ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறப்பு பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, மே 27 ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் வெப்பச் சூழல்கள் தொடர்ந்து நிலவக்கூடும் என்பதால் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்ககளுக்குக் கோடை விடுமுறைக்குப் பிறகு 2026-2027 கல்வியாண்டிற்கான பள்ளிகள், 4 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 1.6.2026 அன்றும், 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4.6.2026 அன்றும் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.

ஆனால், இப்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது, எனவே பள்ளி திறப்பை தள்ளிவைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பில் இருந்தும் கோர்க்கைகள் தமிழ்நாடு அரசிற்கு வந்தது. அதன் அடிப்படையில், வெயிலின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என வானிலை ஆய்வு மய்யத்திடம் அறிக்கை கேட்டுள்ளோம். அது கிடைக்கப்பெற்றதும் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் தெரிவித்திருந்தார்.

ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2026-2027 கல்வியாண்டிற்கான பள்ளிகள், 4 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 1.6.2026 அன்றும், 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4.6.2026 அன்றும் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை முன்னதாக அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, நிர்வாக வசதியை உறுதி செய்யவும், வெவ்வேறு வகுப்புகளில் பயிலும் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தவிர்க்கவும், அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே தேதியில் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகளும் மனுக்களும் பெறப்பட்டன.

மேலும், தற்போது நிலவும் வானிலை சூழல் மற்றும் ஜூன் மாதத்தின் முதல் வாரத்திற்கான வானிலை முன்னறிவிப்புகள், மாநிலத்தின் பல பகுதிகளில் பருவமழைக்கு முந்தைய காலச் செயல்பாடுகள், விட்டுவிட்டுப் பெய்யும் மழை, அதிக ஈரப்பதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வெப்பச் சூழல்கள் தொடர்ந்து நிலவக்கூடும் என்பதைக் காட்டுகின்றன. பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னதாக, சுகாதாரம், குடிநீர் வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் வளாகத்தின் ஒட்டுமொத்த தயார்நிலை ஆகியவை தொடர்பான தேவைகளை அரசும் ஆய்வு செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட அனைத்துக் காரணிகளையும் கவனமாகப் பரிசீலித்த பின்னரும், தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படியும், பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை அமைச்சர் ராஜ் மோகன் பின்வருமாறு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளும், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 2026 ஜூன் 4ஆம் தேதி வியாழக்கிழமையன்று ஒரே சீராக மீண்டும் திறக்கப்படும்.

பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னதாகத் தேவையான முன்னாயத்தப் பணிகள் அனைத்தும் நிறைவு செய்யப்படுவதையும், மாணவர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற்கான போதுமான ஏற்பாடுகள் செய்யப்படுவதையும் உறுதி செய்யுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு கோரப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *