தமிழ்நாட்டுக்கு ஆபத்து என்றால் உயிரையும் பணயம் வைப்போம்!
தொகுதி மறுவரையறை ஆபத்தைக் கண்டிக்காத
அ.தி.மு.க. கூட்டணி 234 தொகுதிகளிலும்
தோல்வியடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!
சென்னை, ஏப்.18- திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று (17.4.2026) பெரம்பலூரில் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது, “இந்தியாவின் அரசியல் வரைபடத்தையே – தென்னிந்திய மக்களின் எதிர்காலத்தையே சின்னா பின்னம் ஆக்கும் கருப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டிருக்கிறது. உங்களில் ஒருவனாக இருக்கும் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கருப்புக் கொடி ஏற்றி, அந்தச் சட்ட நகலை எரித்து, நம்முடைய எதிர்ப்பைக் காட்டியிருக்கிறோம். தமிழ்நாட்டில் பரவியிருக்கும் இந்தத் தீ, டெல்லியைச் சுட்டெரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறேன்.
இதனை எதிர்த்துப் போராடவில்லை என்றால், நாம் தமிழர்களாக இருந்து எந்தப் பயனும் இல்லை. இன்னும் சொன்னால், இதனை எதிர்க்காத யாரும் தங்களைத் தமிழர் என்று சொல்லிக் கொள்ளத் தகுதியும் இல்லை.தேர்தல், ஆட்சி அதிகாரம் இவை அனைத்துமே நமக்கு இரண்டாம் பட்சம்தான் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் ஆட்சிக்கே வந்தோம். இப்போது, தமிழ்நாட்டுக்கு ஆபத்து என்றால், திமுக பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா.உயிரே போனாலும் தி.மு.க. இந்த அநியாயத்தை தடுக்கும். வடக்கோடு போர் செய்வது தமிழ்நாட்டிற்கு என்ன புதிதா? நன்றாகவே பழக்கப்பட்டதுதானே? என்றார்.
வேட்பாளர்கள் அறிமுகம்:
குன்னம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ். சிவசங்கர், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் டாக்டர் ஜெயலட்சுமி, அரியலூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் லதா பாலு , ஜெயங் கொண்டம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் க.சொ.க. கண்ணன் இந்த நான்கு பேருக்கும் உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் எல்லாம் பெருவாரியான வாக்கினை வழங்கி, வெற்றி பெற வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசியல் ரீதியாக நான் விளக்கி விட்டேன். இப்போது இல்லை, ஓராண்டிற்கும் மேலாக குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் அவர்கள் ஒரு பதிவு போட்டிருக்கிறார். “இந்தியாவில் நீங்கள்தான் இதனை முதன்முதலில் சொல்லி எச்சரித்தீர்கள், நீங்கள் சொன்னது போன்று இப்போது நடக்கிறது” என்று அவருடைய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.ஒட்டுமொத்த தென் மாநிலங்களும் போராடுகின்றன நம்முடைய உரிமைக்காகப் போராடிக் கொண்டு இருக்கிறோம். பிரதமரிடம் இது தொடர்பாக விளக்கத்தையும், வாக்குறுதியையும் கேட்கிறோம்.ஆனால், இப்படிப்பட்ட நேரத்தில் நேற்று கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல் அவர் நாகர்கோவில் வந்து சும்மா ஷோ காட்டிவிட்டுச் சென்றிருக்கிறார். கிண்டலாகச் சொல்லவில்லை, உண்மையாகவே ரோடு-ஷோ மட்டும்தான் நடத்திவிட்டுச் சென்றிருக்கிறார். நாம் கேட்ட கேள்விக்கும் பதில் இல்லை என விமர்சித்தார்.
மோடி வரும்போது அவருக்குப் பூ தூவச் சென்றிருக்கிறார். யார் தெரியுமா? நம்முடைய பழனிசாமி. பிரதமர்கூட, “நம்மிடம் பழனிசாமி இதைப்பற்றி ஏதாவது கேட்பாரா? என்று அவர் யோசித்து இருப்பார். ஆனால், பழனிசாமி அவருடைய ஜி கூட ஜீப்பில் நின்று கொண்டு ஊர்வலம் சென்றதோடு சரி, ஒன்றும் பேசவில்லை.
பிரதமரைப் பார்த்துப் பழனிசாமி சிரித்த சிரிப்பிலேயே அவருக்குப் புரிந்திருக்கும், இந்த அடிமை குரல் கொடுக்க மாட்டார், இவரை வைத்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று பிரதமர் மோடி நினைத்திருப்பார்.அவர் நினைத்ததற்கும் மேலாகச் சிறந்த அடிமை என காட்டுவதுபோன்று இன்றைக்கு அவர் பேசியிருக்கிறார். தொகுதி மறுவரையறையை பா.ஜ.க. அரசு மிக அருமையாகச் செய்வார்களாம்! பழனிசாமி அவர்களே… எவ்வளவு பெரிய காமெடி இது… இந்தியாவில் இருக்கும் பல முதலமைச்சர்களும், பல எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த ஆபத்தை தெரியாமலா கண்டிக்கிறார்கள். பா.ஜ.க. பழனிசாமியை குனியச் சொன்னால், படுத்தே விட்டார் என்பது போன்று பேசியிருக்கிறார்.
அந்தச் சட்டத்தின் முன்வரைவே வெளிவந்துவிட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குப் பேராபத்து வரப் போகிறது என்று அதில் தெளிவாக இருக்கிறது. இதனைக் கொண்டு வரும் முறையே பாசிசத் தனம் இது. தமிழ்நாட்டில் இருக்கும் பா.ஜ.க. தலைவர்கள்கூட இது என்ன, இதை எப்படி நியாயப்படுத்துவது எனத் தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பழனிசாமி, அவர்களை எல்லாம் முந்திரிக் கொட்டை மாதிரி முந்திக் கொண்டு முட்டு கொடுத்துக் கொண்டு இருக்கிறார். இப்படிப்பட்ட அடிமைகளின் துணையோடு தமிழ்நாட்டிற்குள் நுழைய நினைப்பவர்களை எல்லையிலேயே நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.பத்து தோல்வி பழனிசாமிக்குப் பதினோராவது தோல்வியையும் நாம் வழங்க வேண்டும்.அதுவும் இந்தத் பதினோராவது தோல்வி மறக்க முடியாத தோல்வியாக இருக்க வேண்டும்.பொதுவாக, 18 ஆண்டு சபரிமலை செல்பவர்களை குருசாமி என்று ஆன்மீக அன்பர்கள் சொல்லுவார்கள். ஆனால், பழனிசாமி அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பில் தொடர்ந்தால், 18 முறை தொடர்ந்து தோற்று, தோல்வியில் குருசாமி பழனிசாமி என்று மாறிவிடுவார்.
தமிழ்நாட்டிற்கு முதற்கட்டத்தில் தேர்தல் வைக்காமல் கொஞ்சம் தள்ளி வைத்தால், தி.மு.க. வெற்றி பெறும் எண்ணிக்கையாவது குறையுமா என பா.ஜ.க. ஒரு கணக்கு போட்டார்கள். ஆனால், அதுவும் இப்போது தப்புக் கணக்காகப் போய்விட்டது. ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் வரும் கருத்துக்கணிப்புகளைப் பார்த்தாலே தெரிகிறது. முதலில் நமக்கு 180 என்று போட்டார்கள். இப்போது 190, 200 எனப் போட ஆரம்பித்துவிட்டார்கள். தேர்தலுக்குள் இருநூறைக் கிராஸ் செய்துவிடும். அதுவும் தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தைக்கூட எதிர்த்துப் பேசாத அ.தி.மு.க. கூட்டணி 234 தொகுதிகளிலும் தோல்வியடைந்தாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. ஏனென்றால், தமிழ்நாடு மக்கள் அந்த அளவுக்குக் கொதித்துப் போயிருக்கிறார்கள். இதற்குக் கூடப் பேசவில்லை என்றால் வேறு எதற்குத்தான் பழனிசாமி வாயைத் திறப்பார் என்று கேட்கிறார்கள்.” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

