அயோத்தி வழக்கின் தீர்ப்பை மேற்கோள் காட்டி, மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘போஜசாலா’ வளாகம் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, நாட்டின் மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பு குறித்த புதிய விவாதங்களையும் கவலைகளையும் எழுப்பியுள்ளது. பல ஆண்டுகளாக நிலவி வந்த இசுலாமியர்களின் வழிபாட்டு உரிமையை ரத்து செய்து, ஒட்டுமொத்த வளாகமும் இந்துக்களுக்கே சொந்தம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வளாகம் காலனியாதிக்கத்திற்கு முன்பு சமஸ்கிருத பாடசாலையாகவோ அல்லது மசூதியாகவோ இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினாலும், 1935ஆம் ஆண்டு தார் அரசு இதனை மசூதியாக அங்கீகரித்து இசுலாமியர்களுக்கு வழிபாட்டு உரிமைகளை வழங்கியது. 1951இல் இந்த வளாகம் இந்திய தொல்லியல் துறையின் (ASI) கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
1991ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1947 ஆகஸ்ட் 15 அன்று இருந்த வழிபாட்டுத் தலங்களின் மத அடையாளத்தை அப்படியே பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், 2003ஆம் ஆண்டு அப்போதைய பா.ஜ.க. அரசு, இங்கிருந்த “பண்டைய நினைவுச்சின்னம்” என்ற விதிவிலக்கைப் பயன்படுத்தி, இந்துக்களும் அங்கே வழிபடலாம் என்ற புதிய நிர்வாக ஏற்பாட்டைக் கொண்டு வந்தது. இதுவே சட்டத்தின் பாதுகாப்பில் விழுந்த முதல் ஓட்டையாகப் பார்க்கப்பட்டது.
2022ஆம் ஆண்டு ‘இந்து ஃப்ரண்ட் ஃபார் ஜஸ்டிஸ்’ (Hindu Front for Justice) என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், 2024இல் அந்த இடத்தில் இந்தியத் தொல்லியல் துறை சர்வே நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த சர்வேயில், அங்கு இந்துக் கோவில் சார்ந்த அடையாளங்கள் இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாகத் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில், 2003ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இரு மதத்தினருக்கான வழிபாட்டு ஏற்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், போஜசாலா வளாகம் சரஸ்வதி கோவிலுக்குச் சொந்தமானது என்று கூறி, இந்துக்களுக்கு மட்டுமே முழு வழிபாட்டு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு சட்ட வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது:
1947ஆம் ஆண்டின் நிலையை மாற்றக் கூடாது என்ற வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் மய்ய நோக்கம், “பண்டைய நினைவுச்சின்னம்” என்ற விதிவிலக்கின் மூலம் இங்கு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் மதச் சுதந்திரத் திற்கான உரிமைகளை (பிரிவு 25, 26) இந்துத்துவ அமைப்புகளுக்குச் சாதகமாகப் பயன்படுத்திய நீதி மன்றம், பல தசாப்தங்களாக அங்கு தொழுகை நடத்தி வந்த இசுலாமியர்களின் மதச் சுதந்திரத்திற்கு அதை ஏன் பொருத்தவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒரு மசூதியின் மத அடையாளம் திட்டமிட்ட அரசியல் சட்ட நடவடிக்கைகள் மூலம் எவ்வாறு படிப்படியாக மாற்றப்படுகிறது என்பதற்கு இந்த வழக்கு ஒரு மிக ஆபத்தான முன்னுதாரணமாக மாறியுள்ளது. சத்தமில்லாமல் நடந்து முடிந்துள்ள இந்தச் சம்பவம், நாட்டின் இன்னும் பல வரலாற்று வழிபாட்டுத் தலங்களை மீண்டும் ஒரு சட்ட மற்றும் அரசியல் போர்க்களமாக மாற்றுவதற்கு வழிவகுத்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
1947 ஆகஸ்டு 15இல் வழிபாட்டுத் தலங்கள் எந்த நிலையில் இருந்தனவோ, அப்படியே நீடிக்க வேண்டும் என்று (Places of Workship Special Provision – Act 1991) சட்டம் இயற்றப்பட்டது. இப்பொழுது அதற்கு மாறாக மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க முஸ்லீம்களுக்கான போஜசாலா வளாகம் ஹிந்துக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அப்படிப் பார்க்கப் போனால் இந்தியா முழுமையும் ஆயிரக்கணக்கான பவுத்தக் கோயில்கள் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளனவே! ஆய்வாளர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் ஆய்வு நூல்களான ‘பவுத்தமும் தமிழும்’, ‘சமணமும் தமிழும்’ என்கிற நூல்களைப் படித்துப் பாருங்கள் புரியும்.
அயோத்தியை அடுத்து, மத்தியபிரதேசத்தின் ‘போஜசாலா’… என ஆர்.எஸ்.எஸின் பிஜேபி ஆட்சியில் இன்னும் என்னென்னவெல்லாம் நடக்கப் போகிறதோ!
