தூத்துக்குடி, ஜூன் 17– தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில், காலமான 27 ஊழியர்களின் பெயர்களில் போலி ஆவணங்களைத் தயாரித்து ரூ.4.51 கோடி வரை நூதன முறையில் மோசடி செய்யப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிய அரசு அதிகாரிகள் 4 பேர் உட்பட 7 பேர் மீது மதுரை சிபிஅய் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முறைகேடு
தூத்துக்குடி வ.உ.சி துறைமுக ஆணைய ஊழியர்களின் ஓய்வூதிய நிதியில் முறைகேடுகள் நடப்பதாக சிபிஅய் ஊழல் தடுப்பு பிரிவினருக்கு திடீர் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், மதுரை சிபிஅய் துணை ஆணையர் சந்தோஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினர். இந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அம்பலமாகின.
துறைமுக ஆணையத்தின் ஓய்வூதியர் பிரிவில் அவுட்சோர்சிங் (வெளிப்பணி) முறையில் பணியாற்றும் ஊழியர்களான கிஷோர் பாபு மற்றும் மணிகண்டன் பிரபு ஆகியோர் இந்த மோசடியின் பின்னணியாகச் செயல்பட்டுள்ளனர். இவர்களுக்கு துறைமுக ஆணையத்தின் உயர் அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். கணினி சர்வரில் இருந்த மின்னணு தரவுகளை (Electronic Data) மாற்றி அமைத்து இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது.
2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் உயிரிழந்த 27 ஓய்வூதியதாரர்களின் இறப்பு சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் (ஆதார்), வங்கிக் கணக்கு எண்கள் மற்றும் கைப்பேசி எண்கள் போன்ற விவரங்களை இந்த கும்பல் திருத்தியுள்ளது.
கணினி சர்வரில் இறந்தவர்களின் உண்மையான வங்கிக் கணக்கு எண்களுக்குப் பதிலாக, தங்களது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தொடர்புடைய நபர்களின் பெயர்களில் மோசடியாகத் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கு எண்களைப் பதிவேற்றியுள்ளனர்.
இதன் மூலம், ஒன்றிய அரசின் ஓய்வூதியப் பணம் தொடர்ந்து அந்தப் போலி கணக்குகளுக்குச் சென்றுள்ளது. மார்ச் 2024 வரை இவ்வாறு சுமார் ரூ.4 கோடியே 51 லட்சம் முறைகேடாகப் பரிமாற்றம் செய்யப்பட்டு அள்ளப்பட்டுள்ளது.
சிபிஅய் வழக்குப் பதிவு
இந்த வழக்கில் சிபிஅய் தரப்பில் சேர்க்கப்பட்டுள்ள 4 முக்கிய அதிகாரிகள்: அனுராதா – முதுநிலை கணக்கு அதிகாரி, திருச்சி சிறீரங்கம் (கடந்த ஆண்டே ஓய்வு பெற்றவர். அதற்கு முன்பாகவே பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, ஓய்வூதியப் பலன்கள் நிறுத்தப்பட்டவர்). பழனி குமாரசுவாமி – கணக்கு அலுவலர் நிலை-2, சென்னை குரோம்பேட்டை (கடந்த ஆண்டு ஓய்வு பெற்றவர்). ரோஜர்ஸ் ஜெ.துரைராஜ் – மின்னணுத் தரவு செயலாக்க அலுவலர். காளியப்பன் – மின்னணு தரவு செயலாக்கத்துறை உதவி இயக்குநர். சந்தனசங்கர் – முதுநிலை உதவியாளர். இவர்களுடன் அவுட்சோர்சிங் ஊழியர்கள் 2 பேர் என மொத்தம் 7 பேர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.
மோசடி தொடர்பாக 21 பிரிவுகளின் கீழ் மதுரை சிபிஅய் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் முக்கிய ஆவணங்கள், கணினி ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் டிஜிட்டல் சான்றுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரிடமிருந்து ஏற்கெனவே ரூ.1.50 கோடி பணத்தை சிபிஅய் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒன்றிய அரசு அதிகாரிகள் மட்டத்தில் அரங்கேறியுள்ள இந்த கோடிக்கணக்கான ரூபாய் ஓய்வூதிய நிதி மோசடி சம்பவம், துறைமுக வளாகத்திலும் அரசு அதிகாரிகள் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
