சென்னை, மே 25- கருநாடக அரசின் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் வரும் ஜூன் 2ஆம் தேதி சென்னையில் பெருந்திரள் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று முன்தினம் (23.5.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“கருநாடக துணை முதலமைச்சர் சிவக்குமார், மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று ஆணவத்தோடு அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்புக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
கருநாடக அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும், மேகதாது அணை திட்டத்திற்கு ஒன்றிய அரசு எக்காரணம் கொண்டும் ஒப்புதல் வழங்கக் கூடாது என வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
ஜூன் 2ஆம் தேதி காலை 10 மணி அளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வைகோ தலைமையில் இந்த அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பின்வரும் தோழமைக் கட்சிகளும், அமைப்புகளும் இணைந்து பங்கேற்கின்றன:
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (கொ.ம.தே.க) மனிதநேய மக்கள் கட்சி (ம.ம.க) மனிதநேய ஜனநாயகக் கட்சி (ம.ஜ.க) மே 17 இயக்கம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி (த.வா.க) தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தற்சார்பு விவசாயிகள் சங்கம்
தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமைக்கான இந்த அறப்போராட்டத்திற்குப் பல்வேறு பொதுநல அமைப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளாக வந்து ஆதரவு தர வேண்டும் என்று வைகோ தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
