புதுடில்லி, மே 27– பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங் களின் நாளொன்றுக்கான இழப்பு 600 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளதாக ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டில் எரிபொருள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. இதன்படி, கடந்த இரண்டு வாரங்களுக் குள்ளாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது 4ஆவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தொடர் விலை உயர்வால் ஒட்டுமொத்தமாக ஒரு லிட்டருக்கு ரூ.7.5 வரை அதிகரித் துள்ளது. இந்த விலை உயர்வு மற்றும் தற்போதைய சந்தை நிலவரம் குறித்து இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா விளக்கியதாவது:
“கடந்த மே 15ஆம் தேதி தொடங் கிய எரிபொருள் விலை திருத்தச் சுழற்சிக்கு முன்னதாக, எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு (LPG) விற்பனையில் ஏற்பட்ட ஒட்டுமொத்த இழப்பு நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.1,000 கோடியாக இருந்தது. ஆனால், தற்போது செய்யப்பட்டுள்ள விலை மாற்றங்கள் காரணமாக, அந்த தினசரி இழப்புத் தொகையானது ரூ.600 கோடிக்கும் குறைவாகக் குறைந்துள்ளது.”
மேலும், இந்த இழப்புக் கணக்கீட்டில் சமையல் எரிவாயு விற்பனை மூலம் ஏற்படும் இழப்புகளும் அடங்கும் என்று குறிப்பிட்ட அவர், “வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு என்பது ஒரு மானியப் பொருளாகும். எனவே, இதன் உற்பத்தி செலவுக்கும், சில்லறை விற்பனை விலைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை (இழப்பை) அரசே ஏற்று ஈடு செய்கிறது” என்றும் சுஜாதா சர்மா தெளிவுபடுத்தியுள்ளார்.
