


நூற்றாண்டு கண்ட வைக்கம் போராட்டம் 1924ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் நாள் தொடங்கியது. போராட்டம் தொடங்கப்பட்ட ஒரு சில நாள்களிலேயே கேரளத் தலைவர்கள் அனைவரும் சிறைபிடிக்கப்பட ஜார்ஜ் ஜோசப்பின் அழைப்பை ஏற்று ஏப்ரல் 13ஆம் நாள் வைக்கம் சென்றார் தந்தை பெரியார். அரசை எதிர்த்து போராட வந்த பெரியாருக்கு அரசே வரவேற்பளித்த வினோத காட்சிகளும் நடந்தன. “அரசை எதிர்த்துப் போராடவே வந்திருக்கிறேன். மஹாராஜாவின் வரவேற்பை ஏற்பதற்கில்லை!” என்று சொல்லி போராட்டக் களம் புகுந்தார் பெரியார்.
பெரியாரின் அனல் பறக்கும் உரை போராட்டக்களத்தை சூடேற்ற பொதுமக்களின் ஆதரவு நாளுக்குநாள் பெருகிக் கொண்டே இருந்ததைக் கண்டு அஞ்சிய அரசு, பெரியார் அந்த மாவட்டத்தில் தங்குவதற்கும் பிரவேசிப்பதற்கும் தடை உத்தரவைப் பிறப்பித்தது.
“வைக்கத்திலோ சுற்று வட்டாரங்களிலோ அவரின் வருகையோ தங்குதலோ அமைதியின் பங்கத்திற்கும் கலவரத்திற்கும் காரணமாகக் கூடும் என்று தெரிவதினால் ராமசாமி நாயக்கர் அவர்கள் கோட்டயம் மாவட்டத்தின் எந்த ஒரு பகுதியிலும் வருகைதரவோ தங்கவோக் கூடாது” என்று அம்மாவட்ட மாஜிஸ்டிரேட்
எம்.வி.சுப்பிரமணிய அய்யர் உத்தரவிட்டார்.
அரசின் உத்தரவைப் பெற்றுக்கொண்ட பெரியார், தான் அதை மீறப்போவதாக 1924ஆம் ஆண்டு மே 17 அன்று அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து நீதிமன்ற விசாரணை 1924 மே 21 அன்று நடைபெற்றது. விசாரணையை நேரில் காணப் பெரியாரின் மனைவி நாகம்மையாரும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். அரசு சார்பாகக் காவல் துறை அதிகாரிகளான பிச்சு அய்யங்காரும் நாராயண பிள்ளையும் விசாரிக்கப்பட்டனர். விசாரணையின்போது பெரியார், “இந்த நீதிமன்றம் நியாயம் செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை; விசாரணை வெறும் வேஷம்; நீதிமன்றத்துடன் ஒத்துழைக்க முடியாது; நான் சமாதானம் உண்டு பண்ணவே வைக்கத்துக்கு வந்தேன். எவ்விதமான தண்டனை அளித்தாலும் ஏற்கத் தயார்!” என்றார்.
பெரியாருக்கு ஒரு மாத வெறுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. பெரியார் வைக்கம் போராட்டத்தின் போது பெற்ற முதல் சிறைத் தண்டனை இதுதான்!.
ஏழு நாள்கள் வைக்கம் காவல் நிலையச் சிறையில் வைக்கப்பட்டிருந்த பெரியார் 1924 மே 28 இரவு வைக்கத்திலிருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ஆறுக்குட்டி காவல் நிலையச் சிறைக்கு நீர் வழிப் பயணமாக படகில் அழைத்துச் செல்லப்பட்டார்.
வைக்கத்திலிருந்து ஆறுக்குட்டிக்கு தற்போது நேரடியாக படகில் செல்ல வாய்ப்பு இல்லை. தவணக் கடவு என்ற ஊர் வரை படகில் செல்லலாம். ஆறு ரூபாய் கட்டணத்தில் அரசே படகுகளை இயக்குகிறது. தவணைக்கடவு படகுத் துறைமுகத்தில் இறங்கி அங்கிருந்து தரை வழியாக ஆறுக்குட்டிக்குச் செல்ல வேண்டும். ஆறுக்குட்டி என்கிற ஊரின் பெயர் அருவிக்குத்தி என்றும் அழைக்கப்படுகிறது. ஆலப்புழை மாவட்டம், சேர்த்தலை வட்டத்தில் ஆறுக்குட்டி தற்போது உள்ளது.
ஆறுக்குட்டியில் ஒரு மாதம் சிறைக் கொடுமையை அனுபவித்துவிட்டு 1924 ஜூன் 21 அன்று விடுதலை ஆனார் பெரியார். அங்கு அவர் அடைக்கப்பட்டிருந்தது காவல் நிலையச் சிறை என்றும் தனக்குச் சாப்பாடு முதலியன வெளியிலிருந்துதான் வரவழைத்துத் தரப்பட்டன என்றும் பெரியார் பின்னாளில் குறிப்பிட்டுள்ளார்.
பெரியாரின் விடுதலையை ஒட்டி பாணவல்லியில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் நீர் வழிப் பயணமாக வைக்கம் படகுத் துறைக்கு வந்த அவரை சத்தியாகிரகத் தன்னார்வலர்கள் பெரிய ஊர்வலமாக ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றனர்.
ஆறுக்குட்டியில் பெரியார் சிறை வைக்கப்பட்டிருந்த காவல் நிலையம் 60 ஆண்டுகளுக்கு முன்னரே 1963-1964இல் அங்கிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூச்சக்கல் என்ற இடத்துக்கு மாற்றப்பட்டு விட்டது.
செடி, கொடிகள் மண்டிய புதர்களுக்கு இடையில் பாழடைந்த ஓர் குட்டிசுவர் மட்டுமே நின்று இதுதான் பெரியார் சிறை வைக்கப்பட்ட ஆறுக்குட்டி காவல் நிலையம் என்று நமக்கு காட்சியளித்துக் கொண்டிருந்த அந்த இடத்தில் பெரியாருக்கு நினைவிடம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு சட்டமன்றத்தில் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் (30.3.2023).
பின்னர் கேரள அரசு எடுத்த வைக்கம் போராட்ட நூற்றாண்டுத் தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அன்றைய கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் முன்னிலையில் பெரியாரின் வைக்கம் போராட்ட முதல் சிறைவாசத்தை நினைவுகூரும் வகையில் பெரியார் ஒரு மாத காலம் சிறையிலிருந்த ஆறுக்குட்டி பகுதியில் பெரியாருக்கு ஒரு நினைவிடம் எழுப்ப வேண்டும் என்றும் அதற்கான இடத்தையும் அனுமதியையும் தமிழ்நாடு அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் அவர்களும் அதற்கான ஒப்புதலை வழங்கினார் (1.4.2023).
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசால் கேரள மாநிலம் ஆறுக்குட்டியில் (அருவிக்குத்தி) பழைய காவல் நிலையம் இருந்த பகுதியில் பெரியாருக்கு நினைவிடம் அமைக்கும் பணி உடனடியாக தொடங்கப்பட்டு நடைபெற்றுவந்தது. தற்போது 95 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து விட்டன.
மேற்படி நினைவிடத்தைக் காண கடந்த வாரம் நண்பர்களுடன் கேரளம் பயணமானோம். ஆறுக்குட்டி செல்லும் முன் வைக்கத்தில் புதிப்பிக்கப்பட்டுள்ள பெரியார் அருங்காட்சியகம், மற்றும் நூலகத்தினை கண்டுகளித்து பின் அங்கிருந்து அருவிக்குத்தி சென்றோம்.
ஆறுக்குட்டி ஆற்றங்கரை ஓரம் பழைய படகுத்துறைக்கு எதிரே அழகிய சூழலில் அற்புதமாய் வடிவமைக்கப் பட்டிருக்கிறது பெரியார் நினைவிடம். 95 சதவீதப் பணிகள் முடிந்து உள் கட்டமைப்பு (INTERIOR DESIGHN) மட்டுமே மிச்சமிருக்கிறது. சுற்றுச் சுவர் கூட எழுப்பப்பட்டுவிட்டது. கட்டடத்தைச் சுற்றிப்பார்த்துவிட்டு வெளியே வந்த போது எங்களைக் கண்ட அந்த பகுதி மக்கள் ‘நினைவிடம் எப்பொழுது திறப்பார்கள்?’ என ஆவலாய் மலையாளத்தில் கேட்டார்கள். சிரித்துக்கொண்டே திறந்துடுவாங்க என்றோம்! நாமும் அந்த நாளைத்தானே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாடு, கேரள ஆட்சி மாற்றம் நடந்துள்ள இச்சூழலில் தற்போதைய தமிழ்நாடு அரசு எஞ்சியுள்ள பணியையும் காலதாமதமின்றி முடித்து விரைவில் பெரியார் நினைவிட திறப்பு விழாவினை நடத்த வேண்டும் என்பது இரு மாநில மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
