‘விடுதலை’ 92 ஆம் ஆண்டு பெருவிழாவில் எழுத்தாளர் ப.திருமாவேலன் சிறப்புரை

8 Min Read

ஒரு கொள்கைக்காக தொடங்கப்பட்ட ஒரு பத்திரிகை 92 ஆண்டுகள் வளத்தோடும், நலத்தோடும், பல்வேறு ஆதிக்கச் சக்திகளுக்கு, ‘‘பயமுறுத்தும்’’ நாளிதழாக இன்றும் இருக்கிறது என்றால்,
உலகத்திலேயே ‘விடுதலை’ பத்திரிகை ஒன்றாகத்தான் இருக்க முடியும்!
அப்படி ஒரு பத்திரிகைக்கு 64 ஆண்டுகள் ஆசிரியராக இருந்த பெருமை என்பது, நம்முடைய ஆசிரியர் அவர்களுக்குத் தான் இருக்க முடியும்!

சென்னை, ஜூன் 11 ‘‘ஒரு கொள்கைக்காக தொடங்கப்பட்ட ஒரு பத்திரிகை 92 ஆண்டுகள் வளத்தோடும், நலத்தோடும், பல்வேறு ஆதிக்கச் சக்திகளுக்கு, ‘‘பயமுறுத்தும்’’ நாளிதழாக இன்றும் இருக்கிறது என்று சொன்னால், அது உலகத்திலேயே ‘விடுதலை’  பத்திரிகை ஒன்றாகத்தான் இருக்க முடியும். அப்படி ஒரு பத்திரிகைக்கு 64 ஆண்டுகள் ஆசிரியராக இருந்த பெருமை என்பது, நம்முடைய ஆசிரியர் அவர்க ளுக்குத் தான் இருக்க முடியும்’’ என்றார் எழுத்தாளர் ப.திருமாவேலன் அவர்கள்.

‘விடுதலை’ 92 ஆம் ஆண்டு பெருவிழா!

கடந்த 1.6.2026 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்ற ‘விடுதலை’ 92 ஆம் ஆண்டு பெருவிழா – சுயமரியாதைச் சுடரொளிகள் குணசீலன் – தங்கமணி படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வில்,  எழுத்தாளர் ப.திருமாவேலன்  சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை  வருமாறு:

இனமான கேடயம் ‘விடுதலை’யின் 92 ஆவது ஆண்டு பெருவிழாவினுடைய தலைவர் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்களே, இந்த நிகழ்ச்சியில் முன்னிலை வகிக்கின்ற பெருமக்களே, வரவேற்புரையாற்றிய தளபதி பாண்டியன் அவர்களே, நன்றியுரை ஆற்ற இருக்கின்ற இறைவி  அவர்களே, இணைப்புரை ஆற்றி வரும் மதிவதனி அவர்களே, பெரியோர்களே, கருப்பு மெழுகுவர்த்திகளே!

30 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நினைவுகள் வருகின்றன!

இந்த நிகழ்ச்சிக்கு முன்னால் நம்முடைய பெரியவர் குணசீலன் – தங்கமணி ஆகியோருடைய படத்திறப்பு நடந்திருக்கின்றது. அந்தப் படங்களைப் பார்க்கும்போது எனக்கு ஒரு 30 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நினைவு கள் வந்தன. இங்கே என்னுடைய அருமை நண்பரும், எனது சட்டக்கல்லூரி காலத்தோழருமான வழக்குரைஞர் குமாரதேவன் அவர்களும் இருக்கிறார். அவர்தான் முதன்முதலில் குணசீலன் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் அப்போது. சட்டக்கல்லூரி மாணவராக இருந்த காலத்தில், பெரியார் திடலுக்கு  மாணவர்களாகிய நாங்கள் எப்போது வந்தாலும்,  அங்குள்ள மனிதர்களில் ஒருவராக  குணசீலன் அவர்கள் எப்போதும் இருப்பார். பெரியார் பணி முடிப்பதே தனது இலக்கு என்பதை உணர்த்தக்கூடியவராக அவர் இருப்பார். எங்கும், எப்போதும் தன்னை முன்னி லைப்படுத்திக் கொள்ளாமல், தனது இயக்கம் முக்கியம், தனது தலைவர் முக்கியம், தந்தை பெரியார் முக்கியம், ஆசிரியர் முக்கியம் அதைத் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை என்று நினைக்கக்கூடிய மனிதராக அவர் இருந்தார்.

எங்களுக்கெல்லாம் பக்கபலமாக இருந்தவர் பெரியவர் குணசீலன்!

சட்டக்கல்லூரியில்  வட இந்திய மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஹோலி பண்டிகை கொண்டாடிய போது, திராவிடர் கழகத்தின் மாண வர்களாகிய நாங்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து, ஒரு சிறு பிரச்சினை ஏற்பட்டபோது,  ‘‘நீங்கள் எப்போது கூப்பிட்டாலும் உங்களுக்காக வருவேன்’’ என்று சொல்லி, எங்களுக்கெல்லாம் பக்கபலமாக இருந்தவர் பெரியவர் குணசீலன் அவர்கள். அவருடைய படத்தை இத்தனை ஆண்டுகள் கழித்துப் பார்க்கும்போது, எத்தகைய மனிதர்கள் பெரியாரின் சுயமரியாதைச் சுடரொளியாக, இந்த மண்ணில், இந்த பெரியார் திடலில் உருவாகி, பெரியார் திடலையும் உருவாக்கிவிட்டுப் போயிருக்கிறார்கள் என்று நினைக்கும்போது, இதுதான் பெரியார் இயக்கத்தினுடைய பெருமை என்பது.

படங்களாக அல்ல, நமக்குப் பாடங்களாக அமைந்திருக்கின்றார்கள்!

அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த அனைத்துப் பெருமக்களும் இங்கு வந்தார்கள் என்று சொன்னால், பெரியார் இயக்கம் என்பது அரசியல் இயக்கம் அல்ல; அது ஒரு குடும்ப இயக்கம் தான் என்பதை நிரூபிக்கக்கூடிய, மெய்ப்பிக்க கூடிய குடும்பமாக அய்யா குணசீலன் அவர்களுடைய குடும்பம் இங்கே அமர்ந்திருக்கின்றது. அவருடைய படமும் இங்கே நம்முடைய மானமிகு ஆசிரியர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது. இவர்கள் படங்களாக அல்ல, நமக்குப் பாடங்களாக அமைந்திருக்கின்றார்கள். அதுவும் வரலாற்றில் இன்று மிக முக்கியமான நாள் – ஜூன் 1. ‘விடுதலை’ தொடங்கிய நாள் என்பது மட்டுமல்லாமல்,  திராவிட இயக்கத்தின் ‘திராவிடர் தளபதி’ என்று போற்றப்பட்ட சர் ஏ.டி. பன்னீர் செல்வம் அவர்களுடைய பிறந்த நாளும் இன்று. திராவிடர் தளபதி என்று சொன்னால், ‘தளபதி’ என்கின்ற வார்த்தையை உச்சரிப்பதற்கு யோக்கியதை உள்ள முதல் மனிதராக இருந்தவர் நம்முடைய சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்கள்.

வரணாசிரமத்தின், ஸநாதனத்தின் நிலப்பிரபுத்து வத்தின் கோட்டையாக இருந்த தஞ்சை மாவட்டத்தில், அவர்களுக்கு மட்டுமே அவாள்களுக்கு மட்டுமே மடங்களும், மடாதிபதிகளும், மடாலயங்களும், அவர்களுடைய தங்கும் இடங்களும் இருந்த காலத்தில், அந்த இடத்தைப் பார்ப்பனர் அல்லாதார் மாணவர்களுக்காக சட்டத்தின் மூலமாக உடைத்து, திறந்துவிட்ட முதல் மனிதன் நம்முடைய சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள்.

பெரியாரின் குரலை சட்டமன்றத்துக்குள் ஒலித்தவர் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்கள்

அதேபோல் திருவையாறு சமஸ்கிருத கல்லூரியில் பார்ப்பனர் அல்லாதார் சேர முடியாது என்கின்ற நிலைமையை மாற்றி, பார்ப்பனர் அல்லாதார் சேரலாம் என்று சொன்னது மட்டுமல்ல,  சமஸ்கிருத கல்லூரியை, அரசர் கல்லூரி என்று மாற்றியவர் சர் ஏ.டி. பன்னீர் செல்வம் அவர்கள். 1938 ஆம் ஆண்டு ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் மிக முக்கியமாக நடந்து கொண்டிருந்த போது, சட்டமன்றத்தில் ஒரே எதிர்க்கட்சியாக இருந்து, பெரியாரின் குரலை சட்டமன்றத்துக்குள் ஒலித்தவர் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்கள். ஹிந்தியை எதிர்ப்பவர்கள் இரண்டு பேர்; ஒன்று, ஈ.வெ.ராமசாமி, இன்னொருவர் சோமசுந்தர பாரதி மட்டும்தான் என்று முதலமைச்சர்  இராஜாஜி சொன்னபோது, ‘‘ஹிந்தியை எதிர்ப்பவர்கள் இரண்டு பேர். ஆனால், ஆதரித்துப் புகுத்துபவர் நீங்கள் ஒருவர்தான்’’ என்று சட்டமன்றத்தில் சொன்னவர் அவர்.

தமிழர்களுக்குத் தலைநகராக இருப்பது ஈரோடுதான்!

இன்னொன்றும் இராஜாஜி சொன்னார், ‘‘நீங்கள் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்; தஞ்சை மாவட்டத்துக்காரருக்கு ஈரோட்டில் என்ன வேலை?’’ என்று இராஜாஜி கேட்டபோது, ‘‘இந்தியாவுக்கே குருகுலமாக இருப்பது காந்தியின் வார்தா என்றால், தமிழர்களுக்குத் தலைநகராக இருப்பது ஈரோடுதான்’’ என்று சொன்னவர் சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் அவர்கள்.

1938 இல் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் பெல்லாரி சிறையில் இருந்தபோது, நீதிக்கட்சி யினுடைய மாநாட்டில், நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பெல்லாரி சிறைக்கே சென்றவர்கள் இரண்டு பேர். ஒருவர் ‘முத்தமிழ் காவலர்’ என்று பாராட்டப்பட்ட கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்கள். இன்னொருவர் திராவிடர் தளபதி சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்கள்.

பெரியார், எழுதிக் கொடுத்த அறிக்கையை, தமிழில் வாசித்தவர் கி.ஆ.பெ. ஆங்கிலத்தில் வாசித்தவர் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்கள். இந்த வரலாறுகளை எல்லாம் நாம் ஏன் சொல்கிறோம் என்று சொன்னால், எப்படிப்பட்ட தியாகிகளை நாம் தலைவர்களாகப் பெற்றிருக்கிறோம் என்பதுதான் நமக்கு இருக்கின்ற பெருமை – அந்தத் தலைவர்களுக்கும் இருக்கின்ற பெருமை. சர்.ஏ.டி.பன்னீர் செல்வத்தினுடைய வாரிசுகளாக நாம் இங்கே நிற்கின்றோம். அவர் இறந்து 12 ஆண்டுகள் கழித்து ‘பராசக்தி’ படம் வந்தது. ‘பராசக்தி’ படத்தில் கல்யாணிக்கு ஆண் குழந்தை பிறந்தால், ‘பன்னீர் செல்வம்’ என்று பெயர் வைப்பது என்றும், பெண் குழந்தை பிறந்தால் ‘நாகம்மை’ என்று பெயர் வைக்க வேண்டும் என்று கதை – வசனம் எழுதியவர் கலைஞர் அவர்கள். தனது மருமகனுக்குச் செல்வம் என்று பெயர் சூட்டியவரும் கலைஞர் அவர்கள்.

92 ஆண்டு கால ‘விடுதலை’க்கு
64 ஆண்டு கால ஆசிரியர்!

நன்றி மறந்த சமூகமாக நாம் இல்லை; நன்றியை உணர்த்திய சமூகமாக நம்மை வளர்த்தவர்கள் நம்முடைய தலைவர்கள். ‘விடுதலை’ நாளேட்டுக்கு வழக்குரைஞராக இருந்தவரும் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்கள். 1938 ஆம் ஆண்டு ‘விடுதலை’ மீது பல்வேறு அடக்கு முறைகள் பாய்ந்தபோது, அதற்காக வழக்குரைஞராக இருந்தும் வாதாடி இருக்கிறார். அவர் வாதாடிய இதழின் 92ஆவது ஆண்டை நாம் கொண்டாடுகிறோம் என்று சொன்னால், அதன் 64 ஆண்டு கால ஆசிரியர் இங்கே இருக்கிறார்.

உலகத்தில் தனிப்பட்ட முதலாளிகளின் சார்பாக, தனிப்பட்ட நிறுவனங்களின் சார்பாக, தனிப்பட்ட வர்த்தக நிறுவனமாக தொடங்கப்பட்ட பத்திரிகைகள் எல்லாம், அந்தக் குடும்பங்களோடு அல்லது அந்த லாபங்களோடு முடிந்திருக்கின்றன. ஆனால், ஒரு கொள்கைக்காக தொடங்கப்பட்ட ஒரு பத்திரிகை 92 ஆண்டுகள் வளத்தோடும், நலத்தோடும், பல்வேறு ஆதிக்கச் சக்திகளுக்கு, ‘‘பயமுறுத்தும்’’ நாளிதழாக இன்றும் இருக்கிறது என்று சொன்னால், அது உலகத்திலேயே ‘விடுதலை’  பத்திரிகை ஒன்றாகத்தான் இருக்க முடியும். அப்படி ஒரு பத்திரிகைக்கு 64 ஆண்டு கள் ஆசிரியராக இருந்த பெருமை என்பது, நம்முடைய ஆசிரியர் அவர்களுக்குத் தான் இருக்க முடியும்.

ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு மிகப்பெரிய களம்
அமைத்துக் கொடுத்தது ‘விடுதலை!’

‘இதழின் சார்பில் அவர் வளர்ந்தாரா? அவர் வளர்த்ததால் இதழ் வளர்ந்ததா?’ என்று கண்டுபிடிக்க முடியாத வளர்ச்சி என்பது இதுதான். ‘விடுதலை’ நாளேடு என்பது 1935 இல் தொடங்கப்பட்டு, அதன் பிறகு 1937 இல் நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு மிகப்பெரிய களம் அமைத்துக் கொடுத்த பத்திரிகை என்று சொன்னால், அது ‘விடுதலை’ நாளிதழ்தான். இன்றைக்குப் பெண்கள் இவ்வளவு பேர் இந்த அரங்கத்தில் உட்கார்ந்திருக்கிறீர்கள்.  உங்கள் ஓய்வு நேரத்தில் சிலர் பார்த்திருக்கலாம்; ஆனால், 1938 ஆம் ஆண்டு ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது, ‘விடுதலை’ நாளேட்டினுடைய முதல் பக்கத்தை மட்டும் திருப்பிப் பாருங்கள். எத்தனை பெண்கள், இளைஞர்கள், குழந்தை கள் சிறைக்குப் போயிருக்கிறார்கள் என்பதை புகைப்படத்தோடு, அந்த ‘விடுதலை’ நாளிதழ் வெளியிட்டு இருக்கின்றது. கைக் குழந்தைகளோடு மொத்தம் 1,045 பேர் தமிழ்நாடு முழுக்க கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று சொன்னால், அதில் பெண்கள் எத்தனை பேர்? குழந்தைகள் எத்தனை பேர்? என்கின்ற முழு வரலாறு இருக்கின்ற ஒரு பத்திரிகை நம்முடைய ‘விடுதலை’ பத்திரிக்கை.

‘‘தமிழ்நாடு தமிழருக்கே’’ என்கின்ற சொல்லை உருவாக்கி…

‘1938 ஆம் ஆண்டு ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் யாரோ தொடங்கினார்கள், பெரியார் வந்து ஒட்டிக்கொண்டார்’ என்று தமிழ்த் தேசிய வியாதிகள் அனை வரும் இன்று சாக்கடைத்தனமான சொற்களைக் கக்கி கொண்டிருக்கின்றார்களே, அந்தக் கபோதிகள் யாருக்கும் இந்த ‘விடுதலை’ பத்திரிகையினுடைய வரலாறு என்பது தெரியாது. ஒதுங்கி இருந்த தமிழ்த்தென்றல் மறைமலை அடிகள் அவர்களை, ‘நீங்கள் பல்லாவரத்தை விட்டு வெளியேறி வாருங்கள்; தமிழுக்கு ஆபத்து வந்திருக்கிறது; நீங்கள் எந்தத் தமிழை போற்றி வருகிறீர்களோ, அந்தத் தமிழுக்கு ஆபத்து வந்திருக்கிறது. இன்றோடு இந்தத் தமிழ் ஒழிந்துவிட்டால், இனிமேல் உங்களுக்கே மரியாதை இல்லாமல் போய்விடும். எனவே, மறைமலையடிகளே வெளியே வாருங்கள்’ என்று ‘விடுதலை’ பத்திரிகையில் பகிரங்கமாக அழைப்பு விடுக்கப்பட்ட பிறகுதான், மறைமலையடிகள் அவர்கள் வெளியில் வந்தார்கள். 1938 ஆம் ஆண்டு போராட்டம் என்பது தொடங்கப்பட்டது. இன்றைக்கும் தமிழ்த் தேசியவாதிகள் யாராலும் சொல்ல முடியாத ஒரு வார்த்தை, ‘‘தமிழ்நாடு தமிழருக்கே’’ என்பது ‘‘தமிழ்நாடு தமிழருக்கே’’ என்கின்ற சொல்லை உருவாக்கி, அதைத் ‘‘தமிழ்நாடு தமிழருக்கே’’ என்கின்ற குரலாக அய்ந்தாண்டு காலம், ‘விடுதலை’ பத்திரிகையில் தொடர்ச்சியாக முழங்கி, அதை மிகப்பெரிய இயக்கமாக மாற்றியது ‘விடுதலை’ பத்திரிகைதான். இது தமிழ்த் தேசியவாதிகள் யாருக்கும் தெரியாது.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *