சிந்துவெளி நாகரிகம் என்பது எப்போதும் பார்ப்பனர்களுக்குக் கசப்புவெளி! அதுவரை வேதகால நாகரிகம் தான் தொன்மை யானது, சமஸ்கிருதம் தான் மூத்தது என்று எந்தச் சான்றுகளும் இல்லாமல் இந்திய வரலாற்றை எழுதிவந்தவர்களுக்கு 1924-ஆம் ஆண்டு சர்.ஜான் மார்ஷல் தலைமையிலான குழுவினர் கண்டறிந்து அறிவித்த ஹரப்பா – மொஹஞ்சதாரோ அகழாய்வு முடிவுகள் பலத்த அடியாக அமைந்தன.
ஏறத்தாழ அதே கால கட்டத்தில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர் அகழாய்வு நடைபெற்றது. முந்தைய நூற்றாண்டுகளில் பிரான்சிஸ் வைட் எல்லீஸ், ராபர்ட் கால்டுவெல் போன்ற அறிஞர்கள் திராவிட மொழிக் குடும்பம் குறித்து தரவுகளுடன் எழுதியிருந்தது, அறிஞர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு, திராவிட எழுச்சி தோன்றியிருந்த காலகட்டம் அது! மொழியியல் அடிப்படையிலான சான்றுகளுடன், அகழாய்வுச் சான்றுகளும் கிடைத்து, திராவிடத்தின் பரப்பு இந்தியா முழுமையும் நிறைந்திருந்தது, குறிப்பாக இந்தியாவின் மேற்கிலிருந்து, மத்தியப் பகுதி, தெற்கு வரை விரிந்து பரவியிருந்தது என்பதற்குத் தொடர்ச்சியாகச் சான்றுகள் கிடைக்கத் தொடங்கின.
ஹரப்பா-மொஹஞ்சதாரோ இரண்டும் வெவ்வேறு நிலப் பகுதிகளைச் சார்ந்தவை எனினும், இவற்றுக்குள் இருந்த தொடர்பு இவையிரண்டும் ஒரே நாகரிகத்திற்குரியவை என்பதை உறுதிப்படுத்தியது. அதன் காலம் 5500 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதையும், பாகிஸ்தான் தொடங்கி குஜராத் வரை நீண்டது என்பதையும் உறுதிப்படுத்தும் வகையில் தரவுகள் கிடைத்துக் கொண்டே இருந்தன. இன்றும் கூட சில ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. 1924-இல் சுனிதி குமார் சாட்டர்ஜி முன்வைத்த சிந்துவெளி – திராவிடத் தொடர்புக்குப் பல்வேறு சான்றுகள் கிடைத்துவிட்டன.
இந்தச் சூழலில் தான், 1998 முதல் நடைபெற்ற வாஜ்பேயி காலத்து பாரதிய ஜனதா கூட்டணி ஒன்றிய அரசு, காளை மாட்டுக்குப் பதில் குதிரையைக் கொண்டு வந்து சிந்துவெளி நாகரிகச் சின்னங்களுக்குள் திணிக்கப் பார்த்தது. வரலாற்றைத் திரிப்பதற்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து, கொஞ்சம் அதனை நிறுத்தி வைத்தார்கள். பின்னர் தமிழ்நாட்டில் கிடைத்த கீழடி தரவுகளும், இரு இடங்களிலும் கிடைத்த பானை ஓடுகளில் இருந்த கருப்பு சிவப்பு வண்ணமும், இரண்டுக்குமான தொடர்பு குறித்து ஆராயும் ஆவலைத் தூண்டின.
மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசோ, அள்ள அள்ளக் குறையாத சான்றுகளுடன் திகழும் சிந்துவெளி நாகரித்தை, கற்பனைக் கதைகளில் மட்டுமே இருக்கும் சரஸ்வதி நதியுடன் இணைத்து “சிந்து சரஸ்வதி நாகரிகம்” என்று கதை கட்டத் தொடங்கியது. அதற்கான எதிர்ப்புக் குரல் எல்லாத் திக்கிலும் இருந்து எதிரொலித்தது. திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசோ, சிந்துவெளி நாகரிகம் அறிவிக்கப்பட்டதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியதுடன், ஆக்கப்பூர்வமாக சிந்துவெளி நாகரிக எழுத்துகளைப் படித்துக் காட்டி, சான்றுடன் நிறுவுவோருக்கு “ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்” பரிசு என்ற உலகளாவிய அறிவிப்பைச் செய்தது.
இந்தியாவின் மேற்கு எல்லையில் இருக்கும் சிந்துவெளி நாகரிகத்தின் மீது, தெற்கு எல்லையில் இருக்கும் தமிழ்நாட்டுக்கு இருக்கும் ஆர்வத்திற்கு அதன் திராவிடத் தொடர்பே காரணம்! ஆரியம் இதை எதிர்த்து, மறைத்து, திரித்து, அபகரிக்க நினைப்பதற்கும் அதன் ‘‘திராவிடத் தொடர்பே’’ காரணம்.
சிந்துவெளியில் கிடைத்த சிலைகளில் புகழ்பெற்றது “நடனமங்கை” (Dancing Girl) என்று குறிப்பிடப்படும் சிலையாகும். அது நடனமங்கை தானா, அவர் வேறு எதுவும் செய்திருக்க மாட்டாரா என்பது அறிவுப் பூர்வமான கேள்வி. ஆனால், அந்தச் சமயத்தில் கிடைத்த சிலைகளுக்கு, இப்படித்தான் பார்ப்பன வரலாற்றாசிரியர்கள் பெயர் சூட்டிப் பரப்பியுள்ளனர். நெற்றிப் பட்டம் கட்டியிருக்கிறது என்று சொல்லி மற்றொரு ஆண் உருவத்தை, “பூசாரி அல்லது அர்ச்சகர் அரசர் சிலை” (Priest King) என்று பெயர் வைத்தனர். இரண்டு கொம்புகள் சூடியிருந்த உருவத்தைப் பசுபதி சிலை என்று சிவனுடன் இணைத்து எழுதி வைத்திருக்கின்றனர். இவையெல்லாம் இன்னும் விவாதத்தில் இருக்கின்றன.
இப்படி காலம் காலமாக நடக்கும் சிந்துவெளி வரலாற்றுத் திரிப்பின் ஒரு பகுதிதான், அண்மையில் என்.சி.இ.ஆர்.டி. என்ற ஒன்றிய அரசின் பள்ளிப் பாடத் திட்டங்களை உருவாக்கும் அமைப்பால் செய்யப்பட்ட திரிபு ஆகும். இந்தக் கல்வி ஆண்டுக்கு வெளியான ஒன்பதாம் வகுப்பு கலைப் பாடப்பாடப்புத்தகமான ‘மதுரிமா’வின் முதல் அத்தியாயமான ‘கலை வரலாறு’ (History of Arts) என்பதில், நடன மங்கை சிலையின் திறந்திருந்த உடல் பகுதி ஆடையால் மூடப் பட்டது போல சித்தரிக்கப்பட்டிருந்தது. பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்த அந்தப் பதிப்பில், சிலையின் மேல் உடல் பகுதி அசல் சிலையின் ஒளிப்படங்களுடன் ஒப்பிடுகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தது; குறிப்பாக, சிலையின் மேல் பகுதியில் மை பூசப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது. அசல் சிலையில் தெளிவாகத் தெரியும் உடலமைப்பு விவரங்கள் மறைக்கப்பட்டிருந்தன.
இதற்கு எழுந்த விமர்சனங்களை அடுத்து, அப்படத்தை அதன் அசல் வடிவத்திற்கு மாற்றவுள்ளதாகத் தற்போது என்.சி.ஆர்.டி.யின் இயக்குநர் தினேஷ் சக்லானி உறுதிப்படுத்தியுள்ளார். கேட்டால், அந்தப் படம் உடல் உறுப்புகள் தெரியும்படி இருந்தது என்று காரணம் சொல்கின்றனர். கோயில்களில் இருக்கும் ஆடையற்ற சிலைகளை, ஆபாச நடவடிக்கைகளில் ஈடுபடும் சிலைகளை என்ன செய்வதாக உத்தேசம்? அறிவியல் பாடப் புத்தகத்தில் மனித உறுப்புகளைக் குறிப்பிடும்போது என்ன செய்வார்கள்? எப்படி மருத்துவம் கற்பிப்பார்கள்?
இவர்களின் நோக்கம், ஆபாச மறைப்பு அல்ல. அந்தச் சிலையை ஆபாசக் கண்ணோடு பார்த்தவர்களின் கண்ணோட்டத் தில் தான் ஆபாசம் இருக்கிறது. அது படிப்படியான சிந்துவெளி நாகரிகத் திரிப்பின் இன்னொரு வடிவமே! இத்தகைய திரிப்புகள் எதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது – கூடாது!
