இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 52 சதவீத பணிகள் நிறைவு! சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல்!

சென்னை, ஜூன் 1- இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒட்டுமொத்தமாக, ஏப்ரல் வரை 52.55 சதவீதம் மெட்ரோ பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் கட்ட
மெட்ரோ ரயில் திட்டம்

சென்னையில், 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மாதவரம் – சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3ஆவது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரை (26.1 கி.மீ. ) 4ஆவது வழித்தடத்திலும், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5ஆவது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன. மொத்தம், 118 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு, பணிகள் நடைபெறுகின்றன.

இதில், சுமார் 42.6 கி.மீ. சுரங்கப் பாதையில் 43 சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கியது. சுரங்கப் பாதை பணியை பொருத்தவரை, மாதவரத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங் கியது.

இதைத் தொடர்ந்து, பசுமை வழிச்சாலை, கலங்கரை விளக்கம், சேத்துப்பட்டு, பனகல் பூங்கா உட்பட பல்வேறு இடங்களில் சுரங்கப் பாதை பணிகள் தொடங்கின. பசுமைவழிச் சாலை – அடையாறு, சேத்துப்பட்டு – ஸ்டெர்லிங் சாலை, அயனாவரம் – பெரம்பூர், பனகல் பூங்கா – கோடம்பாக்கம் சுரங்கப் பாதை பணிகள் அடுத்தடுத்து நிறைவடைந்தன.

கலங்கரை விளக்கம் – மயிலாப்பூர், ராயப்பேட்டை – ஆர்.கே.சாலை, பசுமைவழிச் சாலை – மந்தைவெளி ஆகிய சுரங்கப்பாதை பணிகளும் நிறைவடைந்துள்ளன. இதுதவிர, பல்வேறு இடங்களில் சுரங்கப் பாதை பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

இதுபோல, உயர்மட்டப் பாதை பணி பொறுத்தவரை, 4ஆவது வழித்தடத்தில் பூந்தமல்லி – போரூர்- வடபழனி தடத்தில் பணிகள் நிறைவடைந்துள்ளன. அதே நேரத்தில், போரூர் – வட பழனி இடையே மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன.

வடபழனி – கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் பாதையில் தற்போது தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பல இடங்களிலும் உயர்மட்டப் பாதை பணிகளும் மும்முரமாக நடைபெறுகின்றன.

52 சதவீத பணிகள் நிறைவு

இந்நிலையில், 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒட்டு மொத்தமாக, 52.55 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல் மெட்ரோ ரயில் சேவை, 4ஆவது வழித்தடத்தில் பூந்தமல்லி – போரூர்- வடபழனி தடத்தில் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்.

இதையடுத்து, சென்னை வர்த்தக மய்யம் – போரூர் பணிகளை முடிக்க உள்ளோம். போரூர்- கோயம்பேடு ஆகிய உயர்மட்டப்பாதை பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதை சேர்த்து நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் வரை ஒட்டுமொத்தமாக 52.55 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன.

குறிப்பாக, 3ஆவது வழித் தடத்தில் உயர்மட்ட பாதைப் பணிகள் 42.71 சதவீதமும், சுரங்கப் பாதை பணிகள் 45.46 சதவீதமும் நிறைவடைந்துள்ளன. 4ஆவது வழித் தடத்தில் 60 சதவீதத்துக்கு மேலாகவும், 5ஆவது வழித்தடங்களில் 50 சதவீதத்துக்கு மேலாகவும் பணிகள் நிறைவடைந்துள்ளன. பல இடங்களில் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

சட்டப்பேரவை தேர்தல் காரணமாக, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் 2 மாதங்களாக சொந்த ஊருக்கு சென்று இருந்தனர். தற்போது, பெரும்பாலான தொழி லாளர்கள் திரும்பி வந்துள்ளனர்.

மீண்டும் பணிகள் தீவிரமடைந் துள்ளன. 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், வரும் 2027இல் அனைத்து உயர்மட்டப்பாதை பணிகளும், 2028ஆம் ஆண்டுக்குள் அனைத்து சுரங்கப்பாதை பணிகளும் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *