நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்பு தொகுப்புத்திட்டம்

3 Min Read

தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, ஜூன் 13 குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் – 2026 செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்திருப்பதாவது: காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை, கார் மற்றும் சொர்ணவாரி பருவங்களில் மேற்கொள்ளப்படும் நெல் சாகுபடியை ஊக்குவித்து, நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் 2026ஆம் ஆண்டில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் (பகுதி), திருச்சி (பகுதி), அரியலூர் (பகுதி) ஆகிய டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்வதற்கு, மேட்டூர் அணை ஜூன் 12ஆம் நாளன்று திறப்பது வழக்கமாகும். நடப்பு தென்மேற்குப் பருவத்தில் ‘எல்நினோ’ எனும் நிகழ்வால் மழை அளவு 90 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவமழை தாமதமாகும் நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் தற்போது மேட்டூர் அணையில் நீர்மட்டம் 79.56 அடி (நீர் இருப்பு: 41.52 டிஎம்சி) மட்டுமே உள்ளது. எனவே மேட்டூர் அணையை திறக்கவில்லை. டெல்டா மாவட்டங்களில் வடிமுனைக் குழாய்க் கிணறுகள் மூலம் 3.55 லட்சம் ஏக்கர் வரை சாகுபடி மேற்கொள்ள இயலும் என்பதாலும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் தற்போது மழைப்பொழிவு சீராக இல்லாத நிலையிலும் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட கார் / குறுவை / சொர்ணவாரிப் பருவத்தில் நெல் சாகுபடி செய்வதை ஊக்குவிக்கவும், நெல் உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகள் பயனடையும் வகையில் 2026ஆம் ஆண்டிற்கான குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம்

அந்தவகையில், வடிமுனைக் குழாய்களைக் கொண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக 77.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் கார், குறுவை மற்றும் சொர்ணவாரி நெல் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக 57.33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் என மொத்தம் 134.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தில், நெல் இயந்திர நடவு / நேரடி நெல் விதைப்பிற்கான ஊக்கத்தொகை, உயிர் உரங்கள், நெல் நுண்ணூட்ட உரக்கலவை, விதை நெல் விநியோக மானியம் மற்றும் புதிதாக வெளியிடப்பட்ட நெல் இரகங்களின் சான்று விதை உற்பத்திக்கான ஊக்கத்தொகை ஆகிய இனங்களுக்கு 134.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடாக டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களின் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்படுகிறது.

வேளாண் பொறியியல் துறை வாயிலாக டெல்டா மாவட்டங்களில் உள்ள 2,325 கி.மீ. நீளமுள்ள சி மற்றும் டி வாய்க்கால்கள் 10 கோடி ரூபாய் செலவில் தூர் வாரப்பட்டுள்ளன. மேலும், நீர்வளத்துறை மூலமாக 100 கோடி ரூபாய் செலவில் 4,971 கி.மீ. நீளமுள்ள ஏ மற்றும் பி வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது வரை 97 சதவீதப் பணிகள் முடிவுற்றுள்ளன. மேலும், குறுவை சாகுபடிக்கு 10,714 மெட்ரிக் டன் நெல் விதைகள் மற்றும் 4.02 லட்சம் மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தடையில்லா மும்முனை மின்சாரம் நாளொன்றுக்கு 18 மணிநேரம் வழங்கப்படும். எனவே, டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவிகளைப் பெற்றுப் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *