சி.பி.எஸ்.இ பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளை இந்தியா முழுவதும் இவ்வாண்டு மொத்தம் 17,69,000 மாணவர்கள் எழுதினர். விடைத்தாள்களைக் கணினி உதவியுடன் திருத்தவிருப்பதாக அறிவித்திருந்தது சி.பி.எஸ்.இ! விடைத்தாள்களைத் திருத்த டிஜிட்டல் முறையில், திரைவழி மதிப்பெண் வழங்கும் முறை (On Screen Marking)யைச் சி.பி.எஸ்.இ அறிமுகப்படுத்தியது. 98.67 லட்சம் விடைத்தாள்கள் 70,000 மதிப்பீட்டாளர்களால் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டன. இதற்காக 6,000 மய்யங்களில் சுமார் 88,000 கணினிகள் பயன்படுத்தப்பட்டன என்று பெருமையாக அறிவித்தது ஒன்றிய அரசு. தேர்வு முடிவுகள் மே 13 அன்று வெளிவந்தன; எதிர்பார்த்ததை விட மிக மிகக் குறைவான மதிப்பெண்கள் பலருக்கு வந்திருந்தன. கடந்த ஆண்டை விட 3 சதவிகிதம் தேர்ச்சி விகிதமே குறைந்தது. மறு கூட்டல், மறுமதிப்பீடு போன்றவற்றுக்கு விண்ணப்பிக்க, தாங்கள் எழுதிய விடைத்தாளைப் பார்க்க விண்ணப்பித்தனர் மாணவர்கள். பல பக்கங்கள் ஒழுங்காக ஒளிவருடப்படவில்லை (Scan). மங்கலாக இருந்தன; தெளிவற்று இருந்தன; முழுமையாக விடைத்தாள்கள் பலருக்குக் கிடைக்கவில்லை; சர்வர் பிரச்சினை எழுந்தது. மெல்ல மெல்ல அனைவருக்கும் இந்தப் பிரச்சினை தெரியவர, நாடு முழுக்கக் கொந்தளிப்பு எழுந்தது. நடுவில் இணையதளமே எளிமையாக யாராலும் திருடப்படும் வகையில் இருப்பதை ஓர் இளைஞர் கண்டுபிடித்துத் திகைக்க வைத்தார். நடந்த பிரச்சினைக்குத் தான் பொறுப்பேற்பதாகக் காலந்தாழ்ந்து அறிவித்தார் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
இதனிடையே ஜார்க்கண்ட் மாநிலம் போகாரோவைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவர் சர்தாக் சித்தாந்த் என்பவர், நடந்தவற்றைக் குறித்து மேற்கொண்ட சில தேடல்கள் இதன் பின்னணியில் நடந்திருப்பது தவறு அல்ல – ‘‘ஊழல்’’ என்பதை வெளிக்கொண்டு வந்துள்ளன. இதனை ஒரு பதிவாக விரிவாக அந்த மாணவர் எழுதியுள்ளார். கல்வித் துறைக்கான திக் விஜய் சிங் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு இம் மாணவரை அழைத்து விளக்கம் அறிந்துள்ளது.
விடைத்தாள்களைக் கையாள்வதற்கும், திருத்துவதற்கும் ஒப்பந்தம் செய்திருந்த ‘‘கோஎம்ப்ட் எடுடெக்’’ என்ற நிறுவனம், கடந்த 2019இல் குளோபரீனா என்ற பெயரில் தெலங்கானாவில் இதே போல ஓர் ஒப்பந்தம் செய்து, அங்கு நடந்த தேர்வில் 3.8 லட்சம் மாணவர்கள் தோல்வியடைந்ததாக அறிவித்து, அதனால் 23 மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்குக் காரணமான நிறுவனம். பெயர் மாற்றிக் கொண்டு கோஎம்ப்ட் எடுடெக் என்ற பெயரில் வந்து, ஒட்டுமொத்த இந்தியாவுக்கான சி.பி.எஸ்.இ. டெண்டரை எடுத்துள்ளது. இதற்காக மூன்று முறை ஒப்பந்தம் கோரப்பட்டிருப்பதையும், முதல் இரண்டு முறை ஒப்பந்தம் கோரிய அறிவிக்கைகள் ரத்து செய்யப்பட்டு, மூன்றாம் முறை அதற்கான விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யபட்டிருப்பதையும் சர்தாக் சித்தந்த் சுட்டிக் காட்டுகிறார். முதல் முறை ஒப்பந்தம் கோரிய விதிமுறைகளில் ‘மோசமான செயல்திறன் கொண்ட வரலாறு இருந்தால் அவர்களை ஒப்பந்தம்செய்யக் கூடாது’ என்றிருந்தது, மூன்றாம் முறை ஒப்பந்தப் புள்ளி கோரிய விதிமுறைகளில் நீக்கப்பட்டுள்ளது.
‘முன்பு எப்போதாவது தடை செய்யப்பட்ட நிறுவனமாக இருந்தாலும், அந்த நிறுவனம் ஒப்பந்தத்தில் பங்கேற்க முடியாது’ என்று இருந்த விதிமுறை, ‘தற்போது தடைசெய்யப்பட்ட நிறுவனமாக இருந்தால் மட்டும்’ என்று திருத்தப்பட்டுள்ளது. இப்படி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகு தான் மேல் சொன்ன கோஎம்ப்ட் எடுடெக் நிறுவனம் மிகுந்த ஒப்பந்தத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.
இப்படி ஒன்று இரண்டல்ல… நிறுவனத்தின் செயல்திறன், பணி அனுபவம், சொந்தமான தரவுத் தளம் வைத்திருத்தல், மென்பொருளைச் சொந்தமாக வைத்திருத்தல், தவறிழைத்தலுக்கான தண்டம், சி.பி.எஸ்.இ முந்தைய அதிகாரிகள் உடன் நிறுவனத்தின் தொடர்பு உள்ளிட்ட தகுதிக்கான பல்வேறு கூறுகள் திருத்தப்பட்டதால் தான் இந்த ஒப்பந்தத்தை இந் நிறுவனத்தால் வாங்க முடிந்துள்ளது.
இத்தனை திருத்தங்கள், மாற்றங்கள் செய்து இந்த நிறுவனத்தை உள்ளே கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? அதில் இவ்வளவு தவறுகள், குழப்படிகள் நடந்திருப் பதற்குப் பொறுப்பு யார்? இதன் பின்னான ஊழல் என்ன?
லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய ஒரு தேர்வை இவ்வளவு அலட்சியமாகவும் பொறுப்பற்ற தன்மையிலும் நடத்தும் இந்த சிபிஎஸ்இ நிறுவனம் தான், ஒட்டு மொத்த இந்தியாவின் பள்ளிக்கல்வி துறையைக் கட்டுப்படுத்த வேண்டும் எனறும் அதன் கீழ் அனைத்து கல்வி நிறுவனங்களையும் கொண்டு வர வேண்டும் என்றும் ஒன்றிய அரசு துடிக்கிறதே, அதற்கான அடிப்படைத் தகுதி உண்டா இவ் வமைப்புக்கு?
இன்னொருபுறம் நீட் தேர்வில் மோசடிகள், அதனால் நாடு முழுக்க அதைத் திரும்ப எழுத வேண்டிய கட்டாயத்திற்கு மாணவர்கள் ஆட்படுத்தப்பட்டுள்ளனர்.
எல்லாவற்றையும் கட்டி ஆள வேண்டும் என்று வெறி இருந்து என்ன பயன்? அதற்கான அருகதை வேண்டாமா? கல்வியை மாநிலப் பட்டியலுக்குத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து உரிமைக்குரல் எழுப்பப்பட்டு வரும் நிலையில் அதை ஒன்றிய பட்டியலுக்குள் அடக்கி முடக்கி விட வேண்டும் என்று துடியாய்த் துடிக்கும் ஒன்றிய ஆர்எஸ்எஸ் – பாஜக அரசு, இன்னும் எத்தனை லட்சம் மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாட இருக்கிறது?
கண் துடைப்பு – பதவி மாற்றம் பரிகாரமாகாது.
கல்வி அமைச்சர் அப்பதவியில் நீடிக்கலாமா?
அதிகாரிகள் மாற்றம் போதுமானதா?
நீதி – நியாயம் தேவை!
