சென்னை, ஜூன் 10- அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2026-2027ஆம் கல்வியாண்டில் பிஇ, பிடெக் படிப்புகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு (லேட்ரல் என்ட்ரி) தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு பாலிடெக்னிக் டிப்ளமா படித்தவர்கள், பிஎஸ்சி பட்டதாரிகள் இணைய வழியில் (www.tnlea.com) விண்ணப்பிக்கலாம். இணைய வழியில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஜூலை 7ஆம் தேதி ஆகும். கூடுதல் விவரங்களை மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பி.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
காஞ்சியில் உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை!
காஞ்சிபுரம், ஜூன் 10- காஞ்சிபுரம் ஆட்சியர் சினேகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உயர் கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ், 2025-2026ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு முடித்த அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கையை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை மய்யத்தில் உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி சேர்க்கை சார்ந்த வழிகாட்டல் தேவைப்படும் மாணவர்கள், அவர் பெற்றோர் நேரடியாக, 044-27237107, 9788858663 (வாட்ஸ் அப் ) ஆகிய எண்கள் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். இது சனி, ஞாயிறு, அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 – மாலை 5 மணி வரை செயல்படும்.
