பல்‘கலைவாணனே’ போயினையோ! தமிழர் தலைவர் இரங்கல்!

2 Min Read

பகுத்தறிவாளர் கழகத்தின் கலைத்துறை மாநிலத் தலைவரும், நமது கழக – கொள்கைப் பரப்புரை சுயமரியாதை வீரருமான பொம்மலாட்டக் கலைஞர் கலைமாமணி மு.கலைவாணன் அவர்கள் (வயது 67) உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு (22.05.2026) காலமானார் என்ற செய்தி நம்மைப் பெரிதும் துயருறச் செய்வதாகும்.

அவரது தந்தையார் கலைமாமணி ந.மா.முத்துக்கூத்தன் அவர்கள் காலம் தொடங்கி, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், நாம் என்றே தலைமையேற்று, தங்கள் கலை ஆற்றலை திராவிட இயக்கக் கொள்கைகளுக்கே ஒப்படைத்தவர் தோழர் கலைவாணன். 1980களில் மேடை நாடகங்கள், வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம் என்று திராவிடர் கழக மேடைகளிலும், புரட்சிக் கவிஞர் விழாக்களிலும் மக்களைச் சிந்திக்க வைத்தவர். எந்தவொரு சூழலிலும் கொண்ட கொள்கையில் இருந்து சிறிதும் வழுவாமல், ‘மூடநம்பிக்கை, பெண்ணடிமைத் தனம், ஆரியச் சார்புகளுக்கு ஆதரவாக ஒரு போதும் தனது படைப்புகளில் இடம்தர மாட்டேன்’ என்று உறுதியுடன் மறுக்கக் கூடியவர். ‘அதனால் எத்தனை இழப்புகள் வந்தாலும் அதை ஏற்பேன்’ என்று உறுதியுடன் நின்ற சுயமரியாதைக் கொள்கையாளர். ‘பெரியார் பிஞ்சு’ இதழில்  ஏராளமான பகுத்தறிவுக் கதைகளைத் தொடர்ந்து எழுதி, புத்தகங்களாகவும் வெளியிட்டவர். நம் வழிகாட்டுதல்படி கழகத்தின் கலைத்துறையை வலுப்படுத்தும் வகையில் பயிற்சியரங்கங்களை நடத்தி வந்தவர். செங்கல்பட்டு மறைமலை நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டுக்காக தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு மக்களிடம் நம் செய்தியைக் கொண்டு சேர்த்த தீரர்! மூன்று நாட்கள் முன்பு வரை பொம்மலாட்டப் பயிற்சி அளித்துள்ளார்.

நாமும் அவ்வப்போது தொலைப்பேசியில் நலம் விசாரிப்பதுண்டு. நேற்று கூட கழகப் பொதுச் செயலாளர்  வீ.அன்புராஜ், மருத்துவமனையில் அவரைச் சந்தித்து உடல்நலம் விசாரித்துவந்தார்.

அவரது மறைவால் வாடும் அவரது தாயார், இணையர், மகன்கள் முத்தரசன், பகலவன் உள்ளிட்ட குடும்பத்தினர், கொள்கை உறவை குருதி உறவாக்கிக் கொண்ட இறையன் – திருமகள் குடும்பத்தினர், செங்கல்பட்டு மாவட்டத் தோழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கலைமாமணி மு.கலைவாணனுக்கு நமது வீரவணக்கம்!

கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம் 

 சென்னை

23.5.2026

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *