
சென்னை, ஜூன் 18- தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் ஜோசப் விஜய், ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வேட்புமனு முரண்பாடு வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் ஜோசப் விஜய் மீதான புகார்
சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது வேட்புமனுக்களில் சொத்து விவரங்களை முன்னுக்குப்பின் முரணாகக் குறிப்பிட்டுள்ளார் என்று வியாசர்பாடியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து வருமான வரித்துறையும், தேர்தல் ஆணையமும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீதான புகார்
திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வாக்காளர் குமாரவேல் என்பவர், உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவின் சொத்து விவரங்களில் முரண்பாடு இருப்பதாக மனு அளித்திருந்தார்.
இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் நிரஞ்சன் ராஜகோபால் முன்வைத்த முக்கிய வாதங்கள்: “முதலமைச்சர் ஜோசப் விஜய் முதலில் தாக்கல் செய்த வேட்புமனுவைத் திருத்தம் செய்து, புதிய மனுவை ஏற்கெனவே தாக்கல் செய்துவிட்டார்.”
“அவர் இரு தொகுதிகளிலும் குறிப்பிட்டிருந்த சொத்து மதிப்புகள் சரியாகவே உள்ளன.”
“இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் வழக்கினை மட்டுமே தொடர முடியும்; பொதுநல வழக்கைத் தொடர முடியாது.” “ஏற்கெனவே இதே போன்ற கோரிக்கைகளுடன் தாக்கல் செய்யப்பட்ட பல வழக்குகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.”
நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு
தேர்தல் ஆணையத்தின் வாதங்களை முழுமையாக ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் தொடரப்பட்ட இந்த வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். அதன்படி, முதலமைச்சர் ஜோசப் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.
