நமது உடலின் இதயம், மூளை, சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்பு களுக்குப் பாதுகாப்பு வளையம் அமைத்து, காத்து வருவது எலும்புகள். மேலும் உடலின் சீரான அமைப்பிற்கும், அவற்றின் செயல்பாட்டிற்கும் எலும்புகள் மிக முக்கியப் பங்கு ஆற்றி வருகின்றன.
நமது உடம்பின் மேற்புறத்தில் தசைகள் இருந்தாலும், அவற்றுக்குச் சரியான அமைப்பை எலும்புகள்தான் தருகின்றன. இதயம்,மூளை போன்ற முக்கிய உறுப்புகள் சாதாரண விபத்துக்களில் பாதிப்படையாதபடி அவற்றைச் சுற்றிலும் எலும்புகள் பாதுகாப்பாக உள்ளன. சிறுவயதில் எலும்பின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். வயதான போது அதன் வளர்ச்சி நின்றுவிடும். எனவே, சிறு வயதிலேயே எலும்பின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களை அதிகம் சாப்பிட வேண்டும். எலும்பு வளர்ச்சிக்குக் கால்சியம், வைட்டமின் டி ஆகியவை மிகவும் அவசியமாகும். வைட்டமின் டி, கால்சியம் சத்தை அதிக அளவில் சேமித்து வைக்க உதவுகிறது. கால்சியம் உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் மட்டும் எலும்புகள் அதிகம் வளர்ச்சி அடைவதில்லை. அத்துடன் சிறந்த உடற்பயிற்சியும் இருந்தால்தான் எலும்பு வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
எலும்பு நலிவு நோய்
கால்சியம், வைட்டமின் – டி சத்துக்கள் குறைவாக இருக்கும்போது எலும்புகள் நலிவடைந்து, உடையும் நிலை ஏற்படும்.
தடுக்கும் முறைகள்
கால்சியம், மாங்கனீசு, வைட்டமின் டி நிறைந்த உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவதாலும், உடற்பயிற்சியாலும் தொடர் எலும்புகளைப் பாதுகாக்க முடியும். இதற்குப் பால், மீன், முட்டை, கொட்டைகள், அன்னாசிப்பழம், சோயாபீன்ஸ், பாதாம்பருப்பு, மீன், ஓட்ஸ், முழு கோதுமை, பீன்ஸ், பால் சேர்க்காத தேநீர்,திராட்சை, பேரிச்சை, ஆப்பிள் ஆகிய உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
போரன்
அன்னாசிப்பழம், கொட்டைகளில் போரன் அதிகம் உள்ளது. எலும்பி லிருந்து தாதுப் பொருட்கள் (கால்சியம், மாங்கனீசு) வெளியேறுவதை போரன் தடுக்கிறது. ஈஸ்டிரோஜன், ஹார்மோன் ஆகியவை ரத்தத்தில் அதிகம் இருக்க போரன் உதவுகிறது. அமெரிக்காவின் வடக்கு மிசோடாவில் டாக்டர் நீல்சன் மேற்கொண்ட ஆய்வில் போரன் குறைந்த உணவுகளைச் சாப்பிடுவதால் உடலில் கால்சியம் சத்துக்களை சேமித்து வைக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டது. மாத விலக்கு பிரச்சினை உள்ள பெண்கள், குறிப்பாக மாத விலக்கு நின்றவர்கள் கால்சியம் சத்து மிகுந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதன் மூலம் ஈஸ்ட்ரோஜன் பிரச்சினை சரியாகிவிடும். உணவில் அதிகம் உப்பை சேர்ப்பதால், வெளியேற்றம் அதிகம் இருக்குமாம். நியூசிலாந்தில் மேற்கொண்ட ஆய்வில் சிலருக்குக் குறைவான உப்பும்,சிலருக்கு அதிக உப்பும் இருக்கும் வகையில் உணவுகள் கொடுக்கப்பட்டது. இதில் குறைவான அளவில் உப்பு உள்ள உணவு சாப்பிட்டவர்களின் ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகமாகவும், அதிகம் உப்பு கொண்ட உணவு சாப்பிட்டவர்களுக்கு கால்சியத்தின் அளவு குறைவாகவும் இருப்பது கண்டறியப்பட்டது.
மது: சிறிதளவு மது சாப்பிடுவதால் கால்சியம் வளர்ச்சி அடைகிறது எனக் கூறப்படுகிறது. இதற்கு உறுதியான ஆதாரங்கள் கிடையாது. ஆனால் அதிக அளவில் மது அருந்துபவர்களுக்கு கால்சியத்தின் அளவு குறைந்து எலும்பு நோய் பிரச்சினை அதிகம் ஏற்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஏ.சி. அறையிலேயே இருப்பவர்கள்
இக்கால கட்டத்தில் வீட்டில், அலுவல கத்தில், பயணம் செய்யும் வாகனங்களில் எல்லாம் குளிரூட்டப்பட்டு, வெயில் என்பதை உடலில் காட்டாமலேயே வாழ்ந்து வருபவர்கள் தினமும் 15 நிமிடங்களாவது சூரிய ஒளி உடலில் படும்படி நடக்கவாவது செய்ய வேண்டும். இதுவும் எலும்பு பாதுகாப்புக்கு அவசியம்.
கால்சியத்தின் தேவை
50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 1,200 மி.கி. கால்சியம், 800 அய்.யு.வைட்டமின் – டி தேவை.
பால் அளவு: 12 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 1,000 மி.கி. பாலை நாள்தோறும் குடிக்க வேண்டும். கர்ப்பிணிகள் 1,200 மி.கி. பாலையும், 20 வயது உள்ளவர்கள் குறைவாகவும், 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 1,500 மி.கி. பாலை அருந்த வேண்டும். கால்சியம், வைட்டமின் – டி அதிகம் உள்ள உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டு எலும்பு தொடர்பான நோய்களுக்கு விடை கொடுக்கலாம்.
