விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், பருத்தி இறக்குமதி வரியை ரத்து செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தை முதலமைச்சர் விஜய் திரும்பப் பெற வேண்டும்! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்!

3 Min Read

சென்னை, மே 18- பருத்தி (Cotton) இறக்குமதி தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் எழுதிய கடிதம் சர்ச்சையாகி இருக்கிறது. பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடந்த 14ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்தக் கடிதத்துக்கு விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு விதிக்கப்படும் 11 சதவீத வரியை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

விஜய் கடிதத்தால்
என்ன விளைவு?

இத்தகைய முடிவால் உள்நாட்டுப் பருத்தியின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து, பருத்தி விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். இந்தச் சூழ்நிலையில், பருத்தி விவசா யிகளின் வாழ்வாதாரத்திற்கு எதிராக முதலமைச்சர் விஜய் பிரதமருக்குக் கடிதம் எழுதலாமா?

பருத்தி இறக்குமதி விவகாரத்தில் என்ன நடந்தது?

கடந்த 2025 செப்டம்பர் 30 வரை பருத்தி இறக்குமதிக்கான 11 சதவீத வரியை ஒன்றிய பாஜக அரசு ரத்து செய்திருந்தது. பின்னர், அதனை 2025 டிசம்பர் 31 வரை காலநீட்டிப்பும் செய்தது. ஒன்றிய அரசு பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்தபோதே, அகில இந்திய விவசாயிகள் சங்கம் (AIKS) உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் அமைப்புகள் அதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், ஒன்றிய பாஜக அரசு தனது முடிவைக் கைவிட்டு, இறக்குமதி பருத்திக்கு மீண்டும் வரி விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.

இறக்குமதி பருத்திக்கான வரி ரத்து செய்யப்பட்டிருந்த காலகட்டத்தில், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சுமார் 4.13 மில்லியன் டன் பருத்தியை இந்தியா இறக்குமதி செய்தது. இதன் காரணமாக, உள்நாட்டில் ஒரு குவிண்டால் பருத்தியின் விலை 1,200 ரூபாய் வரை வீழ்ச்சியடைந்தது.

இதனால் இந்திய பருத்தி விவசாயிகளுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மகாராட்டிர மாநிலத்தில் பருத்தி சாகுபடி அதிக அளவில் நடைபெறும் மாவட்டங்களில், இழப்பைத் தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவலமும் நிகழ்ந்தது.

ஒன்றிய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலையான (MSP) ஒரு குவிண்டாலுக்கு 7,120 ரூபாய் என்பது தமிழ்நாட்டு விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை. அதற்கு மாறாக, ஒரு குவிண்டால் பருத்தி 5,800 ரூபாய் முதல் 6,200 ரூபாய் வரை மட்டுமே தமிழ்நாடு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. இதனால், ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையை விடக் குறைவான விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத் திற்குத் தள்ளப்பட்டு, தமிழ்நாட்டுப் பருத்தி விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர்.

பருத்தி விவசாயிகள் வயிற்றில் அடிப்பதா? கடிதத்தைத் திரும்பப் பெற வேண்டும்!

கடந்த ஆண்டின் கசப்பான அனுபவம் கண்முன்னே இருக்கும் நிலையில், நடப்பு 2026 ஆம் ஆண்டிலும் பருத்தி இறக்குமதி வரியை ரத்து செய்யக் கோரி முதலமைச்சர் ஜோசப் விஜய், ஒன்றிய பாஜக அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பது நாடு முழுவதும் உள்ள பருத்தி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதாகும். எனவே, பருத்தி விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கையைக் கைவிட்டு, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தை முதலமைச்சர் விஜய் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு சாமி.நடராஜன் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *