தீண்டாமை வன்கொடுமை புகார் மனுக்கள் மீது உடனே வழக்குப்பதிய வேண்டும் காவல்துறையினருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

2 Min Read

தமிழ்நாடு

மதுரை, ஜூன் 19 தீண்டாமை வன்கொடுமை புகார்களின் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்வது காவல்துறையின் கட்டாய கடமை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த அருண்குமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் எருக்கலைநத்தம் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயில் நிர்வாக அறங்காவலராக இருந்து வருகிறேன். இந்த கோயிலுக்கு சொந்தமான நிலங்களை சிலர் போலி பத்திரம் மூலம் அபகரித்துள்ளனர். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தபோது என்னை ஜாதி பெயரை குறிப்பிட்டு இழிவாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக நான் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, பின்னர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளரிடம் கொடுத்த மனுவின் அடிப்படையில் அப்பன் திருப்பதி காவல்துறையினர் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்யாமல் புகாரை முடித்து வைத்தனர்.

ஊமச்சிக்குளம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளரையும் இந்த விவகாரம் சிவில் தகராறு எனக் கூறி புகாரை முடித்து வைத்தார். எஸ்சி – எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றச்சாட்டுகளில் வழக்குப்பதிவு செய்யாமல் விசாரணை நடத்துவது சட்டவிரோதம். வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பதவிக்குக் குறையாத அதிகாரியே விசாரணை மேற்கொள்ள வேண்டும். எனவே என் மனுவின் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா கவுரி, ‘‘எஸ்சி – எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி, வரும் புகார்களில் வழக்குப்பதிவு செய்வதற்கு முன் எந்தவிதமான முன் விசாரணையும் நடத்தக் கூடாது. புகாரின் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்வது காவல்துறையினரின் கட்டாய கடமை. இந்த வழக்கில் ஆய்வாளர் விசாரணை நடத்த அதிகாரம் இல்லை. அவரால் நடத்தப்பட்ட விசாரணை செல்லாது என்ற நிலையில், புகாரை முடித்து வைத்தது சட்டவிரோதம். மனுதாரரின் புகாரில் எஸ்சி – எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் பிற குற்றச்சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டிய அம்சங்கள் இருந்தால், எந்தவித முன் விசாரணையுமின்றி உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இது குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *