சென்னை,ஜூன் 10- தமிழ்நாட்டில் முன்னெப் போதும் இல்லாத வகையில், கடந்த அய்ந்து மாதங்களில் மட்டும் 145 பேரின் உடல் உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டு, அதன் மூலம் சுமார் 800 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய (TRANSTAN) உறுப்பினர் செயலர் மருத்துவர் என்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் முதலிடம்
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நாட்டின் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் உறுப்பு மாற்று நடவடிக்கைகள் மிகவும் சிறப்பாகவும், மேம்பட்ட நிலையிலும் உள்ளன.
அதன் காரணமாகவே, இந்திய அளவில் உடல் உறுப்புக் கொடையில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது” என்றார்.
அரசு மரியாதை தந்த விழிப்புணர்வு
கடந்த 2023 செப்டம்பர் 23ஆம் தேதி, தமிழ்நாடு அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, “உறுப்புக் கொடை செய்பவர் களின் உடலுக்கு அரசு சார்பில் அரசு மரியாதை செலுத்தப்படும்” என அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டம் மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தற்போது இத்தகைய திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டுகளின் புள்ளி விவரங்கள் 2024-இல்: 268 பேர் உறுப்புக் கொடை செய்தனர். இதன் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் 1,500 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
கடந்த ஆண்டில்: மூளைச்சாவு அடைந்த 266 பேரிடம் இருந்து உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டு 1,476 பேருக்குப் பொருத்தப்பட்டுள்ளன.
நடப்பு ஆண்டின் சாதனை
(கடந்த 5 மாதங்களில்):
(கடந்த 5 மாதங்களில்):
நிகழாண்டில் இதுவரை 145 கொடையாளர்களிடம் இருந்து மொத்தம் 799 உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டுள்ளன. இது தமிழ்நாடு மருத்துவ வரலாற்றில் முன்னெப் போதும் நிகழ்ந்திராத ஒரு சாதனையாகும்.
பெறப்பட்ட உறுப்புகளின் விவரம்
உறுப்பு எண்ணிக்கை: சிறுநீரகங்கள்: 263, கல்லீரல்கள்: 118, நுரையீரல்கள்: 41, இதயம்: 39.
தமிழ்நாட்டில் இது வரை ஒட்டுமொத்தமாக 2,466 கொடையாளர் களிடம் இருந்து 14,395 உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டு, பல்லாயிரக் கணக்கானோருக்குப் புதிய வாழ்வு அளிக்கப் பட்டுள்ளது.
ஒட்டுமொத்த உறுப்புகள் விவரம்:
சிறுநீரகங்கள்: 4,356, விழி வெண் படலங்கள் (கண்கள்): 3,638, கல்லீரல்கள்: 2,182, இதய வால்வுகள்: 1,099, இதயங்கள்: 1,022, நுரையீரல்கள்: 1,059
உயிரிழந்த நிலையிலும் பிறருக்கு வாழ்வளிக்கும் உன்னத நோக்கில் உறுப்புக் கொடை செய்யும் கொடையாளர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவத் துறையினரும் சமூக ஆர்வலர்களும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து வருகின்றனர்.
