பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்துக்கு (நிகர்நிலை) நூல்கள் அளிப்பு காலஞ்சென்ற சு. ஒளிச்செங்கோவின் புத்தகச் சேமிப்பு

பெரியார் கல்வி நிறுவனங்கள்

வல்லம், மே 19- திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரிக்கு அருகில் உள்ள கண்கொடுத்தவனிதம் கிராமத்தில் வாழ்ந்துவந்த பெரியார் பெருந்தொண்டரான சு.ஒளிச்செங்கோ கடந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதியன்று உடல் நலக்குறைவு காரணமாக மறைந்தார். ‘மாலை முரசு’ நாளிதழின் செய்தி யாளராகப் பணியாற்றிய அவர் சிறு வயது முதலே பெரியார் மீது கொண்ட பேரன்பால் பகுத்தறிவுச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டார்.

1967ஆம் ஆண்டு மே மாதத்தில் விடயபுரம் பண்ணையில் தந்தை பெரியார் தலைமையில் நடந்த பகுத்தறிவுப் பயிற்சிப் பள்ளியில் ஒரு மாணவராகப் பங்கேற்றவர். சி.பா.ஆதித்தனாரின், ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் சார்பில் சட்ட எரிப்புப் போரில் கலந்துகொண்டு நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை பெற்றவர். நட்புலகில் ‘புலவர்’ என அனைவராலும் அறியப்பட்டவர். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் நெருங்கிய நட்பும் அன்பும் கொண்டிருந்தவர். 29 ஏப்ரல் 2019 அன்று திராவிடர் கழகம் பெரியார் திடலில் நடத்திய தமிழர் கலை பண்பாட்டுப்புரட்சி விழாவில் அவருக்கு ‘பெரியார் விருது’ வழங்கப்பட்டது.

பெரியார் – ஒரு வாழ்க்கைப் பாடம், விடயபுரம் – கடவுள் மறுப்பின் தொடக்கப்புள்ளி, பெரியார் அடுக்குச் சொல் மற்றும் சில கட்டுரைகள், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் திருவிக – பெரியார் அறிக்கைப் போர், கர்மவீரர் காமராசர், பெரியார் பொன்மொழிகள், பெரியார் மொழிகளும் – பயன்மொழிகளும், எல்லாம் நன்மைக்கே. ரஷ்யாவில் பெரியார் பார்த்த நாடகங்கள் உள்ளிட்ட பல நூல்களை அவர் எழுதியும் தொகுத்தும் வழங்கியுள்ளார்.

திராவிட இயக்கம், பெரியார் சிந்தனைகள், பழந்தமிழ் இலக்கியம் சார்ந்த கட்டுரைகளை ‘மாலை முரசு’, ‘விடுதலை’, ‘முரசொலி’ உள்ளிட்ட நாளிதழ்களில் எழுதியவர்.

தன் இளமை முதலே புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்டிருந்த சு.ஒளிச்செங்கோ பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரசியல், தத்துவம், இலக்கியம், கம்யூனிசம் மற்றும் பெரியார் சிந்தனைகள் தொடர்பான நூல்களைத் தம் வீட்டில் சேமித்து வைத்திருந்தார். சு.ஒளிச்செங்கோ வாழ்நாள் முழுவதும் வீட்டில் சேகரித்து வைத்திருந்த எழுநூறுக்கும் மேற்பட்ட புதிய, பழமையான அரிய நூல்களை அவரது மகன்கள் சுந்தரபுத்தன், பெரியார் இனியன் ஆகியோர் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக (நிகர்நிலை) நூலகத்திற்கு 11.05.2026ஆம் தேதியன்று அன்பளிப்பாக வழங்கினர். சுந்தரபுத்தன் எழுதிய ‘பெரியவன்’ என்ற நாவலை 2025ஆம் ஆண்டு சிறந்த புத்தகமாகப் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகக்கழகம் (நிகர்நிலை) தேர்வு செய்து விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட நூல்களைப் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக (நிகர்நிலை) நூலகத்திற்கு வழங்கிய சு.ஒளிச்செங்கோவின் புதல்வர்கள் சுந்தரபுத்தன், பெரியார் இனியன் ஆகியோருக்கு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் (நிகர்நிலை) மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *