நாமக்கல், ஜூன் 11- பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப் பட்டு வருகிறது. கடந்த 20 நாளில் பெட்ரோல், டீசல் விலை லிட்ட ருக்கு ரூ.8 வரை அதிகரித் துள்ளது.
நாடு முழுவதும் சராசரியாக ஒரு லிட்டர் டீசல் ரூ.100க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை உயர்வு மற்றும் சுங்க கட்டண உயர்வின் காரணமாக, லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 6.50 லட்சம் லாரிகளில், 40 சதவீத லாரிகள், டீசல் மற்றும் சுங்கக்கட்டண உயர்வால் சரக்குகள் ஏற்றுவதை நிறுத்தி விட்டன. இந்த லாரிகள் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.
இந்நிலையில், நாமக்கலில் நேற்று (10.6.2026) மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயற்குழு கூட்டம், மாநில தலைவர் தனராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் லாரி தொழிலில் தற்போது நிலவும் நெருக்கடிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்துக்கு பின்னர், மாநில தலைவர் தனராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டீசல் விலை லிட்டருக்கு ரூ.8 வரை உயர்த்தப்பட்டுள்ளதால், லாரி தொழில் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. எனவே, விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும். இதனால், லாரி உரிமையாளர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்களின் வாழ் வாதாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக, தவிர்க்க முடியாத சூழ்நிலையில், லாரி வாடகையை உயர்த்த முடிவு செய்துள்ளோம்.
தற்போதுள்ள வாடகையில் இருந்து 25 சதவீதம் லாரி வாடகை உயர்த்தப்படுகிறது. வரும் 15ஆம் தேதி முதல் இந்த புதிய வாடகையில் லோடு ஏற்ற முடிவு செய்துள்ளோம். இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களுக்கு வருந்துகிறோம். லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, பொதுமக்கள் இந்த வாடகை உயர்வை ஏற்க வேண்டும்.
தமிழ்நாட்டிலிருந்து வட மாநிலங்களுக்கு சென்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு லாரிகள், தேசிய அனுமதிக்கான வரி தொகையை, இங்கிருந்து இணையம் மூலம் செலுத்தி, வாகனங்கள் தமிழ்நாடு வருவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். ஆனால், ஒன்றிய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் லாரி உரிமையாளர்கள், லாரிகளுக்கான தேசிய அனுமதி வரியை செலுத்துவதற்கான இணைய அனுமதியை முன்பு போல வழங் காமல், தற்போது இணையத்தில் நிறுத்தி வைத்துள்ளதால், தேசிய அனுமதி வரியை எங்களால் கட்ட முடியாமல் உள்ளது. இதனால் வட மாநிலங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்நாடு லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
எனவே, அதற்கான அனுமதியை விரைந்து வழங்க வேண்டும். வாகனங் களில் இருப்பிடக் கருவிகளுக்கான விலையை, அரசே நிர்ணயம் செய்ய வேண்டும், இந்த கருவிகளை வழங்கும் தனியார் நிறுவனங்கள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு செயல்படுகின்றன. பிற மாநிலங் களில் குறைவான விலையில் வழங்கும் நிலையில், தமிழ்நாட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
எனவே, தமிழக போக்குவரத் துறை அமைச்சர், இந்த பிரச் சினையில் தலையிட்டு குறைந்த விலையில் கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு தனராஜ் தெரிவித்தார்.
