திருச்சி மாணவி உயிரிழப்புக்கு போலி மருந்து காரணமா? ஆய்வறிக்கையில் வெளியான தகவலால் பரபரப்பு

திருச்சி, ஜூன் 4 மருத்துவத் துறையில் முன்னணி மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டில், அரசு மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்த நர்சிங் மாணவியின் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட செவிலியர் கல்லூரி மாணவி, அறுவை சிகிச்சைக்கு முன்னதாக செலுத்தப்பட்ட மருந்து காரணமாகவே உயிரிழந்திருக்கலாம் என்று முதல்கட்ட உடற்கூறாய்வு மற்றும் நிபுணர் குழுவின் ஆய்வறிக்கையில்  தகவல் வெளியாகியுள்ளது.

மூக்கு அறுவை சிகிச்சையின் போது நேர்ந்த சோகம்

புதுக்கோட்டை மாவட்டம், மணக்குடிபட்டியைச் சேர்ந்த சேட்டு – கலைச்செல்வி இணை யரின் மகள் சீதாலட்சுமி (21). இவர் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். மூக்கில் சதை வளர்ச்சி பாதிப்பு (Nasal Polyp) இருந்ததால், தான் பயிலும் திருச்சி அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக கடந்த மாதம் 21-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூக்கில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு, முதற்கட்டமாக மயக்க மருந்து மற்றும் பிற மருந்துகள் செலுத்தப்பட்டன. ஆனால், மருந்து செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே மாணவி எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். மருத்துவர்களின் தவறான சிகிச்சையே இதற்குக் காரணம் என சக மாணவிகள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விசாரிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 4 பேர் கொண்ட உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின:

பிற மருத்துவ பயனாளிகளுக்கும் பாதிப்பு: மாணவி சீதாலட்சுமி இறப்பதற்கு சில நாள்களுக்கு முன்பு, இதே மருந்து செலுத்தப்பட்ட வேறு 3 மருத்துவ பயனாளிகளுக்கும் திடீரென இதய பாதிப்புகள் ஏற்பட்டது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

மருந்து விநியோகம்: கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழ் நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) சார்பில் 4,000 ‘டெக்ஸா மெதாசோன்’ (Dexamethasone – மூச்சுத்திணறல் வராமல் தடுக்கப் பயன்படும் மருந்து) குப்பிகள் திருச்சி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் 3,500-க்கும் மேற்பட்ட குப்பிகள் ஏற்ெகனவே மருத்துவ பயனாளி களுக்குப் பயன்படுத் தப்பட்ட நிலையில், மீதமுள்ள 300 குப்பிகள் கையிருப்பில் இருந்துள்ளன.

தற்போது இந்த 4 பேர் கொண்ட நிபுணர் குழு தனது முதல்கட்ட அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதில்:

“மாணவி சீதாலட்சுமியின் உயிரிழப்புக்கு அறுவை சிகிச்சையின் போது செலுத்தப்பட்ட ‘டெக்ஸாமெதாசோன்’ மருந்தின் தரக்குறைபாடே காரணமாக இருக்கலாம். எனவே, குறிப்பிட்ட அந்த மருந்தின் தரத்தை முழுமையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.”என்று அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருந்துக்கு  தடை

இந்த முதல்கட்ட அறிக்கையைத் தொடர்ந்து, தமிழ்நாடு சுகாதாரத் துறை உடனடியாக   உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, தற்போதைக்கு அரசு மருத்துவமனைகளில் குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் ‘டெக்ஸாமெதாசோன்’ மருந்தை மருத்துவ பயனாளிகளுக்குப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் மருத்துவக் கட்டமைப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தாத நிலையில், அரசு மருத்துவமனையிலேயே தரமற்ற அல்லது காலாவதியான போலி மருந்துகளின் புழக்கம் உள்ளது  என்ற ஆய்வறிக்கையால் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *