பட்டா மனுக்கள் மீது 15 நாட்களில் நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

3 Min Read

சென்னை, ஜூன் 13- பொதுமக்கள் அளிக்கும் பட்டா தொடர்பான மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று (12.6.2026) செய்தியாளர் களைச் சந்தித்த அவர் கூறியதானது

பட்டா வழங்குவதில் பொதுமக்கள் சந்திக்கும் காலதாமதத்தை முற்றிலும் குறைக்கும் நோக்கில் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

பொதுமக்கள் அளிக்கும் பட்டா தொடர்பான மனுக்கள் அனைத்தும், பெறப்பட்ட 5 நாட்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்படும். பரிசீலனை செய்யப்பட்ட மனுக்களின் மீது, அடுத்த 15 நாட்களுக்குள் இறுதி முடிவு எடுக்கப்பட்டு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களின் அலைக்கழிப்பைத் தவிர்க்கும் நோக்கில் இந்த புதிய காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

தொடரும் மின்வெட்டால்

விவசாயிகளுக்குக் கடும் பொருளாதார இழப்பு

பிரேமலதா குற்றச்சாட்டு

சென்னை, ஜூன் 13- தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக பயிர்கள் வாடியதால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பையும் வேதனையையும் சந்தித்து வருகின்றனர்.

விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடி முழுமையாக வழங்கப்படாதது ஒரு புறம்; மின்வெட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவது மறுபுறம். உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி என்பதுபோல் விவசாயிகளின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது. எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடத்தக்கது.

 

பொது இடங்களில்

விதிமீறி சுவரொட்டி ஒட்டியவர்களுக்கு

ரூ.2.45 லட்சம் அபராதம்!

சென்னை, ஜூன் 13– சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் நேற்று (12.6.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியின் சார்பில், சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சிப் பகுதிகளில் சென்னை மாநகரின் அழகை சீர்குலைக்கும் வகையில் மேம்பாலங்கள், சாலையோரங்களில் உள்ள சுவர்கள், அரசு மற்றும் மாநகராட்சி கட்டடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.

மீறி சுவரொட்டி ஒட்டுபவர்கள் மீது மாநகராட்சி மூலமாக அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறாக, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் 12ஆம் தேதி இந்த மாதம் 9ஆம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில் அரசு, மாநகராட்சி கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி ஒட்டப்பட்ட 4,491 சுவரொட்டிகள் அகற்றப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.2,45,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுதல் மற்றும் சுவர் விளம்பரங்கள் வரைதல் ஆகியவற்றை தவிர்த்து சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க முழு ஒத்துழைப்பை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. மீறும் நபர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பயிர்க்கடனை முழுமையாகத்
தள்ளுபடி செய்யக்கோரி

திருவாரூரில் 50 இடங்களில் விவசாயிகள் மறியல்

திருத்துறைப்பூண்டி, ஜூன் 13- தவெக அரசை கண்டித்து திருவாரூரில் 50 இடங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று (12.6.2026) மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அளித்த தேர்தல் வாக்குறுதிபடி கூட்டுறவு வங்கி மூலம் பெறப்பட்ட அனைத்து கடன்களையும் தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூரில் மாவட்டம் தழுவிய சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் பிச்சன் கோட்டகத்தில் விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 30க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல் துறையினர் கைது செய்தனர். இதேபோல் ராயநல்லூர், கடியாச்சேரி, ஆலத்தம்பாடி, மணலி, பாமணி, நெடும்பலம் உள்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகளை காவல் துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *