ஒரு நாள் என்பது ஒருநாளா?-வி.சி.வில்வம்

9 Min Read

“எப்படி வாழ வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் நடைமுறையில் அப்படி வாழ்வதில்லை”,  எனப் புகழ்பெற்ற பொன்மொழி ஒன்று உள்ளது. ‘‘செயல்தான் சுருக்கமான பதில்’’ என்றும் சொல்வார்கள். ஆக பேச்சு, எழுத்து, அறிவுரைகள், ஆலோசனைகள் இவற்றைவிட, தம் வாழ்க்கையில் செயல்படுவதே  பெருமைக்குரியது; மதிப்பிற்குரியது!

முழுமையாக வாழ்ந்தவர் பெரியார்!

தந்தை பெரியார் அப்படியான முழுமையான வாழ்க்கையை வாழ்ந்தவர். பேச்சு ஒன்று, செயல் வேறு என்பது அவரிடம் எப்போதும் கிடையாது. “நிர்வாணம்” என்கிற சொல் குறித்து ஒரு கவிதை உள்ளது.

கட்டுரை, திராவிடர் கழகம்

‘‘நிர்வாணம்!

அட…

இவ்வளவுதானா?’’

–இதுதான் அந்தத் கவிதை. ‘வெளிப்படைத்தன்மை’ என்பது மனித வாழ்க்கைக்கு மிக, மிக அவசியமானது. அது எந்தளவிற்கு என்பதற்கு உதாரணமாகவே  “நிர்வாணம்” என்கிற சொல் இந்த இடத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சொல்லை வெறும் உணர்ச்சியாகவோ, உடல் கவர்ச்சியாகவோ பார்க்க வேண்டியதில்லை. உயிரைக் காக்கும் அறுவைச் சிகிச்சையின் போது உடல் அப்படியான நிலையில் தான் இருக்கும்; உயிரற்ற நிலையில் இருக்கும் போதும் “நிர்வாணம்” இப்படித்தான் கிடத்தப்பட்டிருக்கும்.

ஆக மனித வாழ்வில் எல்லாமும் பேசப்பட வேண்டியிருக்கிறது; அப்போது தான் ‘உயர்ந்த வாழ்க்கை முறை’ கிடைக்கும். தந்தை பெரியார் மறைந்து 52 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னமும் அவர் இந்தச் சமூகத்தில் மேம்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்! காரணம் என்ன?  அவர் பேசிய முறை; அவர் எழுதிய முறை; அணுகிய முறை; மொத்தத்தில் அவர் வாழ்ந்த முறை!

கட்டுரை, திராவிடர் கழகம்

அனைவருக்குமான தலைவர் பெரியார்!

கடவுள், மதம், ஜாதி, சாஸ்திரம், மூடநம்பிக்கை, பெண்ணடிமை என எண்ணற்ற விசயங்களை அவர் பேசியிருக்கிறார். இன்னும் சொன்னால் ஒவ்வொன்றையும் ஆய்வு செய்திருக்கிறார் என்பதே சரி. பெரியார் எத்தனைத் துறைகள் குறித்துப் பேசியிருக்கிறார் என்பதே பலருக்கும் தெரியாது. கடவுள், மதம், ஜாதி என்கிற அளவிலே பெரியாரைச் சுருக்கிப் பார்க்கிறார்கள் அல்லது பார்க்க வைக்கப்படுகிறார்கள்.

இப்படியான தந்தை பெரியாரின் தனி மனித சிந்தனைகள், குணாதிசயங்கள், பழக்க வழக்கங்கள், அணுகுமுறைகள், பழகும் விதம், வெளிப்படுத்தும் தனித் தன்மைகள் என அனைத்துமே மேம்பட்டதாக இருந்தது.

அதனால் தான் பெரியாரின் கொள்கையில் உடன்படாதவர்கள் கூட, அவரைப் பின்பற்ற வேண்டிய தலைவராக பார்க்கிறார்கள். பெரியாரிடம் வெறும் கொள்கை மட்டும் (Only Theory) இருந்திருந்தால் கூட, ஆரியம் மடைமாற்ற முயற்சி செய்திருக்கும். ஆனால் மனித வாழ்வில் செழுமை பெற்றவர் அவர்; மக்கள் மனதைக் கவர்ந்தவர். அதனாலே மக்களையும், பெரியாரையும் அவர்களால் பிரிக்க முடியவில்லை.

மக்களுக்குச் சமரசமற்ற கொள்கைகளை வகுத்ததோடு, தனி மனித சிறப்பம்சங்களும் (Practical Humanism) இருந்ததாலே குன்றக்குடி அடிகளாருக்கும் தந்தை பெரியார் – தலைவர்; அக்ரகாரப் பெண்களுக்கும் – அவர் வழிகாட்டி!

பெரியாருடைய வாழ்வே
ஒரு மனோதத்துவ நூல்!

“ஒருவருக்கு நம்மைப் பிடிக்கவில்லை என்றால், நாம் பேசுவதும் பிடிக்காது”. அதேபோல “நாம் ஒரு நகைச்சுவை சொன்னால், பலரும் சிரிப்பார்கள். பிடிக்காதவர்களுக்குச் சிரிப்பே வராது”. இப்படி தனிமனித வாழ்வில் எண்ணற்ற சிக்கல்கள் உண்டு.

ஆனால் பெரியார் தன்னையே ஒரு ஆய்வு நோக்கில் பார்த்தவர். “நான் எழுதுவதை நீங்கள் படிக்கவில்லையா, பரவாயில்லை நான் தொடர்ந்து எழுதுவேன். நான் பேசுவதை நீங்கள் கேட்கவில்லையா, பரவாயில்லை, நான் தொடர்ந்து பேசுவேன். நான் முரண்பட்டு பேசுகிறேனா, ஆமாம்… என் பகுத்தறிவுச் சிந்தனை மாறியிருக்கிறது, பார்ப்பனியத்தை ஒழிப்பது தான் என் கொள்கை, ஆனால் பார்ப்பனர்கள் செல்வச் செழிப்போடு, மகிழ்ச்சியாக வாழ்வதில் தடையில்லை”, எனத் தம் முழு வாழ்விற்கான அத்தனைச் செய்திகளையும் தமக்குத் தாமே பேசி, அதைப் பகிரங்கமாகவும் வெளிப்படுத்தியவர்.

“மனம்விட்டுப் பேசுவதை விட சிறந்த அறிவு வேறெதுவும் இல்லை” என்பார்கள். பெரியாருடைய வாழ்க்கை என்பதே ஒரு மனோதத்துவ நூலைப் (Psychiatric Book) போன்றது. அதாவது அவரது கொள்கை வாழ்வு குறித்துக் கூறவில்லை. அந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்த அவர் கடைப் பிடித்த வாழ்வியல் முறையைக் குறிப்பிடுகிறோம்.

பெரியார் வழிவந்த ஆசிரியர் கி.வீரமணி!

தந்தை பெரியாரின் இந்தச் சிறப்புகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். “நான் ஒரு பெரியாரின் மாணவர் என்பார்; தான் ஒரு பெரியாரின் தொண்டர்”, என்பார். அருகில் இருந்து உணர்ந்தவர்களுக்குத் தெரியும், அது நூறு விழுக்காடு உண்மையென்று! ஆசிரியர் அவர்கள் மாணவர், தொண்டர் என்பதைச் சொற்களால் கூறவில்லை; வாழ்க்கையால் நிரப்புகிறார்!

ஆசிரியர் மீது கருத்தியல் ரீதியாகச் சிலருக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கும்; ஏன் கோபம் கூட இருக்கும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஆசிரியரை நேரில் சந்தித்துப் பேசிவிட்டு வந்தால், வெளியே வரும்போது ஒரு புதிய உணர்வோடு வருவார்கள். அதற்காக ஒருமித்தக் கருத்து வந்துவிட்டது என்று பொருள் அல்ல. மாறாக அதையும் தாண்டிய மனிதநேயம், அணுகுமுறை, பெரியாருடன் பழகிய ஒருவர், அறிஞர் அண்ணாவுடன் பழகிய, டாக்டர் கலைஞருடன் பழகிய ஒருவர், அந்நாள் முதல் இந்நாள் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சர்களுடன் பழகிய ஒருவர், இந்தியாவின் அனைத்துப் பிரதமர்கள், குடியரசுத் தலைவர்களுடன் பழகிய ஒருவர், வெளிநாட்டு அறிஞர்களுடன் தொடர்பில் இருக்கும் ஒருவர்… இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். அப்படியான ஒருவர் தம்மிடம் நடந்து கொண்ட விதம், பேசிய முறை, கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருக்கலாம், நீங்கள் எங்கள் விருந்தினர் என உபசரிக்கும் தன்மை என அனுபவித்து வந்தோர் எண்ணற்றோர்; அதைக் கண்ணுற்றோரும் மிகுதி!

‘ஒருநாள் என்பது ஒருநாளா?’

திராவிடர் கழகத்தில் கருப்புச்சட்டை அணிந்தோர் நேரடி உறுப்பினர்கள். இணையாக “கலர்” சட்டை அணிந்தோரும் ஏராளம்.‌ காரணம் ஆசிரியரின் அன்பு, மனிதநேயப் பண்பாடு, இன்னும் சொன்னால் பெரியாரின் மாணவராய், அவரையே பிரதிபலிக்கிறார். இதுபோன்ற செய்திகளை எல்லாம் தோழர்கள் அறிந்ததுதான். மற்றவர்களுக்கும் அந்த அனுபவங்கள் கிடைக்கும் போது அவர்களும் இன்புற்றிருப்பதும் நடைமுறையில் இருக்கிறது.

அந்த அடிப்படையில் ஆசிரியரின் ஒருநாள் பயணத்தை நாம் பதிவிட விரும்புகிறோம். ஜுன் 16 ஆம் நாளான்று திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளுக்கு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சுற்றுப்பயணம் வந்தார்கள்.‌ மலைக்கோட்டை விரைவு வண்டி (Rockfort Superfast Express) என்பது ஆசிரியரின் மற்றொரு வீடு போன்றது! அந்தத் தொடர்வண்டி 1972  ஆம் ஆண்டில் தம் பயணத்தைத் தொடங்கியது. தம் வாழ்நாள் முழுக்க “தமிழர் தலைவரை” அது தாங்கி நிற்கிறது! அப்படித்தான் ஜுன் 16 அன்றும் அது திருச்சியில்  கொண்டு வந்து இறக்கியது ஆசிரியரை!

ஆசிரியரின் பயண வரலாறு!

ஒரு காலத்தில் 10 மணி நேரம் பயணித்த அந்த வண்டி, பிறகு 9, 8, 7 மணி நேரங்களாகக் குறைந்து, இப்போது 5.30 மணி நேரத்தில் வந்து நிற்கிறது. சென்னையில் இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு, திருச்சியில் அதிகாலை 5 மணிக்கு வந்துவிடுகிறது. ஒரு மனிதருக்குக் குறைந்தபட்ச உறக்கம் 8 மணி நேரம் என்கிறார்கள். ஆனால் இதுபோன்ற பயணத்தின் போது ஆசிரியர் தூங்குவது 4 மணி நேரங்கள்! 1933 ஆம் ஆண்டு பிறந்து, 1944 ஆம் ஆண்டில் இருந்து தமிழ்நாட்டிற்குப் பயணம் செய்ய தொடங்கியவர்.  82 ஆண்டுகளாகப் பயண வரலாறு படைக்கிறார்.

ஆக, அதிகாலை 5 மணிக்குத் தொடர்வண்டியில் இருந்து இறங்கி தோழர்களைச் சந்தித்து, புத்தூர் பெரியார் மாளிகைக்குப் பயணமாகிறார். தொடர்ந்து செய்தித்தாள்கள், தொலைக்காட்சி செய்திகள் என அன்றைய நாளின் தமிழ்நாட்டு நிலைமையை அறிகிறார். சிறிது நேரத்தில் புறப்பட்டு சிறுகனூர் பெரியார் உலகம் சென்று பார்வையிடுகிறார். மீண்டும் பெரியார் மாளிகை வந்து, காலை உணவை முடித்து, அந்த நேரத்தில் காத்திருந்த தோழர்களைச் சந்தித்து, தஞ்சாவூர் பயணமாகிறார்.

நமக்கே தலைசுற்றுகிறது!

அதன் பிறகு ‘விடுதலை’ நாளிதழுக்கான அறிக்கையைத் தயார் செய்கிறார். தட்டச்சு செய்து வந்ததை, பிழைத்திருத்தம் செய்கிறார். இதனூடே வரும் விருந்தினர்களையும் சந்திக்கிறார். இடைப்பட்ட சிறிதே சிறிதான நேரத்தில் கூட நூல்கள் வாசிக்கிறார். மதியம் கொஞ்சம் உணவு; கொஞ்சம் உறக்கம். மாலைப்பொழுதில் ஒரு நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டும். அதையொட்டி வெளிவந்த மலரை வாசிக்கிறார்.

இதற்குள்ளாக வெளியூர் பகுதியில் இருந்து திரளான தோழர்கள் வரிசைக்கட்டி நிற்கின்றனர். பிறகு பெரியார் நூற்றாண்டு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் மற்றும் ஊழியர்கள் சந்திப்பு, பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகப் பணியாளர்கள் சந்திப்பு!

‘சந்திப்பு’ என்றால் வணக்கம் சொல்வதல்ல; பல்வேறு செய்திகள் குறித்துப் பேசுதல், ஆய்வு செய்தல், முடிவெடுத்தல் என மூளைக்கு ஓயாத வேலைகள். தொடர்ந்து அக்டோபர் மாதம் ஜப்பானில் நடைபெறும் பெரியார் சுயமரியாதை மனிதநேய மாநாடு தொடர்பான ஆலோசனைகள், பெரியாரியல் பயற்சிப் பட்டறை நடத்துவது தொடர்பான பேச்சு வார்த்தை, வெளிவர இருக்கும் புதிய நூல்கள் குறித்த தகவல்கள் என எழுதும் எனக்கும், படிக்கும் உங்களுக்குமே “கிறுகிறுவென” தலைசுற்றல் வரும்.

இப்போது மாலை 6 மணி ஆகிவிட்டது. மேனாள் வணிகவரித்துறை அமைச்சர், நினைவில் வாழும் உபயதுல்லா அவர்களின் 85 ஆவது பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்க ஆசிரியர் புறப்படுகிறார்.

நிறைவான அரங்கத்தில்
ஓர் அற்புதமான உரை!

தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் சிறப்பான வரவேற்பு. அனைத்தையும் பெற்றுக் கொண்டு மேடை ஏறுகிறார். நாம் முன்பே சொன்னோமே, திராவிட இயக்கத்தில் கருப்புச் சட்டைகள் மற்றும் பல வண்ண  சட்டைகள் என, அப்படியான தோழர்கள் அரங்கத்தை நிரப்பி இருந்தார்கள்.

இயக்கங்கள், அரசியல் கட்சிகள், இனவுரிமை அமைப்புகள், அரசு ஊழியர்கள், அதிகாரிகள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் அமர்ந்திருந்த நிறைவான அரங்கமாக அது இருந்தது. ஆசிரியர் அவர்கள் முன்னதாகவே பேசிவிட்டு புறப்படும் சூழல். அமர்விற்கு ஏற்ற அழகிய உரை ஒன்றைக் கொடுத்துவிட்டு, “நான் விரைந்து புறப்படும் நிலை இருக்கிறது, எனவே அரங்கத்தில் இருப்போர் மன்னிக்க வேண்டுகிறேன்”, என்று கூறியவுடன், அருகில் இருந்த திமுக மத்திய மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் உடல் சிலிர்த்து, புன்னகை பூத்து, கைகூப்பி வணங்குகிறார். இது இயல்பாக நடந்தது என்ற போதிலும், அதைப் பார்க்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. ஆனால் ஆசிரியர் இதைக் கவனிக்கவில்லை.

மொத்த இயக்கத்திற்கும்
ஒற்றைத் தலைவர்!

ஏனென்று சொன்னால், இந்தக் கட்டுரையின் முன் பகுதியில் சொன்னதைப் போல, ஆசிரியரின் தன்மைகள் மிகவும் சிறப்புக்குரியவை. அவரின் இயக்க அனுபவத்திற்கு இணையாக இப்போது யாருமே இல்லை. இன்னும் சொன்னால் சுயமரியாதை இயக்கம், பார்பனரல்லாதார் அமைப்பு, நீதிக்கட்சி, திராவிடர் கழகம் என நூறாண்டுகளைக் கடந்த மொத்தத் திராவிட இயக்கங்களுக்கும், ஒற்றைத் தலைவராக அவர் ஒளிவீசி வாழ்கிறார்!

அப்படியான தலைவர், அன்றைய பெருங்கூட்டத்தில் “மன்னித்துக் கொள்ளவும்” என்று கூறியதும், அருகில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் கையெடுத்துக் கும்பிடுவதன் மூலம் ஏதோ ஒரு சிலிர்ப்பான உணர்வை  வெளிப்படுத்த முயல்கிறார். ஆக அந்த நிகழ்ச்சியும் முடிந்தது. மீண்டும் தொழில்நுட்பக் கல்லூரிக்கு வருகை. மீண்டும் தோழர்கள் சிலர் காத்திருப்பு, கல்லூரிப் பணியாளர்களின் கோப்புகளுடன் காத்திருப்பு எனப் பரபரப்பான நிமிடங்கள் மேலும் தொடர்ந்தன. இறுதியாக சில நிமிடங்கள் உணவு இடைவேளை.

நாளும் தொடரும்
வரலாற்றுக் குறிப்புகள்!

பின்னர் தஞ்சை இரயில் நிலையம் நோக்கிய பயணம். மலைக்கோட்டை தொடர்வண்டி குறித்து முன்பு குறிப்பிட்டோம். பொதுவாகத் தமிழ்நாட்டில் ஆசிரியர் பயணிக்காத தொடர்வண்டிகளே கிடையாது. எப்படி பயணப்படாத தமிழ்நாடே கிடையாதோ அதுபோலவே இதுவும்! இரயில் நிலையம் வந்துவிட்டோம். நடைமேடையில் பயணிகள் பலரும் வணக்கம் வைக்க, திரும்பவும் ஒவ்வொருவருக்கும் ஒரு வணக்கம். அதேநேரத்தில் சுற்றி நிற்கின்ற தோழர்களை அழைத்து, அவரவர்களுக்கு உண்டான பணிகளைக் கேட்டறிதல், கடைசி நிமிடம் வரை சிந்தனைகள், ஆலோசனைகள், கருத்துப் பரிமாற்றங்கள்!

எதிரே நின்ற உழவன் எக்ஸ்பிரஸ் தம் ஊதுகுழலால் சத்தமிடத் தொடங்க, வண்டியில் ஏறுகிறார் ஆசிரியர். பெட்டியின் உள்ளே சென்று அமர்கிறார். ஓரிரு நிமிடங்கள் ஆற, அமர எத்தனிக்கும் அடுத்த நொடி, ஆசிரியர் பெட்டிக்குள் ஒரு இணையர்கள் போகிறார்கள். அறிமுகம் செய்து கொள்கிறார்கள். அமர்ந்திருந்த ஆசிரியர் மீண்டும் எழுகிறார், ஒளிப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் விடைபெற்ற அடுத்த சில நிமிடங்களில் ஆசிரியரின் இரயில் புறப்படுகிறது. 83 ஆண்டு காலமாக அலுக்காமல், சலிக்காமல் எங்கள் தலைவரை, இந்த இரயில்கள் அழைத்துக் கொண்டு போய் வருகிறது. அந்த இரயில்களுக்கும் நம் வாழ்த்துகளைக் கூறுவோம்!

இந்தக் கட்டுரை முழுக்க இடம்பெற்றது ஒருநாள் நிகழ்ச்சி. ஆனால் ஆசிரியர் வாழ்வில் ஒருநாள் என்பது ஒருநாள் அல்ல! ஒருநாளில் பல நாள் உழைப்பு. இந்த ஒவ்வொரு நாளும், தத்தம் பக்கத்தில் ஆசிரியரின் வரலாற்றுக் குறிப்புகளைத் தன்னகத்தே பதிவு செய்து வருகிறது!

இப்போது சொல்லுங்கள்… ஆசிரியருக்கு வயது 93  என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *