தஞ்சையில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞரின் 103 ஆவது பிறந்த நாள் விழாவில் தி.மு.க. மாநில மருத்துவரணிச் செயலாளர் நா.எழிலன்

10 Min Read

தந்தை பெரியாரின் உழைப்புதான் இந்தத் தமிழ்நாடு!

தஞ்சை, ஜூன் 17 தந்தை பெரியாரின் உழைப்புதான் இந்தத் தமிழ்நாடு என்றார் தி.மு.க. மாநில மருத்து வரணிச் செயலாளரும், மேனாள் சட்டமன்ற உறுப்பின ருமான மருத்துவர் நா.எழிலன்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் 103 ஆவது பிறந்தநாள், பொதுநலத் தொண்டர் தஞ்சை ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம் 19 ஆம் ஆண்டு ஆகிய விழாக்களின் பொதுக்கூட்டம் கடந்த 13.06.2026 அன்று மாலை 6 மணி அளவில், தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலையில் உள்ள, பெரியார் படிப்பகத்தின் முன் நடைபெற்றது. இதில் தி.மு.க. மாநில மருத்துவரணி செயலாளர் நா.எழிலன் கலந்து கொண்டு பேசியதாவது:

தந்தை பெரியார் நம் அடையாளம்!

பேரறிஞர் அண்ணா நம் வழிகாட்டி!

என்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எனப் பலரும் கூறினார்கள். பதவி என்றைக்கும் வரும், போகும். நான் என்றைக்கும் பெரியாரின் தொண்டன், முத்தமிழறிஞர் கலைஞரின்  மருத்துவன். இவை இரண்டும் தான் எப்போதும் நிரந்தரம்! என் வாழ்நாள் பெருமையும் கூட! கலைஞர் அவர்கள் உடல்நிலைச் சரியில்லாமல் இருந்த போது, தினமும் இரவு வீட்டிற்குச் செல்வேன். கலைஞரின் உதவியாளர் பேசுவார்; சில நேரங்களில் கலைஞரே பேசுவார். மருத்துவமனைப் பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வா என்பார்.

நானும் இரவு 9 மணிக்கு மேலாக செல்வேன். மருத்துவம் பார்ப்பது சிறிது நேரம் என்றாலும், பேசிக் கொண்டிருப்பது நீண்ட நேரம் ஆகும். கலைஞரிடம் நான் பெற்ற மருத்துவக் கட்டணம் என்பது அவரது கருத்தியல் தான்! தந்தை பெரியாருடன் பயணித்த கால கட்டங்கள், அறிஞர் அண்ணாவுடன் பயணித்த கால கட்டங்கள் மற்றும் பல்வேறு தலைவர்களுடன் நடைபெற்ற உரையாடல்கள் குறித்தெல்லாம் கூறுவார்.

திமுக இளைஞரணியை 1949 தொடங்கி 1967 வரை எப்படி வலுவாக மாற்றப்பட்டது என்பது குறித்தும் கூறியிருக்கிறார். திரைத்துறையில் உருவான திராவிடக் கருத்தியல் குறித்த வரலாறுகளையும் சொல்வார்.

“பெரியார் குறித்து ஒரே வரியில் கூறுங்கள்?”, என ஒருமுறை நான் கேட்டேன். அப்போது கலைஞ ருக்கு 91 வயது. சற்றும் யோசிக்காமல், “பெரியார் நம் அடையாளம்!”, என்றார். உடனே “அறிஞர் அண்ணா?” என்றேன்.  “அவர் நம் வழிகாட்டி”, என்றார். ஆக பெரியார் என்கிற அடையாளமும், பேரறிஞர்  என்கிற வழிகாட்டியும் எப்போதும் நமக்குத் தேவைப்படுகின்றனர்.

“சீசன்” பறவைகள் போல பல கட்சிகள், இயக்கங்கள் இங்கு இருக்கின்றன. அதிகாரம் இருக்கும் போது மேடையை அலங்கரிப்பார்கள். இல்லாத போது பறந்துவிடுவார்கள். ஆக எப்போதுமே திராவிட இயக்கங்களும், திமுகவும் தான் திராவிட கருத்தியலின் மெய்க்காப்பாளர்கள்!

தமிழ்நாட்டு மக்கள்
சிந்திக்கத் தவறிவிட்டார்களா?

இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு என்பது பவுத்த-இந்து மதப் போர் என்றார் அண்ணல் அம்பேத்கர். அதேபோல 2026 தேர்தல் என்பது ஆரியத் தத்துவத்திற்கும், திராவிடத் தத்துவத்திற்கும் நடைபெற்ற போர். அதில் தற்காலிகமாக நம்மை வீழ்த்தி இருக்கிறார்கள். நாம் ஆட்சியில் இருந்த போது, பிற மாநில நண்பர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? என் சக மருத்துவர் ஒருவர், “உங்களுக்கு என்னப்பா தமிழ்நாடு சமூகநீதி மண்”, என்பார். வங்காள நண்பரோ, “கூட்டாட்சி தத்துவத்திற்கே தமிழ்நாடு தான் அடிப்படை”, என்பார். “மதச்சார்பின்மை கொள்கையைத் தங்கள் வாழ்வியலாகக் கொண்டவர்கள் தமிழர்கள்”, என மராத்தி நண்பர் சொல்வார்.

இப்படியாகப் பலரும் கூறியவர்கள், இப்போது என்ன கேட்கிறார்கள், ‘‘ஏன் உங்களுக்குத் தோல்வி ஏற்பட்டது? தோல்விக்கு யார் காரணம்?’’ என்று கேட்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு பிற்போக்கானவர்களா? தமிழ்நாட்டு மக்கள் சிந்திக்கத் தவறிவிட்டார்களா என்றும் கேட்கிறார்கள்? அப்படியானால் தமிழ்நாட்டின் அந்த “முற்போக்கு” என்ன ஆச்சு என்கிறார்கள்? ஆந்திராவின் பவன் கல்யாண் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. “ஆட்சிக்கு வருவதற்கு நான் எத்தனையோ ஆண்டுகளாய் போராடி வருகிறேன். நடிகர் விஜய் இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக ஊடகங்களின் மூலம் ஆட்சியைப் பிடித்துவிட்டார்”, என்று கூறினார்.

தேர்தலுக்கு முந்தைய தமிழ்நாடும்; பிந்தைய தமிழ்நாடும்!

இன்றைக்கு ஆட்சியைப் பிடித்தவர்கள் தேர்த லுக்கு முன், தமிழ்நாடு பின்தங்கிய மாநிலமாக இருக்கிறது என்றார்கள். இப்போது அவர்களே என்ன சொல்கிறார்கள்? டில்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய், “இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார வளர்ச்சி தமிழ்நாட்டில் உள்ளது, பெண் கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம், பாதுகாப்பு போன்றவற்றில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது, இந்திய அள வில் இருக்கும் தொழிற்சாலைகளில் தமிழ்நாட்டில் இருந்து 42 விழுக்காட்டுப் பெண்கள் வேலை செய்கின்றனர்”, எனப் பேசியுள்ளார். ஆக 2021-2026 ஆம் ஆண்டுகளின் திராவிட மாடல் அரசின் சாதனைகளுக்கு ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதேபோல பள்ளிக் கல்வித்துறை சிறப்பாக இருக்கிறது என்று ஒருவர் சொல்கிறார். ஆமாம்! அது நாங்கள் உருவாக்கியது. இன்னொருவர், சுகாதாரத்துறை சிறப்பாக செயல்படுகிறது என்கிறார். ஆமாம்! அதுவும் நாங்கள் உருவாக்கியது. மற்றொருவர், மருத்துவமனைகள் நன்றாக செயல்படுகின்றன என்கிறார். அதுவும் நாங்கள் உருவாக்கியதுதான்! ஆக இதற்கு முன் தமிழ்நாடு சரியில்லை என்றவர்கள், இப்போது நம் சாதனைகளையே பேசி வருகிறார்கள்.

தீர்மானங்கள் அரசாணைகளாக மாறிய வரலாறு!

1929 முதல் 1947 வரையுள்ள மாநாட்டுத் தீர்மா னங்களைத் தொகுத்து “நமது குறிக்கோள்” எனும் பெயரில் திராவிடர் கழக வெளியீடாக ஒரு நூல் உள்ளது. பொதுவாகத்  திராவிடத் தத்துவம் என்பது, ஒவ்வொரு விசயம் குறித்தும் மக்களிடம் உரையாடி, அதில் எதுவெல்லாம் மக்களுக்குத் தடையாக இருக்கிறது எனப் பார்த்து, குறிப்பாகப் பெண்கள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டி யலின மற்றும் விளிம்பு நிலை மக்களுக்குத் தடையாக இருப்பதை நிவர்த்தி செய்ய போராடுவதே இதன் நோக்கம். அதற்காகக் கூட்டங்கள் நடத்தி, மாநாடுகள் போட்டு, அந்தப்  பிரச்சினைகளைத் தீர்மான வடிவில் இயற்றி, அவை நூலாகவும் இருக்கின்றன.

பெண்களுக்கான சொத்துரிமை, இடஒதுக்கீடு போன்ற எண்ணற்ற தீர்மானங்களை கலைஞர் அரசாணையாக மாற்றினார்.

1932 இல் அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் என்பது கூட திராவிட இயக்கத்தின் தீர்மானம்தான்! வேளாண்மையில் கிடைக்கும் விளைச்சலில், விவசாயிகளுக்கு நியாயமான பங்கு வேண்டும் என்கிற தீர்மானங்களும் இதில் அடக்கம். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குமே தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன. அதைக் கலைஞர் நிறைவேற்றித் தந்துள்ளார்.

பாளையத்தம்மன் கோயில் குடியிருப்புகள்!

எனது தொகுதியில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு செய்தியையே இங்கு எடுத்துக் காட்டுகிறேன். 1971-1976 ஆம் ஆண்டில் குடிசை மாற்று வாரியத்தைக் கலைஞர் உருவாக்கினார். ஒருசாரார் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பதை போல ஏழை எளிய மக்கள், கிராமப்புறங்களில் வசிப்போர், ஜாதிய ஒடுக்குமுறைக்கு ஆளானோர் எனப் பலரும் வாழ வழிவகை செய்யும் வகையில் குடிசை மாற்று வாரியத்தில் நவீன தன்மையுடன், நகர்ப்புற குடியிருப்புகளை உருவாக்கினார் கலைஞர். அந்த அடிப்படையில் எனது சட்டமன்றத் தொகுதியில் பெரிய பாளையத்தம்மன் என ஒரு கோவில் உள்ளது. அங்கு 1977 ஆண்டு கலைஞரால் கட்டப்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன.

இந்நிலையில் ஆண்டுகள் பல கழிந்ததால் கட்டடம் பழுதடைந்தது. எனவே அந்த மக்களை வேறு இடத்திற்கு மாற்றி, புதிய வீடுகள் கட்டித்தர நான் ஏற்பாடு செய்தேன். வசிக்கும் இடத்தைவிட்டு வெளியே சென்றால், மீண்டும் அந்த இடம் கிடைக்காது என மக்கள் அச்சத்தில் இருந்தனர். நான் அவர்களுக்கு உறுதி கொடுத்தேன். பழைய கட்டடங்களை இடித்துவிட்டு, பணிகளைத் தொடங்க லாம் என இருந்த போது, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் சிலர் அந்த இடத்தில் கோயில் கொடியைக் கொண்டு வந்து ஊன்றிவிட்டனர். “இது கோயில் தொடர்பான இடம். இங்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டக் கூடாது”, எனக் கூறி பிரச்சி னைகள் ஏற்படுத்தினர்.

கலைஞரின்
தொலைநோக்குச் சிந்தனை!

என் மீதான நம்பிக்கையில் 50 குடும்பங்கள் வெளியேறி காத்திருக்கிறார்கள், அவர்களுக்கு வீடுகளை ஒப்படைத்தாக வேண்டும். இந்நிலையில் சில அதிகாரிகள் பிரச்சினைகள் செய்ததும் பரபரப்பான சூழ்நிலை உருவானது. இந்த இடத்தில் தான் பெரியாரின் தீர்மானங்களை, மக்கள் பயன்படும் வகையிலான மனிதநேயத் தீர்மானங்களை நாம் நினைவு கூற வேண்டும். அந்தத் தீர்மானங்களை அரசாணைகளாக மாற்றி, தமிழ்நாட்டைப் பாதுகாத்த கலைஞர் அவர்களையும் நினைவு கூற வேண்டும்.

பெரிய பாளையத்தம்மன் கோயில் இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் எழுப்பிய கலைஞர், அதுதொடர்பாக ஓர் அரசாணையும் அப்போதே உருவாக்கி வைத்துள்ளார். அதாவது இந்தக் குடியிருப்பில் வசிப்பவர்கள் கோயிலின் தூய்மைப் பணியாளர்கள். மேலும் கோயிலின் பராமரிப்பை மூன்று தலைமுறைகளாகச் செய்து வருபவர்கள். அதனால் இங்கு வசிக்க உரிமை உண்டு என அரசின் ஆணையாகவே உருவாக்கி வைத்துள்ளார் கலைஞர்.

இந்தச் செய்திகளை மய்யமாக வைத்து, இடையூறு செய்த அதிகாரிகளைக் கண்டித்து, உடனடியாகப் புதிய வீடுகளை உருவாக்க ஆணைப் பிறப்பித்தார் அன்றைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். ஆக 1932 இல் பெரியாரால் இயற்றப்பட்ட தீர்மானம், 1972 இல் கலைஞரால் கொண்டு வரப்பட்ட அரசாணை, அந்த அரசாணையைச் செயல்படுத்திய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், ஒரு பெரியாரியத் தோழராக இருந்து முன்னின்று அதைக் கவனித்துக் கொண்ட நான்! ஆக எப்போதும் மக்கள் நலன்தான் முக்கியமே தவிர, சாஸ்திர, சம்பிரதாயங்கள் அல்ல என நாம் பாடுபட்டோம். அந்த மக்களுக்குப் புத்தம் புதிய, நவீன வீடுகள் தயார் செய்யப்பட்டு, அவர்கள் வசிக்கவும் தொடங்கிவிட்டனர். ஆனால் தேர்தலில் வேறு யாருக்கோ வாக்களித்துவிட்டனர்.

பெரியாரின் உழைப்புதான்
இந்தத் தமிழ்நாடு!

பெரியாரின் போர் முறை என்பது அறுவை சிகிச்சை போன்றது. கத்தி, கத்தி, திட்டி, திட்டித்தான் இந்தத் தமிழ்நாடைப் பெரியார்  உருவாக்கினார். பெரியாரின் கொள்கைகள் அனைத்துமே மானுட தத்துவம் தான்! பெண்ணுரிமை என்பது ஒரு மானுடத் தத்துவம், சமத்துவம் என்பது ஒரு மானுடத் தத்துவம், சமூகநீதி என்பது ஒரு மானுடத் தத்துவம். அந்தக் கொள்கைகளைச் செயல்படுத்தியதால் தான், தமிழ்நாடு இன்றைக்கு முன்னேறிய மாநிலமாக இருக்கிறது. பெரியாரின் உழைப்பு தான் இந்தத் தமிழ்நாடு! அதனால் தான் இது முற்போக்கு மண், பகுத்தறிவு மண், சமூகநீதி மண் என்கிறோம். அந்தப் பெரியார் கொள்கையின் அடிப்படையில் உருவானது கட்சிதான் திமுக. தந்தை பெரியாரின் வழிகாட்டுதல் இல்லையென்றால் தமிழ்நாடும் ஒரு வட மாநிலம் போல ஆகியிருக்கும்.

2026 தேர்தலில் வாக்காளர்கள்

சுயசிந்தனை, பகுத்தறிவு இரண்டையும் மறந்துவிட்டார்கள். அதேநேரம் தோல்வியை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இளைஞர்களிடம் இன்னும் அதிகம் செல்ல வேண்டும். பிரச்சார அணுகுமுறைகளைப் புதுப்பிக்க வேண்டும். இந்தக் கூட்டத்திற்குப் பல பெரியோர்கள் வந்துள்ளனர். ஆனால் பிள்ளைகளை அழைத்து வர முடியவில்லை. நான் சிறுவனாக இருந்த போதே, என் அப்பா என்னை இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு நிகழ்ச்சிகளுக்குச் செல்வார். கூட்டத்தை நான் முழுக் கவனம் இல்லாமல் கேட்டாலும், ஏதோ ஒரு பத்து விழுக்காடு எனக்குப் புரிந்து அதை உள்வாங்குவேன். அதிலிருந்து  நான் வளர்ந்து வந்தேன். இப்போது என் பிள்ளைகள் இருவரும் முழு பகுத்தறிவாளர்களாக இருக்கிறார்கள். பகுத்தறிவு என்பது கடவுள் இல்லை என்பது மட்டுமல்ல; எதையும் சிந்திக்கக் கற்றுக் கொடுப்பது. சிந்திக்கத் தவறும் போதுதான் பாதிப்புகள் ஏற்படுகிறது.

மக்களை நேசித்த
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நாம் கூட பயனாளிகள் வாக்காளர்களாக மாறுவார்கள் என நினைத்ததோம். அதனால் திட்டங்களைத் தீட்டிக் கொண்டே இருந்தோம். 2021 முதல் 2026 வரை,

கரோனா எனும் கொடிய நோய் தொடங்கி, ஆட்சி முடியும் வரை தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நல்ல தூக்கமே இல்லை. ஒரு மருத்துவராகவும் இதைச் சொல்கிறேன். அவரைப் போல மக்களை நேசித்த முதலமைச்சரை நாம் காண முடியாது. கரோனா பிரச்சினைக்குப் பிறகு அனைத்து மாநிலங்களும் வீழ்ந்தன. நம் தமிழ்நாடு இரட்டை இலக்க வளர்ச்சியைப் பெற்றது.

ஆனால் இன்றைக்குப் புதிய ஆட்சி வந்து ஒரு மாதத்தில் எண்ணற்ற கலவரங்கள். இனி எப்படி வெளிநாட்டு முதலீடுகள் இங்கு வரும்? நம்மிடம் இருந்த சிறு, சிறு குறைகளை மிகப் பெரியதாக்கி, பொய்யை மூலதனமாக்கி ஆட்சிக்கு வந்துவிட்டார்கள். மக்களுக்கு நிழலை உருவாக்க நாம் உழைத்தோம். அதைச் செயல்படுத்தவும் செய்தோம். இப்போது வெயில் அடிக்கத் தொடங்கி இருக்கிறது. நிழலின் அருமை வெயிலில் தானே தெரியும்?

பெரியார் வழிதான் தீர்வு!

இனி வரும் காலங்களில் பகுத்தறிவுச் சிந்தனையை அதிகரிக்க வேண்டும். தலையின் முன்பக்கம் உள்ள மூளை பகுத்தறிவோடு சிந்திப்பதற்குப் பயன்படு கிறது. பின்பக்க மூளையோ உணர்வுகளை மட்டுமே தூண்டுகிறது. பசி வந்தால் சாப்பிட தூண்டும், பயம் வந்தால் ஓடத் தூண்டும். இது ஒரு உணர்ச்சியின் அடிப்படையில் செயல்படுபவை.

மிருகங்களுக்கு இந்தப் பின்பக்க மூளை மட்டுமே செயல்படும். ஆனால் மனிதர்களுக்கு உள்ள முன்பக்க மூளையையும் வேலை செய்ய விடாமல் சிந்திக்காதே, யோசிக்காதே, நல்லவரா? கெட்டவரா? எனப் பார்க்காதே, என அந்த உணர்ச்சியைத் தூண்டிவிட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிட்டனர். அதனால் நாம் பகுத்தறிவுச் சிந்தனைகளை விரிவுப்படுத்த வேண்டும்; முழுமைப்படுத்த வேண்டும். அதற்குப் பெரியார் வழிதான் ஒரே தீர்வு”, என மருத்துவர் எழிலன் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *