திருச்செந்தூர், ஜூன் 18 திருச்செந்தூர் – சென்னை இடையேயான செந்தூர் விரைவு ரயிலில் 5 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இதுநாள் வரை 18 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட இந்த ரயிலில், இனி 23 பெட்டிகள் இடம்பெறும்; ஒரு 2-tier AC, இரண்டு 3-tier AC, 2 ஸ்லீப்பர்(SL) பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படுவதால், நாள்தோறும் 350-க்கும் மேற்பட்ட பயணிகள் கூடுதலாகப் பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஒன் செயலியில் ஒரு ரூபாய்க்குப் பயணச்சீட்டு
சென்னை, ஜூன் 18- ‘சென்னை ஒன்’ என்பது சென்னை மாநகரப் பயணிகளுக்காகத் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த கைப்பேசி செயலி ஆகும். சென்னை மாநகரப் போக்குவரத்து கழக பஸ்கள், மெட்ரோ ரயில்கள், புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் ஆட்டோக்கள் அனைத்தையும் ஒரே செயலி மூலம் ஒருங்கிணைத்து, பயணச்சீட்டு எடுக்கும் வசதியை இந்த செயலி வழங்குகிறது. இந்த நிலையில், ‘சென்னை ஒன்’ செயலியில் ஒரு ரூபாய்க்கு பயணச்சீட்டு எடுத்து பயணிக்கும் சலுகையை சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (கும்டா) வழங்கி உள்ளது. இது குறித்து கும்டா அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘CUMTA UPI மூலம் பயணச்சீட்டு எடுத்து பயணிக்கும் பயணிகளுக்கு முதல் பயணச்சீட்டு மட்டும் ரூ.1-க்கு சலுகையாக வழங்கப்படுகிறது’ என்றார்.
உள்நாட்டு விமானப் பயணிகளுக்காக
மலிவு விலை பயணச்சீட்டு
ஏர் இந்தியா நிறுவனம் அறிமுகம்
புதுடில்லி, ஜூன் 18– டாடா குழுமத்திற்குச் சொந்தமான ‘ஏர் இந்தியா’ நிறுவனம், உள்நாட்டு விமானப் பயணிகளுக்காக அடிப்படை (பேசிக்) என்ற புதிய மலிவு விலை பயணச்சீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, வழக்கமான எகானமி வகுப்பைக் காட்டிலும் மிகக் குறைந்த அடிப்படை விலையில் பயணச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த பயணச்சீட்டுகளை வாங்குபவர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் இலவச சாப்பாடு வழங்கப்படாது. சாப்பாடு இல்லையென்றாலும், பயணிகளுக்கு இலவசமாக காபி அல்லது டீ மற்றும் குடிநீர் வழங்கப்படும். தற்போது இந்த வசதி ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் கைப்பேசி ஆப் மூலமாக மட்டுமே கிடைக்கிறது.
“வீட்டுக் கடனுக்குக் காப்பீடு கட்டாயமில்லை”
ரிசர்வ் வங்கி உத்தரவு
புதுடில்லி, ஜூன் 18- வீட்டுக் கடனுக்கு காப்பீடு கட்டாயமில்லை என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
புதிய விதிமுறை
வீட்டுக் கடன் பெறும்போது காப்பீடு கட்டாயமில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் காப்பீடு உள்ளிட்ட பிற நிதி தயாரிப்புகளை கட்டாயமாக விற்பனை செய்வதைத் தடுக்க ‘பொறுப்பான வணிக நடத்தை (இரண்டாவது திருத்தம்) வழிகாட்டுதல்கள், 2026’ என்ற புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
பொதுவாக, வீட்டுக்கடன் ஒப்புதல் பெற வங்கிகள் தங்களுடன் இணைந்த காப்பீட்டு நிறுவனங்களின் பாலிசிகளை வாடிக்கையாளர்களிடம் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. இதைத் தடுக்க, ‘கட்டாய இணைப்புச் சலுகை’ முறைக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
கடனுக்காக காப்பீடு தேவைப்பட்டாலும், வாடிக்கையாளர் தன் விருப்பமான எந்த நிறுவனத்திலிருந்தும் காப்பீடு வாங்கலாம். குறிப்பிட்ட வங்கியின் காப்பீட்டை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது. காப்பீடு எடுப்பது கட்டாயம் கிடையாது.
இழப்பீடு
மேலும், வீட்டுக் கடனை ஒரு வங்கியிலி ருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றும்போது, ஏற்கனவே உள்ள காப்பீட்டை நிராகரித்து புதிய காப்பீடு எடுக்க வற்புறுத்தும் நடை முறைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் தனது தற்போதைய காப்பீட்டில் புதிய வங்கியின் பெயரை சேர்த்து அதையே தொடரலாம்.
மேலும் தவறான தகவல்கள் வழங்கி காப்பீடு அல்லது பிற திட்டங்களை விற்பனை செய்வது தவறான விற்பனை’ என ரிசர்வ் வங்கி வரையறுத்துள்ளது. இது நிரூபிக்கப்பட்டால், வாடிக்கையாளர் செலுத்திய முழுத் தொகையையும் வங்கி திருப்பிச் செலுத்த வேண்டும். மேலும் அவருக்கு ஏற்பட்ட இழப்புக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.
காப்பீடு விற்பனைக்காக வங்கி ஊழியர்கள் எந்த ஊக்கத்தொகையும் பெறக் கூடாது. வாடிக்கையாளரின் தெளிவான ஒப்புதல் (ஒடிபி அல்லது கையொப்பம்) இல்லாமல் எந்த தயாரிப்பையும் விற்கக் கூடாது. இந்த புதிய விதிமுறைகள் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
