சென்னை, ஜூன் 16– தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளி வளாகங்களில் அரசியல், மதம் மற்றும் சித்தாந்த ரீதியிலான நிகழ்ச்சிகளை நடத்த தடை விதித்த அரசு உத்தரவை எதிர்த்த வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதுவரை, இந்த உத்தரவாதப் பிரிவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பின்னணி என்ன?
கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி தனியார் பள்ளி வளாகங்களில் அரசியல், மதம் மற்றும் சித்தாந்தம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. இந்த உத்தரவு முறையாக அமல்படுத்தப்படும் என்று ஆண்டுதோறும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் அனைத்து தனியார் பள்ளிகளும் தமிழ்நாடு அரசிடம் உறுதிமொழி (உத்தரவாதம்) அளிக்க வேண்டும்.
அரசின் இந்த உத்தரவை எதிர்த்து வேலூரைச் சேர்ந்த சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சென்னையைச் சேர்ந்த சிறீகாமராஜ் வித்யாலயா தொடக்கப்பள்ளி ஆகியவை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், “ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்” என்ற நிபந்தனைக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பு: அரசுத் தரப்பில் இதுவரை இந்த வழக்கு தொடர்பாக எந்தவொரு பதில்மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது.
அரசுத் தரப்பு: வழக்கில் விரிவான பதில்மனுவைத் தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் தேவை என்று அரசு வழக்குரைஞர் கோரிக்கை விடுத்தார். அரசுத் தரப்பின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு பதில்மனு தாக்கல் செய்ய நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், அதுவரை தனியார் பள்ளிகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற பிரிவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்தும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.
நீட் முறைகேடு போராட்டம்
ஜெய்ப்பூரில் கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே மீது தாக்குதல்!
ஜெய்ப்பூர், ஜூன் 16- நீட் தேர்வு மற்றும் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், இதற்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும், ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ சார்பில் நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கட்சி நிறுவனர் மீது தாக்குதல்
இப்போராட்டங்களில் அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே நேரில் பங்கேற்று தலைமை தாங்கி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ‘ஷஹீத் ஸ்மாரக்’ பகுதியில் நேற்று (15.6.2026) மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது, அபிஜீத் தீப்கே தனது ஆதரவாளர்களின் தோள்களில் அமர்ந்தபடி தொண்டர்களை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த சிலர், திடீரென அவரைச் சுற்றி வளைத்து அவரது கன்னத்தில் பளாரென அறைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், தாக்குதலில் ஈடுபட்ட 2 இளைஞர்களைப் பிடித்துக் காவலில் வைத்துள்ளனர். மேலும், இந்தத் தாக்குதலின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகப் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன் மீதான இந்தத் தாக்குதலைக் “கோழைத்தனமான செயல்” என்று அபிஜீத் தீப்கே வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:”என் மீது நடத்தப்பட்ட இந்த உடல்ரீதியான தாக்குதல் என்பது அவர்களின் பயத்தின் வெளிப்பாடே ஆகும். இதுபோன்ற மிரட்டல்களுக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். எங்களின் குரலை அமைதியான முறையில் தொடர்ந்து வலுவாக உயர்த்துவோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் ஜெய்ப்பூர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தயார் நிலையில்
46 ஆயிரம் புதிய குடும்ப அட்டைகள்!
சென்னை, ஜூன் 16- தேர்தல் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குடும்ப அட்டை சேவைகள் தற்போது மீண்டும் தொட ங்கியுள்ளன. உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் விரைவாக அட்டைகள் வழங்குமாறு அறிவுறுத்தியதை அடுத்து அச்சிடும் பணிகள் முடிந்துள்ளன.
ஜனவரி மாதம் முதல் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், முதற்கட்டமாக 46,000 அட்டைகள் தயார் நிலையில் உள்ளன.
அடுத்த சில நாட்களில் விநி யோகம் தொடங்கும் என் றும், தகுதியான அனை வருக்கும் படிப்படியாக வழங்கப்படும் என்றும் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
