சென்னை, மே 25–- தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு எவ்வித தடையுமின்றி சீரான மின் விநியோகம் வழங்க வேண்டும் என்று மின்வாரிய ஊழியர்களுக்கு உயர் அதிகாரிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மின்வெட்டு ஏற்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்தன. இதில் பொதுமக்கள் மட்டுமன்றி, அவசரச் சிகிச்சைப்பிரிவு உள்ளிட்ட முக்கியப் பிரிவுகளைக் கொண்ட மருத்துவமனைகளும் மின்வெட்டால் பாதிக்கப்படுவதாகப் புகார்கள் குவிந்தன.
இதனால் தீவிர சிகிச்சையில் இருக்கும் மருத்துவப் பயனாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவானது. இந்த விவகாரத்தை தீவிரமாகக் கையில் எடுத்துள்ள மின்வாரியம், மருத்துவப் பயனாளிகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்ய பின்வரும் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
தடையில்லா மின்சாரம்: மருத்துவ மனைப் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருப்பதை உள்ளூர் மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.
பராமரிப்புப் பணிகள்: அவசியமான பராமரிப்புப் பணிகளின் போது மாற்று வழிகளில் மருத்துவமனைகளுக்கு மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அவசரகால ஏற்பாடு: மருத்துவ மனைகளில் உள்ள ஜெனரேட்டர்கள் (மின்னியற்றிகள்) நல்ல நிலையில் இயங்குகிறதா என்பதை ஆய்வு செய்து, அவசரக் காலத்திற்குத் தயாராக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளின் மின் தேவையை முதன்மைப் பணியாகக் கருதி, ஊழியர்கள் அலட்சியமின்றிச் செயல்பட வேண்டும் என மின் வாரியத் தலைமை கடுமையான எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
