இயற்கை தந்த கொடை தாய்ப்பால்!

மருத்துவம்

மருத்துவர் சு.நரேந்திரன்

சிறப்பு நிலைப் பேராசிரியர், தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

 

இயற்கை தந்துள்ள விந்தையான பொருள்களில் ஒன்று ‘தாய்ப்பால்’.

இது ஆறு மாதங்கள் வரை குழந்தை களுக்குத் தேவையான முழுமையான ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் ஒரு இயற்கைக் கொடையாகும்.

கர்ப்பப் பையில் இருக்கும் குழந்தை, தாயின் இரத்தத்தின் மூலம் தன் உணர்வைப் பெற்று வளர்ச்சி அடைகின்றது. பிறந்த குழந்தைக்கு உணவு தேவை. அதன் உடலுக்குப் பொருத்தமான உணவு கொடுக்கப்பட வேண்டும். அது சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும், எளிதில் செரிக்கக்கூடியதாகவும், தேவையான சத்துக்களை அளிப்பதாகவும் இருக்க வேண்டும். இத்தன்மைகளைக் கொண்ட உணவுப் பொருள்களுள் தாய்ப் பாலுக்கு ஈடான உணவு குழந்தைக்கு வேறு எதுவும் இல்லை.

தாய்ப்பால் சிறந்த சத்துணவு

குழந்தை பிறந்தவுடன் 3இல் இருந்து 6 மணி நேரத்திற்குள் அதற்குப் பசிக்க ஆரம்பித்து விடும். அப்பொழுது அதற்குக் கொடுக்கப் பட வேண்டியது கொதித்து ஆற வைத்த சுத்தமான தண்ணீர்தான். அதன் பின்னர், சுமார் 10 மணி நேரம் கழித்து, தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கலாம்.

தாய்ப்பால்தான், பிறந்த குழந்தைக்குத் தகுந்த – சிறந்த சத்துணவு ஆகும். ஏன் என்றால் அது இயற்கையாகக் கிடைக்கும் சுத்தமான பாலாகும். குழந்தைக்கு, செரிமானமின்மை, வாந்தி, பேதி ஆகியவை வருவதில்லை. தாயின், உடல்கட்டோடு இருப்பதால் இது எந்தச் சமயத்தில் வேண்டுமானாலும் கொடுக்கக்கூடிய நிலையில் (ஒத்து) உள்ளது. இதனால் பணமும், நேரமும் மிச்சமாகிறது. மேலும், மனோதத்துவ முறையில் பார்த்தாலும், தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் தாயிடம் அன்பு கொண்டவை யாக இருக்கும். ஆகவே, பிறந்த குழந்தைக்கு, தாய்ப்பாலுக்கு ஈடான வேறு சத்துள்ள உணவு வேறு எதுவும் இல்லை.

குழந்தைக்குப் பால் கொடுக்க ஆரம்பித்த முதல் இரண்டு நாள்களில் தாய்ப்பால் மஞ்சளாக இருக்கும். இதை ஆங்கிலத்தில் ‘கொலஸ்டிரம்’ என்பர்.இதில் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டு. இது குழந்தைக்கு அவசியம் கொடுக்கப்பட வேண்டும்.

ஒரு குழந்தைக்கு எந்த அளவு தேவையோ, அந்த அளவுக்குப் புரதம், கொழுப்பு, மாவுச்சத்து ஆகியவை இந்தப் பாலில் உள்ளன.

பால் கொடுக்கும் தாய்மார்கள், தங்கள் உணவுப் பழக்கத்தைச் சீராக வைத்துக் கொள்ள வேண்டும். பால், பழம், காய்கறிகள், இறைச்சி ஆகியவற்றை உண்ண வேண்டும். தாய், சத்தான உணவை உட்கொண்டால்தான் குழந்தைக்கும் சரியான உணவு கிடைக்கும். பால் கொடுப்பதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு தண்ணீரோ அல்லது பழச்சாறோ அருந்தி விட்டுப் பால் கொடுப்பது தாயின் உடலுக்கு நல்லதாகும். மனக்குறை அல்லது திடீர் என்று அதிர்ச்சி ஏற்பட்டால் தாய்க்குப் பால் சுரப்பது குறைந்துவிடும். ஆகவே, இது போன்ற மன நிலைகளை ஒரு தாய் தவிர்க்க வேண்டும். பால் கொடுக்கும் தாய்மார்கள் மனக்கவலை யின்றி மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.

படுக்கையில் பால் கொடுக்கக் கூடாது

பால் கொடுக்கும்போது கீழ்க்கண்ட முறைகளைக் கைக்கொள்ள வேண்டும். வலப் பக்கமாகவோ அல்லது இடப்பக்கமாகவோ குழந்தையை அணைத்து உட்கார்ந்து கொண்டு, மூக்கு மார்பின் மீது அழுத்தாது பால் கொடுக்கும் முறையைக் கை கொள்வது நல்லது. படுக்கையில் படுத்துக் கொண்டு குழந்தைக்குப் பால் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பால் கொடுக்கும் போது ஒவ்வொரு மார்பிலும் 5 நிமிடம் கொடுத்துப் பழகிய பின், சிறிது சிறிதாக நேரத்தை அதிகமாக்கி, 20 நிமிடம் வரை கொடுக்க வேண்டும். குழந்தைக்கு, 3 மணி நேரத்திற்கு ஒரு தடவை பால் கொடுப்பதைப் பழக்கமாகக் கொள்ள வேண்டும். இரவில் பால் கொடுக்காமல் குழந்தையைப் பழக்குவது ஒரு நல்ல பழக்கமாகும்.

பால் கொடுத்த குழந்தையை உடனே தொட்டிலில் போடக் கூடாது. சிறிது நேரம் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்து ஏப்பம் வந்த பின்னர், தொட்டிலில் போடுவது அவசியம். இல்லையேல் வாந்தி வரலாம்.

தாய் நோயுற்று இருக்கும் போது, குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கக்கூடாது. மார்பில் காயம் அல்லது வீக்கம் இருந்தால் பாலைத் தாய் தன் கையினால் பீச்சி சுமார் 5 நிமிடம் நன்றாகச் சுட வைத்துக் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைக்கு ஒரு கெடுதலும் வராது. குழந்தைக்கு வயது 12 மாதத்திற்கு மேல் ஆகிவிட்டால், பாலை நிறுத்தி விடுவது நல்லது. காய்ச்சல், இரத்தச் சோகை, காசம், புற்றுநோய், இதயக் கோளாறு உள்ள தாய்மார்கள், தாய்ப்பால் கொடுக்கக்கூடாது. தொற்று வியாதியான அம்மை, பொன்னுக்கு வீங்கி போன்ற நோய்கள் இருப்பின், குழந்தைக்குப் பால் கொடுப்பதைத் தாய் நிறுத்திவிட வேண்டும்.

குழந்தைக்குப் பால் கொடுத்தது போதுமா என்பதைத் தாய் தனது பழக்கத்தில் அறிந்துகொள்ள வேண்டும். பால் குடித்த குழந்தை தூங்க ஆரம்பிக்கும்போது சற்று எடை அதிகமாகக் காணப்படும். பால் கொடுக்கும்போது தாயும், குழந்தையும் தனியே இருப்பது நல்லது. தலைக் குழந்தை பெற்றவர்களுக்கு இது முக்கியமானதாகும். எந்தவிதக் கூச்சமுமின்றி குழந்தையின் முக பாவங்களையும், கை, கால்களை ஆட்டி அது விளையாடுவதையும், தாய் ஒரு தனியிடத்தில் இருந்து பார்ப்பதால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை ஏதும் இல்லை.

எந்தவிதத் தட்ப வெப்பச் சூழ்நிலைகளிலும் குழந்தைக்குப் பெரும் சக்தி அளிப்பது தாய்ப்பால்தான்.

ஆனால், நகர நாகரிகத்தில் வசிக்கும் சில தாய்மார்கள் குழந்தைப் பால் கொடுப்பதைத் தவிர்க்க நினைப்பதைக் காண்கிறோம். குழந்தையை விட்டு வெளியிடங்களுக்குச் செல்கிறவர்களும், தங்களது உடலழகு கெட்டுவிடுமே என்று நினைப்பவர்கள் தாய் என்னும் பெரும் பேற்றை மதிக்காதவர்கள் என்றுதான் கூற வேண்டும். இவர்கள் குழந்தையுடன், மாதந்தோறும் மருத்துவரை நாட மறப்பதில்லை. ஏன்? இவர்கள்தான் நாட்டில் வாந்தி பேதியால் உண்டாகும் ஆயிரக்கணக்கான குழந்தையின் மரணத்திற்குக் காரணம் என்று கூறினால், அது மிகையன்று.

தாய்மை என்பது பெண்களுக்குரிய பெரும்பேறு. ஒரு குழந்தையின் வளர்ச்சியில் தாய்ப்பால் அருந்தும் பருவம் மிக்க சிறப்பானது. ஆகவே, நீங்கள் காய்கறிகள், பழம், பால், முட்டை போன்ற சத்துணவுகளை உள்கொண்டு உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட நேரத்தில் குழந்தைக்குப் பால் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது சிறப்பானதாகும். பால் கொடுக்கும்போது மகிழ்ச்சியோடும், கடமையுணர்வோடும் கொடுங்கள். குழந்தைக்குக் காப்பி, தேநீர், மசாலை கலந்த பானங்கள் போன்றவற்றைக் கொடுக்கா தீர்கள். தாய்ப்பால் இல்லையென்றால் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின், புட்டிப்பால் கொடுக்க ஆரம்பியுங்கள்.

குழந்தைக்கு, ஒரு தாய் செய்யும் பணிகளில் தாய்ப்பால் கொடுப்பதை விட பெரிய பணி வேறு ஒன்றுமில்லை. அப்பணியைச் சிறப்பாகச் செய்வதன் மூலம் நீங்கள் உங்கள் குழந்தையின் ஆரோக்கிய வாழ்க்கைக்குச் சிறப்பான அடித்தளம் அளித்தவர்களாவீர்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *