மின்துறையில் 15 ஆயிரம் பணியாளர்களை நியமிக்க உத்தரவு! மின்சாரப் பற்றாக்குறை இல்லையாம்! தமிழ்நாடு அரசு தகவல்

2 Min Read

சென்னை, ஜூன் 17–– மின்சாரத்துறையில் 15,058 பணியாளர்களை முறைப்படி நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தமிழ்நாட்டில் மின்சாரப் பற்றாக்குறை எதுவும் இல்லை எனவும் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொடர்ச்சியாக அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ள நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நேற்று (16.6.2026) தலைமைச் செயலகத்தில் எரிசக்தித் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டதாவது:

மின்சாரப் பற்றாக்குறை இல்லை

தமிழ்நாடு முழுவதும் மின் உற்பத்தி மற்றும் மின் கொள்முதல் போதுமான அளவில் இருப்பதால், மாநிலத்தில் மின்சார பற்றாக்குறை எதுவும் இல்லை. இருப்பினும், சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களின் சில இடங்களில் பழைமையான மின் உபகரணங்கள், நிலத்தடி மின் கேபிள் பழுதுகள், அதிகரித்துள்ள மின் பயன்பாடு, பராமரிப்புப் பணிகள், பல்வேறு சேவைத் துறைகள் சாலை தோண்டும் பணிகளின்போது எதிர்பாராதவிதமாக மின்கேபிள்கள் சேதமடைவது போன்ற காரணங்களினால் பகிர்மான அளவில் அவ்வப்போது மின்தடைகள் ஏற்படுகின்றன.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, சென்னை மாநகரப் பகுதியில் மட்டும் சுமார் ரூ.2,275 கோடி மதிப்பில் மின் விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. மாநிலம் முழுவதும் 121 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட துணை மின் நிலையங்கள் ரூ.10,109 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், 231 புதிய துணை மின் நிலையங்கள் ரூ.15,032 கோடி மதிப்பீட்டில் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் மின் கோளாறுகளை மின்னகம் சேவை மய்யங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ வழிமுறைகள் மூலம் தெரிவித்து உடனடி சேவையைப் பெறலாம். இக்கூட்டத்தில், மின் பழுது காரணமாக பெறப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும்; மேலும், மின் பழுதுகளைச் சரிசெய்திடத் தேவையான 15,058 மின் பணியாளர்களை முறைப்படி நியமிக்கவும், மின் தளவாடப் பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்திடவும், மின் பணியாளர்களை ரோந்துப் பணியில் ஈடுபடுத்திடவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையைப் பொறுத்தவரையில் ஏற்கெனவே உள்ள 125 ரோந்து குழுக்களை சுற்றுப்பணியில் ஈடுபடுத்தவும், அக்குழுவினர் அவசரப் பணிகளுக்காக புகார் பெறப்படும் இடங்களுக்குச் சென்று புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார். இவ்வாறு குறிப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை இல்லை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆனால், அன்றாடம் மின்வெட்டால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மேலும் டெல்டா பகுதியில் மின் பற்றாக்குறையில் மின்மோட்டார்கள் பாதிப்படைந்துள்ளன என்று விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *