் முழுவதும் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை உருவாக்குகிறது.
அடுத்த தலைமுறைக்கான அச்சுறுத்தல்
சுவீடனின் உப்சாலா பல்கலைக்கழக பேராசிரியர் ஜான்-பெர்ன்ட் ஸ்டூகன்போர்க் ஒரு முக்கிய எச்சரிக் கையை விடுக்கிறார். விண்வெளிப் பயணத்தின் போது நமது உடலின் சாதாரண தோல் செல்கள் பாதிக்கப்பட்டால், அது அந்த மனிதரோடே அழிந்து விடும். ஆனால், விந்தணு மற்றும் முட்டை அணுக்கள் போன்ற இனப்பெருக்கச் செல்கள் கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டால், அந்த மரபணுக் குறைபாடுகள் விண்வெளி வீரர்கள் பூமியில் குழந்தைப் பெற்றுக் கொண்டாலும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும். எனவே இதைப் பாதுகாப்பது மிக அவசியம்.
பெண்களை மய்யப்படுத்திய
ஆய்வுகளின் தேவை
ஆய்வுகளின் தேவை
இதுவரை விண்வெளி ஆய்வுகள் பெரும்பாலும் ஆண்களை மய்யப்படுத்தியே இருந்துள்ளன. ஆனால் தற்போது விண்வெளிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பல விண்வெளி வீராங்கனைகள் நீண்டகாலப் பயணங்களின் போது மாதவிடாயைத் தடுக்க மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் விண்வெளிச் சூழல் பெண்களின் சினைப்பை செயல்பாடு மற்றும் முட்டை முதிர்ச்சியடைதலை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்த நவீன தரவுகள் நம்மிடம் இன்னும் முழுமையாக இல்லை. இந்த இடைவெளியை நிரப்ப கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
பூமிக்குக் கிடைக்கும் நன்மைகள்
விண்வெளிக்காக நடத்தப்படும் இந்த ஆய்வுகள் பூமியில் வாழும் மனிதர்களுக்கும் உதவும். உதாரணமாக, நுண் ஈர்ப்புவிசையையும் தாண்டி இலக்கை அடையும் “சூப்பர் விந்தணுக்களின்” பண்புகளைக் கண்டறிந்தால், அதை பூமியில் உள்ள அய்விஎஃப் (IVF – செயற்கை க்கருத்தரிப்பு) சிகிச்சைகளில் சிறந்த விந்தணுக்களைத் தேர்ந்தெடுக்கப் பயன்படுத்த முடியும் என்று முனைவர் மெக்பெர்சன் குறிப்பிடுகிறார்.
நாம் எங்கே செல்லப் போகிறோம்?
விண்வெளியில் மனித இனப்பெருக்கம் என்பது ஏதோ ஒரு விலக்கப்பட்ட தலைப்போ அல்லது வெறும் அறிவியல் புனைகதையோ அல்ல. நாம் நமது சூரியக் குடும்பத்தை ஆள வேண்டுமானால், இப்போதிலிருந்தே இதற்கான தீர்வுகளை ஆராய வேண்டும். பழங்காலப் பெருமைகளையும், பிரிவினைவாதங்களையும் பேசிக் கொண்டு பூமியிலேயே முடங்கப் போகிறோமா, அல்லது அறிவியல் பாதையில் பயணித்து பிரபஞ்சத்தின் அடுத்த எல்லையைத் தொடப் போகிறோமா என்பதை மனிதகுலம் தான் தீர்மானிக்க வேண்டும்.
